ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரத்தை செப்டம்பர் 19 வரை நீதிமன்ற காவலில் திகார் சிறையில் அடைக்க டெல்லி சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.
ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரத்தை நீதிமன்றக் காவலில் வைக்க டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் சிபிஐ கோரிக்கை மனு அளித்தது.
ப.சிதம்பரத்தை 15 நாட்கள் நீதிமன்றக்காவலுக்கு அனுப்புங்கள் என்றும் வழக்கு குறித்த தகவல்கள் சிங்கப்பூர், சுவிட்சர்லாந்து உள்ளிட்ட நாடுகளில் உள்ளது என்றும் சிபிஐ வழக்கறிஞர் துஷார் மேத்தா வாதிட்டார்.
ஜாமீன் கோரி வாதிடவில்லை, ப.சிதம்பரத்தை விடுவிக்கக் கோரி வாதிடுகிறேன் என கபில் சிபல் தெரிவித்தார்.
சிபிஐயைப் பொருத்தவரை நான் (ப. சிதம்பரம்) ஏன் நீதிமன்றக் காவலுக்கு அனுப்பப்பட வேண்டும்? அவர்கள் எல்லா கேள்விகளையும் கேட்டிருக்கிறார்கள். நான் அமலாக்கத்துறையின் காவலுக்கு செல்ல தயாராக இருக்கிறேன். என்னை நீதிமன்றக் காவலுக்கு அனுப்பக்கூடாது. எனக்கு எதிராக ஆதாரங்கள் எதுவும் இல்லாத நிலையில் எந்த ஆதாரத்தை கலைக்கப் போகிறேன்? என ப சிதம்பரம் தரப்பில் வாதிடப்பட்டது.
இருதரப்பு வாதங்களை கேட்ட டெல்லி சிறப்பு நீதிமன்ற நீதிபதி அஜய்குமார் ப.சிதம்பரத்தை செப்டம்பர் 19 வரை நீதிமன்ற காவலில் திகார் சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.
நீதிமன்ற காவலில் சிதம்பரத்துக்கு உரிய பாதுகாப்பு அளிக்கப்படும் எனவும் நீதிபதி துஷார் மேத்தா கூறினார்.