12 செப்., 2013

இராமேஸ்வரத்தில் இருந்து இலங்கைக்கு வெடிமருந்து, போதை பொருள் கடத்திய வழக்கில் 16 கடத்தல்காரர்களின் நடமாட்டம் குறித்து இந்திய உளவுப்பிரிவு பொலிசார் விசாரித்து  வருவதாக இந்திய ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இது குறித்து அச்செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
இலங்கையில் போர் தீவிரமாக நடந்தபோது தமிழகத்தில் இருந்து
குறிப்பாக இராமேஸ்வரம், தனுஷ்கோடி, பாம்பன், மண்டபத்தில் இருந்து விடுதலை புலிகளுக்கு வெடிமருந்து, உயிர்காக்கும் மருந்து மற்றும் வியாபாரிகளுக்கு கஞ்சா, பிரவுன் சுகர் ஆகியவை, இலங்கைக்கு கடத்தப்பட்டது.
இது தொடர்பாக, 2000 தொடக்கம் 13ஆம் ஆண்டு வரை, ராமேஸ்வரத்தில் சில கடத்தல்காரர்கள் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனர்.
சிலர் பிணையில் வெளிவந்துள்ளனர். சிலர் விடுதலையாகி உள்ளனர்.
இவர்கள் உள்ளூர் மீனவர்களிடம் பணம் தருவதாக கூறி, மீண்டும் கடத்தல் தொழிலை தொடர்கின்றனர்.
இவர்களால் கடல்வழி பாதுகாப்பில், சிக்கல் எழுந்துள்ளது. தற்போது, கடல்வழியாக பயங்கரவாதிகள் ஊடுருவல் எச்சரிக்கையால், தமிழக கடலோரத்தில் பொலிசார் உஷார்படுத்தப்பட்டுள்ள நிலையில், கூடுதலாக கடத்தல்காரர்கள் நடமாட்டம் மாநில உளவுப்பிரிவுக்கு பெரும் தலைவலியை ஏற்படுத்தி உள்ளது.
ராமேஸ்வரத்தில் இருந்து இலங்கைக்கு, வெடிமருந்து, போதை பொருட்கள் கடத்திய வழக்கில், தொடர்புடைய, 16 கடத்தல்காரர்களின் செயல்பாடு யார் யாருடன் தொடர்பு, அவர்கள் மீதான நிலுவை வழக்கின் தன்மை குறித்து விசாரித்து உயரதிகாரிகளுக்கு அறிக்கை அனுப்பி உள்ளனர்.