12 செப்., 2013

பிரபாகரனின் பிரசாரங்களையே கூட்டமைப்பும் முன்னெடுக்கின்றது: வவுனியா பிரசாரக் கூட்டத்தில் ஜனாதிபதி
விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் பிரசாரங்களையே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முன்னெடுத்து வருவதாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ இன்று வவுனியாவில் குற்றம் சுமத்தினார்.
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் சார்பில் வடக்கு மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து வவுனியாவில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் அவர் இதனை கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
புலிகளின் தலைவர் பிரபாகரன் கோரியதற்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இன்று கூறுவதற்கும் இடையில் எந்த வித்தியாசங்களும் இல்லை.
சிலர் வெளியிட்டுள்ள தேர்தல் விஞ்ஞாபனத்தை நீங்கள் பார்த்திருப்பீர்கள். நான்கு வருடங்களுக்கு முன்னர் கோரப்பட்டதையே இவர்களும் கோரியுள்ளனர்.
பிரபாகரனுக்கு நாட்டை பிளவுப்படுத்த இடமளிக்காதது போல் எவருக்கும் நாட்டை பிளவுப்படுத்த இடமளிக்க முடியாது.
போர் காரணமாக முஸ்லிம்களும், சிங்களவர்களும் வடக்கில் இருந்து வெளியேற்றப்பட்டனர். இரண்டு பக்கத்திலும் இருந்த ஜனநாயக தமிழ் தலைவர்கள் கொலை செய்யப்பட்டனர்.
எமது அரசாங்கம் இனவாதத்திற்கு எதிரானது. நாங்கள் சகல மதங்களுக்கு மதிப்பளித்து வருகின்றோம். அனைவரும் இலங்கையர்கள் என்ற நிலையில் இணைந்து இந்த நாட்டை கட்டியெழுப்ப வேண்டும்.
நாட்டில் உள்ள ஏனைய மாகாணங்களுக்கு வழங்கும் சகல நலன்களும் போர் முடிவடைந்த பின்னர் வடக்கு மாகாணத்திற்கும் வழங்கப்பட்டு வருகிறது என்றார்.