12 செப்., 2013
          ""ஹலோ தலைவரே...… … ராகுல்காந்தியும் கனிமொழியும் சந்தித்தது பற்றி நம்ம நக்கீரனில் டீடெய்லா எழுதியிருந்ததைப் படிச்சிருப்பீங்க..''

""படிச்சேம்ப்பா.. தி.மு.க-காங்கிரஸ்-தே.மு.தி.க கூட்டணிக்கான முயற்சிகளையும் அதற்காக ஆ.ராசாவை கழற்றிவிடப் போவதா டெல்லி வட்டாரத்தில் ஒலிக்கும் பேச்சுகளையும் விரிவா எழுதியிருந்ததே நம்ம நக்கீரன். கலைஞர்கூட இது சம்பந்தமா பேட்டி கொடுத்திருந்தாரே..
நீ கவனிச்சியா?''நக்கீரன் 

""ஆமாங்க தலைவரே.. ராகுலும் கனிமொழியும் சந்தித்துப் பேசியதா வந்த செய்தியில் உண்மையில்லைன்னும் கனிமொழி, ராகுல்காந்தியை சந்தித்து, கூட்டணி பற்றிய அரசியல் பேசவே யில்லைன்னும் கலைஞர் சொன்னதோடு, ஆ.ராசாவை பலிகடாவாக்க முயற்சி நடப்பதாக கேட்கப்பட்ட கேள்விக்கு, நாங்கள் யாரையும் பலிகடாவாக ஆக்கமாட்டோம். ராசாவை பலிகடாவாக்க யார் முயன்றாலும் அதற்கு இடம்தரமாட்டோம்னும் பதில் சொல்லியிருந்தாரு. ஆனா, டெல்லியில் தி.மு.க. எம்.பி.க்கள் இன்னமும் இந்த சந்திப்பு விஷயமாகத்தான் மீடியாக்கள்கிட்டே பேசிக்கிட்டிருக்காங்க.'' 

""சொத்துக் குவிப்பு வழக்கில் அரசு வக்கீல் பவானி சிங் நீக்கத்தை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் ஜெ. தொடர்ந்த வழக்கில், அந்த உத்தரவை திரும்பப் பெற்றுக்கொள்வதா கர்நாடக அரசு அறிவித்திருக்குதே.. இதனால் யாருக்கு வெற்றி?''

""உத்தரவை கர்நாடக அரசு திரும்பப் பெற்றதுன்னு பத்திரிகைகளில் பேனர் நியூஸ் வந்தாலும், உள்ளே டீடெய்லா பல செய்திகளைப் போட்டிருந்தாங்க. பவானிசிங் நீக்கத்திற்கான ஆவணங்களை கோர்ட்டில் கர்நாடக அரசு சமர்ப்பிக்கணும்னு பி.எஸ்.சவுகான் தலைமையிலான சுப்ரீம் கோர்ட் பெஞ்ச் உத்தர விட்டிருந்ததால், அது சம்பந்தமான ஃபைல்களை கர்நாடக தரப்பில் ஆஜரான அட்டர்னி ஜெனரல் வாகன்வதி, முன்னாள் அரசு வக்கீல் ஆச்சார்யாவோட ராஜினாமா கடிதத்தை கர்நாடக ஹைகோர்ட் டின் பொறுப்பு தலைமை நீதிபதி ஏற்றுக்கொண்டதும், அதே நாளில் 4 வக்கீல்கள் கொண்ட லிஸ்ட்டை அந்த நீதிபதிக்கு அனுப்பி அதி லிருந்து ஒருவரைத் தேர்ந்தெடுக்கும்படி அரசு கேட்டுக்கொண்டதை யும், ஆனால், பொறுப்புத் தலைமை நீதிபதியால் அரசு வக்கீலாக நியமிக்கப்பட்ட பவானிசிங், இந்த லிஸ்ட்டிலேயே இல்லாதவர்னும் தெளிவா சொல்லி, பவானிசிங் நீக்க உத்தரவை திரும்பப் பெற்றுக் கொண்டு, புது அரசு வக்கீலை நியமிக்கிறோம்னு சொன்னது. நீக்க உத்தரவை திரும்பப் பெற்று, புது அரசு வக்கீலுக்கான  லிஸ்ட்டை கர்நாடக ஹைகோர்ட்டில் சமர்ப்பிக்கணும்னு சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது.''

