அலரி மாளிகையில் இன்று முற்பகல், ஐக்கிய தேசிய முன்னணியின் சிரேஷ்ட உறுப்பினர்களுடனான சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார் என தெரிவிக்கப்படுகிறது.
இந்த கூட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கியஸ்தர்களான மங்கள சமரவீர மற்றும் சஜித் பிரேமதாச ஆகியோர் கலந்து கொள்ளவில்லை எனக் கூறப்படுகிறது.
இவர்களை தவிர அழைப்பு விடுக்கப்பட்ட ஏனைய அனைவரும் கூட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர்.
இவர்கள் மத்தியில் உரையாற்றிய பிரதமர் “ வேட்பாளராக போட்டியிட எவரும் முட்டி மோதிக் கொள்ள அவசியமில்லை.
நான் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவேன். போட்டியிட்டு நான் வெற்றி பெற்று காட்டுகிறேன்” எனக் கூறியுள்ளார்.
பிரதமரின் இந்த அறிவிப்பை அடுத்து, சஜித் அணியை சேர்ந்த மலிக் சமரவிக்ரம மற்றும் கபீர் ஹாசிம் ஆகியோர் உடனடியாக தமது எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.
“அது எப்படி?. நாங்கள் குருணாகலில் நேற்றும் ஒரு கூட்டத்தை நடத்தினோம், பெருந்தொகையான மக்கள் வந்திருந்தனர்.
மக்கள் அவரையே கோருகின்றனர். இதனால், இது அநீதியானது” என இருவரும் சஜித் பிரேமதாச சார்பில் கூறியுள்ளனர்.
இதற்கு பதிலளித்துள்ள பிரதமர், “கூட்டங்களுக்கு மக்கள் வருவார்கள். ஐக்கிய தேசியக் கட்சியின் கூட்டத்திற்கு எப்படியும் மக்கள் வருவார்கள். அடுத்த வாரத்தில் இருந்து நானும் கூட்டங்களை நடத்த ஆரம்பிக்க போகிறேன்.
அந்த கூட்டங்களுக்கு இதனை விட கூட்டத்தை வரவழைத்து காட்டுகிறேன. கட்சியின் ஐக்கியத்தை பாதுகாப்பதே அடிப்படையானது.
தனிநபர்களை உயர்த்தி பிடிக் வேண்டாம். கட்சியை குழுக்களாக பிரிக்க வேண்டாம். இது எமது வெற்றிக்கு தடையாக இருக்கும்.
இவற்றை தீர்க்க முடியாது என்றால், நானே போட்டியிட நேரிடும். நான் போட்டியிடுவேன். எவருடனும் போட்டியிட தயார். நான் வெற்றி பெறுவேன்”. என பதிலளித்ததாக தென்னிலங்கை அரசியல் வட்டாரங்களில் தகவல்கள் வெளியாகியிருந்தன.
இரண்டாம் இணைப்பு..
இந்நிலையில் தென்னிலங்கை சிங்கள சமூக ஊடகங்களில் பரப்பப்பட்டு வருவதை போல் "தானே ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட வேண்டும்" என்று ரணில் விக்கிரமசிங்க தெரிவிக்கவில்லை என மலிக் சமரவிக்கிரம சற்று முன் தன்னிடம் தெரிவித்ததாக அமைச்சர் மனோகணேசன் தனது முகநூல் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய தேசிய கட்சியின் சிரேஷ்ட பிரமுகர்களை இன்று சந்தித்த ரணில், கட்சி உடையக்கூடாது என்பதையே பிரதானமாக வலியுறுத்தியதாக மலிக் தெரிவித்ததாக கூறியிருந்தார்.
இன்றைய சந்திப்பின் இறுதியில் வரும் ஞாயிறு இரவு ரணில்-சஜித் நேருக்கு நேர் சந்தித்து பேசி கட்சியின் இறுதி நிலைப்பாட்டை தீர்மானித்து, அதையடுத்து பங்காளி கட்சி தலைவர்களுடன் பேசுவோம் என தீர்மானிக்கப்பட்டதாகவும் அமைச்சர் தனது முகநூல் பக்கத்தில் மேலும் தகவல் வெளியிட்டுள்ளார்.
இதனையடுத்து ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் யார்தான் என மக்கள் மத்தியில் மீண்டும் குழப்ப நிலை ஏற்பட்டுள்ளது