புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

25 அக்., 2013



              சிகலாவின் கதை எங்குமே அரங்கேறக் கூடாத கண்ணீர்க்கதை.

சசிகலாவுக்கு வயது 19. முதுகுளத்தூர் சோனைமீனாள் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்துக்கொண்டிருந்தாள். அதே வகுப்பில் படித்த கோட்டைச்சாமிக்கும் சசிகலாவுக்கும் இடையில் காதல் மலர்ந்தது. 


இவர்களின் காதல் விவகாரம் கல்லூரி முதல்வர் காதுக்குப் போக... அவர் சசிகலாவின் அப்பா கருப்பையாவையும் அம்மா கூத்தாயியையும் அழைத்து ""உங்க பொண்ணைக் கண்டிச்சி வையுங்க'' என காதல் விவகாரத்தை அவர்களிடம் சொன்னார்.

அந்த நொடியிலேயே சசிகலாவின் வர்ணமயமான காதல் உலகம் இருளத் தொடங்கியது.

வீட்டுக்கு மகளை இழுத்து வந்த பெற்றோர், விளத்தூர் வீட்டில் வைத்து ""ஏண்டி இப்படி மானத்தை வாங்குறே. யாதவ சமூகத்தில் பிறந்த உனக்கு அந்த தலித் பையன்தான் கிடைச்சானா?'' என அடித்து உதைத்தனர். பிறகு...?

""அடுத்த நாள் காலேஜுக்குப் போறேன்னு வீட்டை விட்டுக் கிளம்பிய சசிகலா, நேரா கோட்டைச்சாமிகிட்ட போய் "எங்க வீட்ல நம்மை வாழ விடமாட்டாங்க போலிருக்கு'ன்னு அழுதா. கோட்டைச்சாமியோ, "நாம கல்யாணம் பண்ணிக்கிட்டா யாரும் நம்மைப் பிரிக்க முடியாது'ன்னு சொன்னதோட தன் நண்பனான பரமையன் துணையோட காமன்கோட்டைக் கோயில்ல வச்சி சசிகலா கழுத்தில் தாலி கட்டினான். ரெண்டுபேரும் பட்டு வேட்டி, பட்டுச் சேலையில் மங்களகரமா ஜொலிச்சாங்க. அடுத்து நண்பன் பரமையனின் தேங்கா மண்டியிலேயே 11-ந் தேதியில் இருந்து 14-ந் தேதிவரை தங்கியிருந்தாங்க. அப்பதான் சசிகலாவின் ஊர்ல இருந்து  அவங்க சொந்தக் காரங்க கார்ல வந்தாங்க. வந்தவங்க ரெண்டுபேரையும் அடிச்சி மிதிச்சி துவைச்சி எடுத் துட்டாங்க. அப்படியே சசிகலா வை மட்டும் காருக்குள்ள திணிச்சிக்கிட்டு கிளம்பிட்டாங்க'' என்றார் சம்பவத்தை அறிந்த கோட்டைச் சாமியின் நண்பர்.

பிறகு...?

விளத்தூரைச் சேர்ந்த பெயர் சொல்ல விரும்பாத அந்தப் பெரியவர் விவரிக்க ஆரம்பித்தார்.

""அந்த சசிகலா புள்ளையை அவங்க அப்பா, அம்மா, அக்கா ஜமுனா, அவ புருஷன் ஜெய்கணேஷ், பெரியப்பா சித்திரைவேலு, ஊர்க்கார நாராயணன், அழகர், கிருஷ்ணன்னு எல்லாருமா சேர்ந்து அடிச்சாங்க. மறுநாள் அந்தப் பையன் கோட்டைச்சாமிய பரமக்குடி எமனேஸ் வரம் போலீஸ் ஸ்டேஷனுக்கு கொண்டு வந்து "எனக்கும் அந்தப் புள்ளைக்கும் இனி சம்பந்தம் இல்லை'ன்னு எழுதி வாங்குனாங்க. அப்புறம் அந்த கோட்டைச்சாமியை, "இந்தப் பக்கம் உன்னைப் பார்த்தா நீ பொணம்டா'ன்னு அடிச்சி விரட்டுனாங்க. 14-ந் தேதியில் இருந்து 19-ந் தேதி வரை அந்த சசிகலா புள்ளையை ஆளாளுக்கு அடிச்சி சித்ரவதை செஞ்சாங்க. நான் எமனேஸ் வரம் போலீஸ் ஸ்டேஷனுக்குப் போன்போட்டு, "அந்தப் புள்ளைய அடிச்சிக் கொல்றாங்க, காப்பாத்துங்க'ன்னு சொன்னேன். யாரும் கேட்கலை. ஒரு கட்டத்தில் அடி தாள முடியாம அந்தப் புள்ள செத்துருச்சு. அப்புறம் அவசர அவசரமா சுடுகாட்டுக்கு கொண்டு போயி எரிக்க ரெடியானாங்க. அதையும் நான்தான் போலீசுக்குச் சொன்னேன். அந்தப் புள்ளை உயிரைக் காப்பாத்த வராத போலீஸ், சுடுகாட்டுல எரிக்கும்போது வந்து பொணத்தைக் கைப்பத்திக்கிட்டுப் போச்சு. பாவம்ங்க... அநியாயமா ஒரு புள்ளையை சாதி வெறியில் அடிச்சே கொன்னுட்டாங்க'' என்றார் வேதனையோடு.