""புது அரசு வக்கீல் நியமனம்னா அது ஜெ. வுக்கு நெருக்கடிதானே?''

""மூன்றாவது அணி பற்றி பேசவந்த சி.பி.எம் பிரகாஷ்காரத்கிட்டே, தன்னை பிரதமர் வேட் பாளரா அறிவிக்கணும்னு ஜெ. வலியுறுத்தியதை ஏற்கனவே நாம பேசியிருந் தோம். அவரை அறி விப்பதற்கு சட்டரீதியான நெருக்கடியா இருப்பது இந்த சொத்துக் குவிப்பு வழக்குதான். அது செப்டம் பர் 30-ந் தேதிக்குள் முடிந்து, தனக்கு சாதகமான தீர்ப்பு வரும்னு ஜெ. ரொம்பவும் நம்பிக்கை யோடு இருந்தார். சுப்ரீம் கோர்ட் உத்தரவால ஜெ. படு அப்செட்.''

""அப்படின்னா வழக்கு என்னவாகும்?''

""சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது, வெள்ளிக் கிழமையன்னைக்கு. மறுநாள் சனிக்கிழமை பெங்களூரு ஸ்பெஷல் கோர்ட்டுக்கு வந்த அரசு வக்கீல் பவானிசிங், ஸ்பெஷல் கோர்ட் நீதிபதி பாலகிருஷ்ணாகிட்டே, தான் தாக்கல் செய்த மனுக்கள் தொடர்பா காப்பி ஆஃப் அப்ளி கேஷன் போட்டார். அதாவது, அரசு தரப்பு தான் முதலில் வாதாடணும்னு கோரி, தான் பெட்டிஷன் போட்டதாகவும் ஆனா அதை நிகராரிச்சி குற்றம்சாட்டப்பட்டவர்கள் தரப்பை முதலில் வாதாட நீதிபதி பாலகிருஷ்ணா அனுமதிச்சிட்டதாகவும், தன்னோட வாதத்தை தயாரிக்க 12 நாட்கள் அவகாசம் வேண்டும்னு கேட்டதையும் நீதிபதி ஏற்கலைங்கறதும்தான் பவானிசிங்கின் நிலைப்பாடு. இதை  கர்நாடக ஹைகோர்ட்டின் புதிய தலைமை நீதிபதி வகேலாகிட்டே தெரிவிக்கத்தான், ஸ்பெஷல் கோர்ட்டில் காப்பி ஆஃப் அப்ளிகேஷன் போட்டிருக்காராம் பவானி சிங்.''

""கர்நாடக ஹைகோர்ட் புதிய நீதிபதி வகேலா தலைமையிலான ஒரு குழு இந்த விவகாரம் தொடர்பா ஆலோசிப்பதா ஏற்கனவே பேசியிருந் தோமே?''

