புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

5 ஜன., 2013


ஜனாதிபதியின் மகன் நாமல் ராஜபக்ஷவை பிரதம நீதியரசராக நியமித்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லையென தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் தெரிவித்தார்.
திவிநெகும சட்டமூலத்திற்கு ஆதரவு வழங்குமாறு கோரி இலங்கை சுதந்திர சமுர்த்தி முகாமையாளர்கள், இணைப்பாளர்கள் சங்கம் மற்றும் அகில இலங்கை சமுர்த்தி அபிவிருத்தி, விவசாய ஆராய்ச்சி உதவி உத்தியோகத்தர்கள் சங்கம் ஆகியவற்றின் பிரதிநிதிகள் நாடாளுமன்ற உறுப்பினர்
யோகேஸ்வரனை நேற்று வியாழக்கிழமை மட்டக்களப்பில் வைத்து சந்தித்து உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,
'இன்று இந்த நாட்டில் ஜனநாயகமில்லை. நாட்டில் எதை எடுத்துக்கொண்டாலும் ஜனாதிபதியும் அவரின் குடும்பமுமே ஆட்சி செய்கின்றனர். இந்த நாட்டின் பொருளாதாரத்திற்கு பொறுப்பாக ஜனாதிபதியின் சகோதரர் இருக்கின்றார்.
கடந்த கிழக்கு மாகாண சபை தேர்தலில் போது 500 மில்லியன் ரூபா பணம் அமைச்சர் பசில் ராஜபக்ஷவினால் முன்னாள் முதலமைச்சர் சந்திரகாந்தனுக்கு வழங்கப்பட்டது. இவ்வாறு அவர்கள் விரும்பியவாறெல்லாம் நிதிகளை கையாள்கின்றனர்.
இதேபோன்றுதான் இன்று நீதித்துறையையும் அவர்களின் கைவசமாக்குவதற்கு முயற்சிக்கின்றனர். தமது நடவடிக்கைகளுக்கு பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்க ஆதரவு வழங்கவில்லை என்பதற்காக அவரின் பதவியை பறிக்க முற்படுகின்றனர்.
யுத்தம் முடிவுக்க வந்த பின்னர் மக்களின் மனங்களை வெல்வதற்கு இந்த அரசாங்கம் எந்த முயற்சியையும் மேற்கொள்ளவில்லை.
தமிழ் தேசியக் கூட்டமைப்பானது சமுர்த்தி உத்தியோகத்தர்களுக்கு நிரந்தர ஓய்வூதியம் கிடைப்பதை வரவேற்கின்றது. ஆனால் திவிநெகும சட்ட மூலமானது மாகாண சபைக்கு கிடைக்கும் அதிகாரங்களை இல்லாமல் செய்யும் நடவடிக்கையாகும்.
இதனாலேயே நாங்கள் அந்த திட்டத்தினை எதிர்க்கின்றோம். மாறாக சமுர்த்தி உத்தியோகத்தர்களுக்கு நிரந்தர ஓய்வூதியம் கிடைப்பதையோ அல்லது சமுர்த்தி உத்தியோகத்தர்களின் தொழில் நிரந்தரமாக்கப்படுவதையோ நாங்கள் ஒரு போதும் எதிர்க்கவில்லை.
நானும் 1997ஆம் ஆண்டு சமுர்த்தி உத்தியோகத்தராக இருந்தவன். எனக்கும் இந்த சமுர்த்தி திட்டம் பற்றி நன்கு தெரியும். அந்த வகையில் யாராக இருந்தாலும் சமுர்த்தி உத்தியோகத்தர்களது நலன்கள் பாதுகாக்கப்படல் வேண்டும். அவர்கள் நிரந்தர ஓய்வூதியத்திற்குள் வரவேண்டும். அதை நாங்கள் எதிர்க்கவில்லை. ஆனால் இந்த திவிநெகும சட்ட மூலத்தை எதிர்க்கின்றோம்' என அவர் இதன் போது மேலும் தெரிவித்தார்.

ad

ad