களத்தில் இருந்து புலத்திற்கு மாற்றப்பட்ட போராட்டம் மீண்டும் களத்தில் கருக்கொள்ளும் அதிசயம் யாரும் எதிர்பார்த்திராத வகையில் மாவீரர்தின எழுச்சி நிகழ்வுகளினூடாக அரங்கேறியுள்ள இந்த நேரத்தில் அந்த பேரதிசயத்திற்கு காரணமான யாழ்.பல்கலைக்கழக
மாணவர்கள் மீது சிங்கள கொலைவெறியரசு தனது பேரினவாத பேயாட்டத்தை கட்டவிழ்த்து விட்டுள்ளது.

சர்வதேச நெருக்கடிகள் குழுவின் அறிக்கையில் முன்மொழியப்பட்ட பரிந்துரைகளில் ஒன்றான ..போரில் பலியான தமிழீழ விடுதலைப் புலிகள் மற்றும் அவர்களுடன் தொடர்புடையவர்கள் நினைவாக அவர்களின் குடும்பங்களால் மேற்கொள்ளப்படும் அனுதாப நினைவு நிகழ்வுகளுக்கு அனுமதி வழங்கப்பட வேண்டும் என்ற பரிந்துரை மிகவும் முக்கியமானதாகும்.

இதுவரை உலக நாடுகள் எமது விடுதலைப் போராட்டத்தை பயங்கரவாதமாகவும் அதனை முன்னெடுத்துவந்த தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களையும் அவர்களது வழிநடத்தலில் களமாடிவரும் புலிகள் படையையும் பயங்கரவாதியாகவும் பயங்கரவாத இயக்கமாகவும் முத்திரை குத்திவந்த நிலையில் தமிழீழ விடுதலைப் போராட்டக் களத்தில் எதிர்நின்ற சிங்களப்படைகளிற்கும் துணைநின்ற அன்நியப் படைகளிற்கும் எதிராக களமாடி வீரச்சாவினை அடைந்த மாவீரர்களது தியாகத்தை ஏற்று அங்கீகரிக்க உலகம் முன்வந்துள்ளது.

மாவீரர்களது நினைவைப் போற்ற தமிழர்களிற்கு உரிமை உள்ளது என்றால் அந்த தியாகத்தின் அடிப்படையான சுதந்திர தமிழீழம் நோக்கிய எமது விடுதலைப் போராட்டமும் சர்வதேசத்தால் தற்போது மறைமுகமாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாகவே கொள்ளலாம்.

இந்த புறச்சூழலில் யாழ் பல்கலைக்கழகம் உள்ளிட்ட தாயக மண்ணில் இம்முறை எழுச்சியுடன் கடைப்பிடிக்கப்பட்டுள்ள மாவீரர் நினைவெழுச்சி நிகழ்வானது களத்திலே நாங்கள் இருக்கின்றோம். முற்றிலுமாக எமது உணர்வுகள் செத்துப்போய்விடவில்லை. புலத்தில் நடக்கும் அரசியல் போராட்டத்திற்கு இணையாக களத்தில் நாம் கருக்கொள்வோம் என பறைசாற்றியுள்ளது.

இந்த எழுச்சியை சற்றும் எதிர்பார்திருக்காத சிங்கள பேரினவாத அரசு தனது இரும்புக்கரங்களை கொண்டு யாழ்.பல்கலைக்கழகத்தில் பேயாட்டம் ஆடிவருகின்றது. குறித்த நேரத்தில் மாவீரர்களிற்கு அஞ்சலி செலுத்தாமல் தடுப்பதற்காக இராணுவம் காவல்துறை புலனாய்வுத்துறை ஒட்டுக்குழுக்கள் என சிங்களம் அதியுச்ச பலத்தை வெளிப்படுத்தியதையும் அதன்பின்னர் மாணவர்கள் மேற்கொண்ட அமைதிவழிப் போராட்டத்தை கலைக்க கையாண்ட வழிமுறைகளையும் யாவரும் அறிவோம்.

மீண்டும் ஒருதடவை போராட்டத்திற்கான விதை யாழ்.பல்கலைக்கழகத்தில் விதைக்கப்பட்டு உணர்வூட்டி வளர்க்கப்படுவதை சகித்துக் கொள்ளமுடியாத சிங்கள அரசு முன்னணியில் நின்று நிகழ்வு ஒழுங்குகளை மேற்கொண்ட மாணவர்கள் நால்வரை பொய்குற்றச்சாட்டில் கைது செய்திருந்தது.

இந்த நிகழ்வுகளை அமெரிக்கா உள்ளிட்ட சில நாடுகளும் சர்வதேச அமைப்புகளும் கண்டித்துள்ள நிலையில் தற்போது கைது செய்யப்பட்ட நால்வரில் இருவரை கொழும்பிற்கு மேல்விசாரணை என்ற பெயரில் சிறிலங்கா புலனாய்வுத் துறையினர் அழைத்துச் சென்றுள்ளார்கள்.