""ஸ்பெஷல் கோர்ட் நீதிபதி பாலகிருஷ்ணா வரும் 30-ந்  தேதி ரிடையர்டாவதால, தலைமை நீதிபதி வகேலாவை சந்திச்சிருக்காரு. அப்ப வகேலாவும் அவரோடு உள்ள குழுவில் உள்ளவங்களும் நீதிபதி பாலகிருஷ்ணாவைப் பார்த்து, நீங்க ஓப்பன் கோர்ட்டிலேயே, பெரியவர் சீக்கிரமாக கேஸை முடிக்கச் சொல்றாரு. அதைகூடப் புரிஞ்சுக்காம குற்றஞ்சாட்டப் பட்ட தரப்பு வக்கீல்கள் டிஃபென்ஸ் சாட்சியங்களை கொண்டு வந்து நிறுத்துறாங்கன்னு சொன்னீங்களா? யார் அந்த பெரியவர்? பொறுப்புத் தலைமை நீதிபதியா இருந்த ஸ்ரீதர்ராவா?ன்னு கேட்டிருக்காங்க. புகார்களுக்குள்ளாகியிருக்கும் ஸ்பெஷல் கோர்ட் நீதிபதிக்கு எக்ஸ்டென்ஷன் கிடைக்க வாய்ப்பில்லைன்னு சொல்லும் சட்டத்துறையினர், புது  அரசு வக்கீல் நிய மனத்துக்காக 4 பேர் கொண்ட பேனலை ஹைகோர்ட் டுக்கு அரசு அனுப்பிவைக்கும், அந்த ஃபார்மாலிட்டிகள் முடிந்து, புது அரசு வக்கீல் நியமிக்கப்படும்போது, இப்ப உள்ள ஜட்ஜூம் ரிடையர்டாயிடுவாரு. அதனால புது ஜட்ஜ் நியமனமும் நடக்கும். அவங்க இரண்டுபேரும் கேஸை விசாரிக்க ரெடியாகணும்னா இன்னும் டயம் தேவைப்படும். ஜெ. நினைத்த மாதிரி  வழக்கு முடியாது. சொத்துக் குவிப்பு வழக்கு அடுத்த கட்டத்துக்கு நகருது. இப்ப முடிந்த ரவுண்டைப் பொறுத்தவரை தி.மு.க கடைசிகட்டத்தில் நடத்திய சட்டப்போராட்டத்தில் ஜெயிச்சிருக்குது.'' 

""அருப்புக்கோட்டை தொகுதி மக்கள் பெரியளவில் ஜெயிச்ச மனநிலையோடு, வைகைச்செல்வனின் பதவி நீக்கத்தை பட்டாசு வெடிச்சி கொண்டாடினாங்களாமே?''

""2011-ல் கே.கே.எஸ்.எஸ்.ஆரை எதிர்த்து வைகைச்செல்வன் நின்னப்ப, வாக்காளர்களுக்கு 3000 ரூபாய் மதிப்புள்ள டோக்கன்களைக் கொடுத் திருந்தார். தான்  ஜெயிச்சதும் இந்த டோக்கன் மதிப்புக் கான பொருட்களை வாங்கிக்கலாம்னும் சொல்லியிருந் தாரு. ஆனா, ஜெயிச்ச பிறகு மக்களுக்கு எதுவும் கிடைக்கலை. ஓட்டுப் போட்டவங்க கேட்டதுக்கும் பதில் இல்லை. அதுமட்டுமில்லீங்க தலை வரே.. ஒரு முறை கட்சிக்காரர் ஒருத்தர் தன்வீட்டில் இருந்த நல்ல நாய்க் குட்டி ஒன்றைக்காட்டி, இதை உங்க வீட்டுக்கு எடுத்துட்டுப்போய் வளர்க்கலாம்னு சொல்ல அதற்கு வைகைச்செல்வன், நம்ம வீட்டுலதான் பாதுகாப்புக்கு நாலைந்து போலீஸ் நாய் இருக்குதுல்ல, இது எதுக்குன்னு கமெண்ட் அடிச்சிருக்காரு.'' 

""மோசமான கமெண்ட்டா இருக்குதே!''

""ஆளுங்கட்சி எம்.எல்.ஏவோடு ஒரு ஸ்கூல் ஹெச்.எம் ஒரு முறை பார்க்க வந்தப்ப அவரையும் வைகைச் செல்வன் விட்டுவைக்கலை. "ஏன்யா ஹெட் மாஸ்டர்? நீ சி.இ.ஓ.கிட்டே பர்மிஷன் வாங்கிட்டு வந்தியா? இன்னைக்கு லீவா ஆன் டீயூட்டியா? இப்படி பார்க்க வந்துட்டு, மந்திரியோட விருந்து சாப்பிட்டேன்னு பீலா விட்டு சி.இ.ஓவையே மிரட்ட நினைக்கிறாயா'ன்னு ஏக வசனத்தில் எகிற, ஹெச்.எம் மும் அவரைக்கூட்டி வந்த எம்.எல்.ஏவும் மிரண்டு போயிருக்காங்க. நிகழ்ச்சி ஒன்றுக்குக் கூப்பிடுவதற்காக வந்த லைப்ரரியனும் இப்படித்தான் வாங்கிக் கட்டிக்கிட்டுப் போயிருக்காரு. ஆளுங்கட்சிக்காரங்க ஏதாவது வேலையா வைகைச்செல்வனைப் பார்க்க ணும்னா அவரோட உதவியாளர் வேல்முருகனுக்கு 1000 ரூபாய் தட்சணை வெட்டணும். அப்புறம், வைகைச் செல்வனைப் பார்க்குறப்ப அவருக்கு பத்தாயிரம் ரூபாய் வெட்டணும்.''

