12 செப்., 2013

இரவல் சின்னத்தில் போட்டியிடுவோரால் எத்தகைய அபிவிருத்திகளை மேற்கொள்ள முடியும்: வேட்பாளர் ப. அரியரத்தினம் கேள்வி - தேனிசைச் செல்லப்பா பாடல் 2 

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வடமாகாண சபைக்கான தேர்தல் பரப்புரைக் கூட்டம் கிளிநொச்சி பூநகரிப் பகுதியில் கரைச்சிப் பிரதேச சபையின் உப தவிசாளர் வ.நகுலேஸ்வரன் தலைமையில் மாலை 4 மணிக்கு ஆரம்பமாகி இரவு 8 மணிக்கு நிறைவுபெற்றது.
இப் பரப்புரைக் கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன், வடமாகாண சபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் ப.அரியரத்தினம், த.குருகுலராசா, சு.பசுபதிப்பிள்ளை கரைச்சிப் பிரதேச சபைஉப தவிசாளர் வ.நகுலேஸ்வரன் கரைச்சிப் பிரதேச சபை உறுப்பினர்கள், சு.தயாபரன், மா.சுகந்தன், கிளிநொச்சி மாவட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இளைஞரணிச் செயலாளர் கு.சர்வானந்தா, பொதுமக்கள் எனப் பலர் கலந்துகொண்டனர்.
இன்நிகழ்வில் தேனிசைச் செல்லப்பா குழுவினர்களினால் பாடப்பட்ட 3 பாடல்கள்  அதில் 2 இங்கே உங்களுக்காக
இதன்போது உரையாற்றிய இலக்கம் 1இல் போட்டியிடும் வேட்பாளர் ப.அரியரத்தினம்,
இலங்கையில் ஒரு தனித்துவமான கட்சி இருக்கிறதென்றால் அது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பே. ஏனெனில் எந்த ஒரு அரசியல் கட்சியும் குறிப்பாக இக் கிளிநொச்சி மாவட்டத்தில் போட்டியிடுகிற பதினொரு அரசியல் கட்சியும் இரண்டு சுயேட்சைக் குழுக்களும் தமக்கென ஒரு சின்னத்தைக் கொண்டிருக்க முடியாதன.
அவை அரசிடம் இரவல் வாங்கிய சின்னங்களில் போட்டியிடுகின்றன. அவற்றில் முக்கியமான வெற்றிலைச் சின்னத்தில் போட்டியிடுவோர் தாம் இந்தப் பிரதேசங்களில் அபிவிருத்தி செய்து வருபவர்கள், அந்த அபிவிருத்திகளுக்காகத் தமக்கு வாக்களிக்க வேண்டுமென்று கேட்டு நிற்கிறார்கள்.
நீங்கள் பத்திரிகைகள் பார்த்திருப்பீர்கள்.அதில் இந்த வெற்றிலைச் சின்னத்திற்குப் பொறுப்பாகவுள்ள கைத்தொழில்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தெளிவாக ஒரு உண்மையினை மனமுவந்து ஒத்துக்கொண்டுள்ளார்.
அது என்னவெனில் “வெற்றிலை என்பது மங்களகரமான பொருள். ஆனால் இன்று அதனுள் அழுகிய பழுதான வெற்றிலைகளும் கலந்து விட்டன என்று” ஆகவே அழுகிய, வாடல் வெற்றிலைகளைக் கொண்டுள்ளவர்களால் எவ்வாறு தனித்துவமான கொள்கைகளைப் பின்பற்ற முடியும்.
தனித்துவமான கொள்கைகளைக் கொண்டுள்ளவர்களென்றால் அவர்கள் தமக்குரிய வீணைச் சின்னத்தில் போட்டியிட்டிருக்க வேண்டும். அரசாங்கத்தின் அழுத்தத்தின் பிரகாரம் அவர்கள் அரசினது வெற்றிலைச் சின்னத்தில் போட்டியிடுகிறார்கள்.
நாங்கள் ஒரு தனித்துவமான கட்சி. தமிழர்களின் பாரம்பரியச் சின்னத்தில் போட்டியிடுகிறோம். நாங்கள் பெறப்போகிற வெற்றி என்பது எங்கள் மக்களாகிய நீங்கள் பெறுகின்ற வெற்றியாகும்” எனத் தெரிவித்தார்.
இத் தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன், வேட்பாளர்கள் ப.அரியரத்தினம், த.குருகுலராசா, சு.பசுபதிப்பிள்ளை,கரைச்சிப் பிரதேச சபை உப தவிசாளர் வ.நகுலேஸ்வரன், உறுப்பினர்கள் சு.தயாபரன்,மா.சுகந்தன் ஆகியோர் உரையாற்றியுள்ளனர்.