இந்த நிகழ்வானது வெறுமனே சாதாரண நிகழ்வாக கருதி வெற்று அறிக்கைகளுடன் கடந்து போய்விட முடியாது. அனைத்துலக அரங்கில் இந்த சிறிலங்கா அரசின் அத்துமீறலை ஆயுதமாக எடுத்து போராடவேண்டும்.

மாவீரர்நாள் நிகழ்வுகளுடன் சம்பந்தப்பட்ட இந்த மாணவர்களிற்கு ஏற்படுத்தப்படும் நெருக்கடிகள் அச்சுறுத்தல்கள் மூலம் மீண்டும் துணிவுடன் களத்திலே கருக்கொள்ளும் போராட்ட உணர்வை முளையிலையே கிள்ளி எறிந்துவிடலாம் என கருதியே சிங்கள அரசு இத்தனை அநியாயங்களை செய்துவருகின்றது.

இதனை நாம் ஒருபோதும் விட்டுவிட்டு வேடிக்கை பார்க்க முடியாது. முள்ளிவாய்க்கால் கொலைக்களம் நோக்கி எமது தமிழ் உறவுகளை ஆக்கிரமித்து நின்ற சிங்களப்படைகளாலும் துணைநின்ற பன்னாட்டுப்படைகளாலும் வலிந்து கொண்டு செல்லப்பட்ட போது ஏற்படாத ஏற்படவில்லையே என குமுறிய அந்த கொதிநிலை மீண்டும் தாயத்தில் கருக்கொண்டுள்ள இந்த தருணத்தில் அதனை சிங்களத்தின் அடக்குமுறைக்குள் நீர்த்துப்போய்விட நாம் அனுமதிக்க முடியாது.

சிங்களத்தின் இரும்புக் கரங்களிற்குள் இருந்த போதிலும் துணிந்து தமது உணர்வுகளை வெளிப்படுத்திய மக்களின் சார்பாக நான்கு மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்கள். இந்த நேரத்தில்தான் நாம் அவர்களிற்கு நம்பிக்கையளிக்கும் விதத்தில் போராட்டங்களை முன்னெடுக்க வேண்டியது அவசியமாகும்.

யாழ்.பல்கலைக்கழக மாணவர்களது கைது தொடர்பாக புலத்தில் உள்ள அமைப்புகள் இயக்கங்கள் பேரவைகள் போன்றவை வரிசையாக தமது கண்டனங்களை அறிக்கைகள் மூலம் வெளிப்படுத்தி வருகின்றார்கள். இந்த அறிக்கையானது வெறுமனே தமிழ் இணைய பக்கங்களில் நிறைந்து வழிவதைத்தவிர வேறு எந்த விளைவுகளையும் ஏற்படுத்தப் போவதில்லை என்பதுதான் உண்மையாகும்.

ஒவ்வொரு நாடுகளிலும் உள்ள சிறிலங்காத் தூதரங்களையும் அமெரிக்கா தூதரகங்களையும் ஐ.நா.சபை மற்றும் சர்வதேச மனிதஉரிமைகள் தொடர்பான அமைப்புகளின் அலுவலகங்களையும் முற்றுகையிட்டு எமது உறவுகளிற்காக நியாயம் கேட்பதை விட்டுவிட்டு வெறுமனே அறிக்கைகளை வெளியிட்டால் போதாது. உடனடியாக உங்கள் உங்களது நாடுகளில் முற்றுகைப் போராட்டங்களை தொடங்குமாறு ஈழதேசம் இணையம் அன்போடும் உரிமையோடும் கேட்டுநிற்கின்றது.

தமிழர்கள் வாழும் நாடுகள் அனைத்திலும் உடனடியாக இந்த ஆர்ப்பாட்ட நிகழ்வுகளை முன்னெடுத்து சர்வதேச நாடுகளிற்கு நெருக்கடிகளை கொடுப்போம். அதன் மூலமாக சிறிலங்கா அரசிற்கான சர்வதேச அழுத்தத்தை உருவாக்கி கைதாகியுள்ள எமது உறவுகளின் விடுதலைக்கு வழிசமைப்போம்.

மாவீரர்நாள் நிகழ்வுகளை மட்டும் முன்னெடுத்தால் போதும் என நினைக்கும் குழுக்களும் அடுத்த நவம்பர் 27வரை காத்திருக்காது சிங்களத்தின் கொடுங்கரங்களிற்குள் சிக்குண்டுள்ள எமது உறவுகளை மீட்கும் போராட்டங்களை நடத்துங்கள். இல்லை என்றால் மற்றவர்கள் ஏற்பாடுசெய்யும் போராட்டங்களில் உங்களை இணைத்துக் கொண்டு களமாடுங்கள்.

“தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்”

ஈழதேசம் இணையத்தள ஆய்வாளர் :- ம.செந்தமிழ் (01-12-2012)