""பார்க்கிறதுக்கே பத்தாயிரமா?''

""அதனாலதான் அருப்புக்கோட்டை ஆளுங் கட்சிக்காரங்களும் பொதுமக்களும் வைகைச்செல்வன் கிட்டேயிருந்த மந்திரிப்பதவி பறிபோயிடிச்சின்னு தெரிஞ்சதும் பட்டாசு வெடிச்சிக் கொண்டாடியிருக்காங்க. இதற்கிடையில் வைகைச்செல்வன் பதவி பறிப்புக்கு நடிகை சினேகாவை சம்பந்தப்படுத்தி, ஃபேஸ்புக்கில் சிலர் கிளப்பிவிட, அதைப் பார்த்து டென்ஷனான சினேகாவின் கணவர் நடிகர் பிரசன்னா, "உங்க மோசமான மண்டைக்குள்ளே இருக்கிறதை யெல்லாம் ஃபேஸ்புக்கில் வெளியிடுவீங்களா?  இதுக்காக நான் உங்கள் மேலே கேஸ் போடுவேன். ஒரு கணவனா சினேகாவைப் பற்றி எனக்குத்    தெரியும்.  நீங்க சொல்றதை நிரூ பிக்க முடியுமா? நீங்க சொல்றது தப்புன்னு என்னால நிரூபிக்க முடியும். இந்த அசிங்கமான செய்தியை உடனே நீக்கிட்டு,         உரிய முறையில் மன்னிப்புக் கேட்கணும்னு எச்சரிக்கிறேன்'னு பாய்ஞ்சிட்டாரு.''

""இது வேறயா? எப்படியோ, வைகைச்செல்வனோடு அதிரடி நின்னுடிச்சேன்னு மற்ற மந்திரிகள் நிம்மதிப் பெருமூச்சு விடுறாங் களாம்ப்பா..''

""தலைவரே.. மற்ற மந்திரிகள் மீதான கண்காணிப்பு இன்னும் குறையலை. மந்திரி நத்தம் விஸ்வநாதன் தன்கிட்டே ஸ்பெஷல் பி.ஏ.வா இருந்த வெங்கட சாமியைக் கூப்பிட்டு, சி.எம். ஆபிஸிலிருந்து சொன்னதாச் சொல்லி அவரை வேலையி லிருந்து அனுப்பிட் டாரு. மந்திரியே  இதை  செய்துட்டு, சி.எம். ஆபீஸை காரணம் காட்டுறாருன்னு நினைச்ச வெங்கடசாமி, நத்தம் விஸ்வநாதனோட சொத்துகள் உள்பட பல புகார்களை அனுப்பி வச்சிருக்காராம். மதுரை யில் 400 கோடி ரூபாய் மதிப்பில் தயாராகும் கல்லூரி பில்டிங், உள்நாட்டு வெளிநாட்டு பிஸினஸ் விவகாரங்களெல்லாம் புகாரா போயிருக்குதாம்.'' 

""கார்டனின் அடுத்த டார்கெட் இவர் தானோ?''