எவிடன்ஸ் அமைப்பின் கள ஆய்வாளர் முத்துவோ, ""இது அநியாயமான கௌரவக் கொலை. அம்மா, அக்கா உட்பட 6 பேரை மட்டும் கைது பண்ணியிருக்காங்க. அந்த சசிகலாவை அடிச்சி சித்ரவதை பண்ணிய இன்னும் சிலரை போலீஸ் கைது பண்ணலை. முதல்ல தற்கொலை வழக்கா பதிவு செய்த போலீஸ், எங்க போராட்டத்துக்குப் பிறகு தற்கொலைக்குத் தூண்டியதா வழக்கைத் திருத்தியிருக்கு. அந்த சசிகலாவின் நெஞ்சிலும் அடிவயித்திலும் கன்றிப்போயிருக்கு. கழுத்தை இறுக்கிய தடயமும் இருந்தது. தன்னைத்தானே தாக்கிக்கொண்டும் கழுத்தை நெரித்துக்கொண்டுமா அந்த சசிகலா தற்கொலை பண்ணிக்கிச்சு? போலீஸ் குற்றவாளி களைத்  தப்ப வைக்கப் பார்க்குது. நாங்க விட மாட்டோம்'' என்றார் ஆவேசமாக.

பரமக்குடி வழக்கறிஞர் பசுமலையோ, ""இந்த சாதீய கௌரவக் கொலைக்கு எமனேஸ்வரம் போலீஸே உறுதுணையா இருந்திருக்கு. கோட் டைச்சாமியும் சசிகலாவும் மேஜரானவங்க. ஸ்டேஷன்ல அவங்களை சேர்த்து வைக்காம, போலீஸே கட்டப்பஞ்சாயத்து பண்ணி, "எனக்கும் சசிகலாவுக்கும் சம்பந்தமில்லை'னு கோட்டைச்சாமி யிடம் எழுதி வாங்கியிருக்கு. காதல் திருமணம் பண் ணிக்கொண்ட தம்பதிகளைப் பிரிக்கும் அதிகாரத்தை போலீசுக்கு யார் கொடுத்தது? அவனுக்கு எந்த விபரீதம் நடந்தாலும் காவல்துறைதான் பொறுப் பேற்க வேண்டும்'' என்றார் காட்டமாய்.

அந்த கௌரவக் கொலைக்கு காரணமானவர் என பலரும் சுட்டிக்காட்டிய விளத்தூர் நாராயணனை சந்தித்தோம். அவரோ, ""எங்க ஊர் பெண்கள் வெளி சாதி ஆட்களை கல்யாணம் பண்ணிக்கிறது வழக்கத் திலேயே இல்லை. இது சாதிக்கு கட்டுப்பட்ட ஊர். அந்த சசிகலா புள்ளை மட்டும் எப்படி இப்படி ரூட் மாறுச்சுன்னு தெரியலை. அந்தப் பையனே "எனக்கும் சசிகலாவுக்கும் சம்பந்தமில்லை'னு போலீஸ்ல எழுதிக் கொடுத்துட்டுப் போயிட்டான்.  இந்தப் புள்ளை நம்ம சமூகத்தை அசிங்கப்படுத்திட்டமேன்னு விஷத்தைக் குடிச்சி செத்து ருச்சு. எங்க ஊர் கட்டுப்பாடான ஊர் என்பதால் உடலை எரிச் சோம். இதில் என்ன தப்பு இருக்கு?'' என்றார் கூலாகவே. எமனேஸ்வரம் இன்ஸ் பெக்டர் சுரேஷ்பாபுவை நாம் தொடர்புகொண்டு ""சசிகலா விவகாரம்...'' என்றுதுமே...

""எதா இருந்தாலும் ஸ்டேஷன்ல போன் போட்டுக் கேளுங்க'' என்றார்.

ஸ்டேஷனைத் தொடர்புகொண்டபோது, ""எதா இருந்தாலும் இன்ஸ்பெக்டர்ட்ட கேளுங்க'' என கிளிப் பிள்ளையாக ஒப்பித்தார்கள் காக்கிகள். சாதி மாறி காதலித்ததற்காக கல்லறைக்கு அனுப்பப்பட்டிருக் கிறாள் சசிகலா. இந்தக் கௌரவக் கொலை தமிழகத் தில் தொடர்ந்து நடந்து வருவதுதான் கொடுமை யிலும் கொடுமை!                  

ad

ad