புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

15 மார்., 2013

புலம்பெயர்ந்த ஈழச்சகோதரன் எழுதிய மடல்
என் அன்பான தமிழக மாணவருக்கு வணக்கம்,

உங்களுக்கு இருக்கும் வேலைப்பளுவின் மத்தியில் இதைப்படிப்பதற்கு உங்களுக்கு நிச்சயம் நேரம் இருக்காது, ஆனாலும் ஒரே ஒரு நிமிடம் ஒதுக்குங்கள்,



இங்கே பனிவிழும் நாடு ஒன்றில் எலும்பு கூட விறைத்துப் போகும் குளிரில் இருந்து கூடுகலைந்திட்ட ஓர் ஈழத்தமிழன் நான். 

உயிர் பிழைத்தால் மட்டும் என்று , அந்த உயிரைப் பக்குமாய் எடுத்தபடி என் தேசத்தில் இருந்து ஓடிவந்த ஏராளம் அகதிகளில் நானும் ஒருவன்

மீண்டும் ஊர் திரும்ப வேண்டும் என் மண்ணில் புரண்டு அழ வேண்டும் , உறவுகளோடு ஒன்றாய் வாழ வேண்டும் என்று ஆயிரம் கனவுகளைச் சுமந்து வாழ்ந்திட்ட ஆயிரக்கணக்காண‌வரில் நானும் ஒருவன்

அன்று எம்மண்ணில் யுத்தம் இருந்தாலும், எமக்கு விடிவு வரும் என்ற நம்பிக்கை இருந்தது, என்றாவது எம் இனத்துக்கான ஒரு நாட்டை அமைத்திடுவோம் என்ற கனவு மட்டுமே எல்லோரிடத்திலும் வேரூண்டிப் போய் இருந்தது

கண்ணீரில் கரைவதே வாழ்வென‌
எவெரெழுதினார் எம் தலையில்

தமிழீழம் எமக்காய் மட்டுமல்ல, உமக்காயும் தான் உறவுகளே, அது தமிழனின் தேசிய வீடு

ஆனாலும் எல்லாக் கனவுகளும் அப்படியே சிதைந்தே போயின‌

ஏதும் இல்லாமல் இறுதில் ஆரம்பித்த இடத்திலேயே வந்து நிற்கின்றோம்

2009 என் உறவுகள் அங்கே துடித்து இறந்து கொண்டிருக்கையில் , எதையாவது செய்ய வேண்டும் என்று இங்கே வீதி வீதியாக அலைந்தவர்களில் நானும் ஒருவன்

அப்போது என்னிடம் ஆயிரம் கேள்விகள் இருந்தன‌

எமக்கு இரத்தமும் சதையும் பிய்ந்து தொங்கும் போது
எப்படி என் உறவுகள் ஐ பி எல் விளையாட்டையும்
மானாட மயிலாட நிகழ்ச்சியையும் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்
ஐயோ என்று வன்னியில் அவர் உறவு கத்துவது எப்படி அவருக்கு கேட்காமல் இருக்கிறது

இவர்கள் நகர வாழ்க்கை என்னும் நரக வாழ்க்கைக்குள் சிக்கடிக்கப்பட்டவராய் மாறிவிட்டார்களே என்று ஆயிரம் கவலைகள் எங்களிடத்தில்

கடைசி வரையிலும் நீங்கள் பேசவே இல்லை, அத்துடனே எதுவுமே அற்ற சூனியமாய்ப் போனது எங்கள் வாழ்க்கை,

தகர்ந்து போன கனவுகளுடனும்
அழிந்து போன தேசத்துடனும்
இன்னமும் நாம் அனாதையாகவே ஆக்கப்பட்டோம்

அத்துடன் உங்கள் மீதான எம் நம்பிக்கை இல்லாமலே போனது

ஈழத்தமிழனுக்கு சிங்களவனால் அழிவு வரும் போதெல்லாம் மாதோட்டத்தில்(இன்றைய மன்னார் ) வந்து இறங்கும் தமிழக படை
கூப்பிட்ட கூக்குரலுக்கு வரும் கிருஸ்ண பராமாத்மாவாய் நீங்களே எமக்கு இருந்து வந்திருக்கிறீர்கள்
ஆனாலும் கடைசியாய் எமக்கு எதுவும் கிடைக்கவில்லை

உங்கள் மீதான நம்பிக்கையும் அத்துடனே கலைந்தே போனது

,
இன்று

என்ன சொல்வதென்று தெரியவில்லை
இது கனவா இல்லை நனவா என்று கூட தெரியவில்லை

தூக்கத்தில் எழுந்து அதிசயத்தை பார்ப்பதை போல் இருக்கிறது எமக்கு

எமக்காயும் போராடுவதற்கு , எமக்காயும் கண்ணீர் விடுவதற்கு, எமக்காயும் ஒரு கணம் கவலைப்படுவதற்கு, எமக்காயும் உண்ணாமல் உடம்பை வருத்துவதற்கு
எமக்கு உறவுகள் இருக்கின்றன‌

எப்படி இருக்கிறது தெரியுமா எங்களுக்கு

இந்த உணர்ச்சியை எங்களால் பிரதிபலிக்க முடியாது உறவுகளே

பேசாமல் இருந்த ஊமை பிள்ளைக்கு பேச்சு வந்தால் எப்படி இருக்குமோ அப்படி இருக்கிறது

உங்களை எல்லாம் கட்டி பிடித்து கண்ணீர் சொரிய வேண்டும் போல் இருக்கிறது

உங்களை விட்டால் எங்களுக்கு எவருமே இல்லை

எங்களுக்கு மீண்டும் நம்பிக்கை துளிர்க்கிறதது
எல்லாமும் உங்களால் தான் முடியப் போகிறது

என் அன்பான உறவுகளே

உங்களை விட்டால் இந்த ஈழத்தமிழருக்கு வேறு உறவுகள் இல்லை

நாம் போய் இன்னோர் இடத்திலும் நிற்கப் போவதில்லை

எம்மை வழி நடத்தும் அந்த கரிகாலன் இது நாள் வரையிலும் அப்படியே எமக்கு சொல்லி கொடுத்துள்ளான்

நாம் யாரிடத்திலும் போய் நிற்க மாட்டோம்

உம்மிடத்தில் மட்டுமே கேட்போம்
அது எம் உரிமை

ஒரு தந்தையிடம் பிள்ளைக்கிருக்கும் உரிமை

கடைசி வரையிலும் நீங்கள் தள‌ர்ந்து விடாதீர்கள்

ஏன் என்றால் எங்களின் கனவுகளின் கடைசி நம்பிக்கை நீங்கள் மட்டும் தான்

இப்படிக்கு அகீபன்(ஈழத்தமிழன்)

ad

ad