""அது தெரியலீங்க தலைவரே.. .. ஆனா, இன்னொரு ஒரு முக்கியமான செய்தியை சொல்றேன்..கார்டனுக்கு அடிக்கடி ஒருத்தர் கிட்டேயிருந்து போன் வருதாம். "என்னை அனுமதிக்க மாட்டேன்னு சொல்றீங்க. முதலமைச்சருக்கு உடல்நிலை சரியில்லைன்னு சொல்றீங்க. எப்பவும் இப்படித்தான் சொல் வீங்களா? எல்லாம் அந்த சசிகலா பேச்சைக் கேட்டுக்கிட்டுத்தானே இப்படி  பண்ணுறீங்க. எவ்வளவு நாள் என்னை இப்படி பிரிச்சி வைப்பீங்க. எத்தனை நாளுக்கு ரத்த உறவுகளைக் கூட பேசவிடாம செய்யப்போறீங்க? இப்பவே நான் பேசுறதுக்கு கனெக்ஷன் கொடுக்கலைன்னா நான் என்ன செய்வேன்னு எனக்கே தெரியாது.. ஜாக்கிரதை' அப்படின்னு அந்த குரல் ஒலிக்குதாம்.''

""யாருப்பா அது அவ்வளவு தைரியமான ஆளு?''

""ஜெ.வின் அண்ணன் மகள் தீபாதான். கடந்த 20 நாளா இப்படித்தான் அடிக்கடி போன் செய்து பேசுறாராம். ஜெ. மாதிரியே அவரோட அண்ணன் ஜெயக்குமார் மகள் தீபாவும் கோபாவேசக்காரர். இது சம்பந்தமா தீபா வட்டாரத்தில் கேட்டப்ப, ஜெ. எதிர்க்கட்சியா இருந்தபோது தீபாவை அழைத்துப் பேசி அவரோட விருப்பத்தைப் புரிஞ்சிக்கிட்டு லண்டனில் ஜர்னலிசம் படிக்க வச்சார். சோ போன்ற பத்திரிகையாளர்கள்கிட்டே ட்ரெய்னிங் எடுக்க வைத்தார்.''

""ஆனாலும் தீபாவுக்கு கல்யாணம் நடந்தப்ப ஜெ. கலந்துக்கலையே?''

""நேரில் போகலைன்னாலும் திருமணச் செலவை கவனிச்சிக்கிட்டதோடு மணமக்களுக்கு புது ஃப்ளாட்டும் வாங்கிக் கொடுத்தாரு. தீபாவின் அம்மா விஜயலட்சுமி -அதாவது ஜெ.வின் அண்ணி இறந்துபோனப்பவும் ஜெ. போகலை. சாவதற்கு முன்னாடி விஜயலட்சுமி தன்னோட பிள்ளைகள்கிட்டே, எக்காரணம் கொண்டும் உங்க அத்தை ஜெ.வை நீங்க கோபப்படுத்துற மாதிரி நடந்துக்கக்கூடாதுன்னு சொல்லியிருக்கிறார். அதனாலதான் தீபா இத்தனை நாள் பொறுமையா இருந்தாராம். படிச்ச படிப்புக்கேற்றபடி பெரிய சேனல்களில் வேலை பார்க்கணும்ங்கிறது அவரோட ஆசை. அதற்காகத்தான் ஜெ.வைத் தொடர்பு கொள்ள முயற்சி பண்ணியிருக்காரு. கார்டனில் லைன் கொடுக்கலைன்னதும், இது சசிகலாவோட சதியாகத்தான் இருக்கும்ங்கிற கோபத்தில் தீபா சத்தம் போட்டிருக்காரு. இந்த விவகாரம் எப்ப ஜெ. கவனத்துக்குப் போகுதோ அப்பதான் ஒரு  முடிவு கிடைக்கும்னு தீபா தரப்பில் சொல்றாங்க.''

""என்னென்னவோ நடக்குது? கிரானைட் அதிபர் பி.ஆர்.பி. தன்னோட நிறுவனங்களுக்கு வைக்கப்பட்டிருக்கிற சீல்களை அகற்ற ணும்னு சுப்ரீம் கோர்ட் வரைக்கும் போயிருக்காரே?''

""ஒரு பக்கம் சட்டரீதியான முயற்சிகள் நடந்தாலும், அதிகாரிகள் துணை யோடு, சீல் வைக்கப்பட்ட அவரோட நிறுவனங்களுக்குள்ளே பி.ஆர்.பி. ஆட்களின் மூவ்மெண்ட் இருக்குன்னும், 3000 பேருக்கும் அதிக மானவங்க அங்கே இருக் காங்கன்னும் நீர்வள பாதுகாப்பு மற்றும் ஊழலுக்கு எதிரான இயக்கத்தின் தலைவர் மேலூர் சோமுங்கிறவர் குற்றஞ்சாட்டுறாரு. பி.ஆர்.பி தரப்பிடம் அதிகாரிகள் கைகட்டி நிற்கிறதாகவும், மந்திரிகளும் எம்.எல்.ஏக்களும் பழையபடி பி.ஆர்.பி. வட்டாரத்தில் வலம் வருவதாகவும் செய்திகள் வருது. இது பற்றியெல்லாம் மதுரை கலெக்டர் சுப்ரமணியன்கிட்டே கேட்டால், என்னோட நடவடிக்கைகள் தொடரும். அரசியல்வாதிகள் விளையாட்டுக்குள் நான் தலையிடமுடியாது. எனக்கு ஹானஸ்ட் சுப்ரமணியன்னு பேர் இருக்குதுன்னு சொல்றாரு. பி.ஆர்.பி தரப்போ, எல்லாம் நல்லபடியா முடிஞ்சிடிச்சின்னு தெம்பா சொல்லுது.''

""ஒரே கர்ரே முர்ரே செய்தியா இருக்குதே.. சந்தோசமான நியூஸ் சொல்லுப்பா..''""நாம் தமிழர் கட்சியோட தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கும் முன்னாள் சபாநாயகர் காளிமுத்து மகள் கயல்விழிக்கும் செப்டம்பர் 8-ந் தேதி சென்னையில் பழ.நெடுமாறன் தலைமையில் நடந்த திருமணத்தில் சரியான கூட்டம். வெளியூரிலிருந்து வைகோ வரவேண்டியிருந்ததால கொஞ்சம் காலதாமதமா வந்து சேர்ந்து வாழ்த்தினாரு. திருமாவளவனைப்    பேச அழைக்கும்போது, தம்பி போராளியை வாழ்த்த அண்ணன் போராளி வந்திருக்கிறார்னு சொல்ல, நாம் எல்லோருமே தம்பியின் போராளிகள்னு திருமா பேச ஒரே கைதட்டல். பா.ம.க.விலிருந்து பிரிந்து தமிழர் வாழ்வுரிமை கட்சியை நடத்தும் வேல்முருகனும், பா.ம.க முன்னாள் அமைச்சர் ஏ.கே.மூர்த்தியும் பக்கத்தில் உட்கார்ந்து பேச, பலரும் ஆச்சரியத்தோடு அதை ஃபோட்டோ எடுத்தாங்க. மூர்த்தி தவிர்க்க நினைச்சாலும், வேல்முருகன் அனுமதிக்க, இருவருமே போஸ் கொடுத்தாங்க. திருமண விழாவுக்கு எம்.நடராஜன் வந்ததையும் அவரோட காலில் விழுந்து மணமக்கள் ஆசி வாங்கியதையும் உளவுத்துறை நோட் பண்ணிக்கிடிச்சி. 9.30 மணியிலிருந்து வாழ்த்துகளைப் பெற ஆரம்பிச்ச சீமான், மதியம் 2.30 மணி வரை நின்றுகொண்டே இருந்தார். அந்தளவுக்கு ஏராளமானவங்க வந்திருந்தாங்க. விருந்து சாப்பிட்டவர்களின் எண் ணிக்கை 13ஆயிரம். சாப்பிட நேரமில்லாமல் அவசரமாகக் கிளம்பியவர்கள் 2000 பேர்.''

""பா.ஜ.க.வும் இல்லாமல் காங்கிரசும் இல்லாமல் மூன்றாவது அணி அமைக்க ணும்னு நினைக்கிற இடது சாரிகளின் முயற்சி எந்தளவில் முன்னேற்றம் கண்டிருக்கு தாம்?''

""சென்னையில் ஜெ.வை சந்திச்ச அதிர்ச்சியிலிருந்து இன்னும் சி.பி.எம். பொதுச் செயலாளர் பிரகாஷ்காரத் மீளவேயில்லையாம். பிரதமர் வேட்பாளர்னு தன்னை வலியுறுத்திய ஜெ., இன் னொரு தகவலையும் சொல்லி யிருக்கிறார். இந்திய கம்யூ னிஸ்ட் கட்சியின் டி.ராஜா வுக்கு ராஜ்யசபா சீட் தந்ததுபோல, மார்ச் மாதத்தில் சி.பி.எம்மின் டி.கே.ரங்கராஜ னுக்கு ராஜ்யசபா சீட்  தருவதா உறுதிப்படுத்திய ஜெ., லோக்சபாவைப் பொறுத்த வரை இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கும் தலா 1 சீட் மட்டும்தான் ஒதுக்க முடியும்னு சொல்லியிருக்கிறார். இன்னும்  சில கட்சிகளை அ.தி.மு.க கூட்டணியில் சேர்க்கணும்ங்கிறதால கூடுதல் சீட்டை எதிர் பார்க்க வேண்டாம்னுட்டாராம்.''

""பிரகாஷ்காரத்தின் ரிப்ளை என்னவாம்?''

""ஷாக்கானவர் அப்படியே டெல்லிக்குப் போயிட்டு, அங்கிருந்துதான் தமிழ்நாடு சி.பி.எம்மின் மாநிலக் குழுவுக்கே இந்தத் தகவலை சொல்லியிருக்காரு. சி.பி.எம் தோழர் களோ 2 சீட்டிலிருந்து 4 சீட் வரை என்றால் ஓ.கே.ன்னு சொல்லியிருக்காங்க. சி.பி.ஐ.யும் 2 சீட்டுக்குக் குறையக்கூடாதுன்னு இருக்குதாம். ஆளுக்கு ஒன்றுதான்ங்கிறதில் ஜெ. பிடிவாதமா இருக்காராம். ஒன்றுதான்னா, ராஜ்யசபா சீட்டும் வேண்டாம்னு சி.பி.எம்மின் தமிழக நிர்வாகிகள் சொல்றாங்க. டி.கே.ஆரை ராஜ்யசபாவுக்கு அனுப்பிட்டு அப்புறம் பார்த்துக்குவோம். அதுவரைக்கும் அமைதியா இருப்போம்னு சொல்லுதாம் கட்சியின் டெல்லித் தலைமை.''

""அ.தி.மு.கவில் இன்னும் சில கட்சிகள் சேரும்னு பிரகாஷ்காரத்கிட்ட ஜெ. சொன்னதா சொன்னியே, ம.தி.மு.கவும் அதில் உண்டா? செப்டம்பர் 15-ல் விருதுநகரில் ம.தி.மு.க மாநாட்டில் கூட்டணி அறிவிப்பை எதிர்பார்க்கலாமா?''

""அதைப் பற்றி நான் சொல்றேன்.. .. கூட்டணி பற்றியெல்லாம் அந்த மாநாட்டில் வைகோ அறிவிக்கப் போவதில்லையாம். ஆனா, சமீபகாலமா அவர் பேசுகிற கூட்டங்களில் எல்லாம், சுமார் 10 நிமிடம் வாஜ்பாயை புகழ்ந்து பாராட்டுறாரு. ஈழத்தமிழர்களுக்கு உதவியாக இருந்தது வாஜ்பாய் ஆட்சிதான்னு பேசுறாரு. பேச்சை முடிக்கிறப்ப, ஆட்சி மாற்றம் தேவை, மத்தியில்னு சொல்றாரு. வைகோ பேச்சைத் தொடர்ந்து கேட்கிறவங்களுக்கு அவர் என்ன சொல்ல வர்றாருன்னு புரியாதா என்ன!''