24 ஜன., 2014

யுத்த காலத்தில் சில குழுக்களுக்கு ஆயுதங்கள் வழங்கினோம்: மட்டக்களப்பில் கோத்தபாய தெரிவிப்பு
யுத்தம் நடைபெற்ற காலங்களில் சில குழுக்களுக்கு நாங்கள் ஆயுதங்களை வழங்கியிருந்தோம். அதன் பின்னர் வழங்கப்பட்ட ஆயுதங்களை மீளப் பெற்றதன் காரணமாக எங்களால் சமாதானத்தை நிலைநாட்ட முடிந்தது என பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஸ தெரிவித்தார்.
மட்டக்களப்பு ஈஸ்ட் லகூல் ஹோட்டலில் கிழக்கு மாகாணத்தில் உள்ள சிவில் அமைப்பின் பிரதிநிதிகள் மற்றும் மதத்தலைவர்களை சந்தித்து உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,
கிழக்கு மாகாணம் ஏனைய மாகாணங்களைவிட சற்று வித்தியாசமானது. இம் மாகாணத்தில் பல்லின மக்களும் வாழ்கின்றார்கள். பல மார்க்கத்தையும் மொழிகளையும் உள்ளடக்கிய மாகாணமாக காணப்படுகின்றது. இன்று மக்கள் ஒன்றாக வாழ்வதையிட்டு நான் சந்தோஷமடைகின்றேன்.
எனது கருத்தை கேட்டு அபிவிருத்தி வேலைகளை மக்கள் மத்தியில் கொண்டு செல்வதற்கு ஆளுநர், முதலமைச்சர் ஏனையோர்கள் ஒன்றாக இணைந்து செயற்பட்டதையிட்டு நான் மகிழ்ச்சியடைகின்றேன்.
கடந்த 30 வருடங்களில் இந்த நாட்டில் என்ன நடந்தது என்பது உங்கள் அனைவருக்கும் தெரியும். கௌரவ ஜனாதிபதி அவர்கள் 2005ஆம் ஆண்டு இந்த நாட்டின் ஜனாதிபதியாக கடமையேற்று மிகக் குறுகிய காலத்தில் யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்து மக்கள் சுபீட்சமாக வாழ்வதற்கு அரும்பாடுபட்டதை நீங்கள் அறிந்திருப்பீர்கள்.
தற்போதுள்ள சமாதான சூழலை தொடர்ந்தும் நிலைநிறுத்திக் கொள்வதற்கு ஒவ்வொருவரினதும் அர்ப்பணிப்பு அவசியம் என்பதை மக்கள் உணர்ந்துகொள்ள வேண்டும்.
யுத்தத்தின் பின் நான்கு வருட குறுகிய காலத்தினுள் வடமாகாணத்தில் மூன்று இலட்சம் மக்களை மீளக்குடியமர்த்தி அவர்களுடைய தேவைகளை நிறைவேற்றியதுடன், தடுப்புக் காவலில் இருந்த ஐயாயிரம் பேருக்கு புனர்வாழ்வளிப்பதற்கு சகல வேலைகளையும் இந்த அரசாங்கம் முன்னெடுத்தது. அத்துடன் அபிவிருத்தி வேலைகளையும் குறுகிய காலத்தினுள் செய்து முடித்ததை காணக்கூடியதாக இருந்தது.
யுத்தம் நடைபெற்ற காலங்களில் சில குழுக்களுக்கு நாங்கள் ஆயுதங்களை வழங்கியிருந்தோம். யுத்தம் நிறைவடைந்த பின்னு அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களிடமிருந்த ஆயுதங்களை மீளப் பெற்றதன் காரணமாக எங்களால் சமாதானத்தை நிலைநாட்ட முடிந்தது.
பாதுகாப்பு வலயங்களிலிருந்த தளங்கள் அமைப்புகளை படிப்படியாக குறைத்து மக்கள் எங்கும் சென்றுவரக்கூடிய சூழலை உருவாக்கினோம். தற்போது பாதுகாப்புப் பணியை பொலிஸாரிடம் ஒப்படைத்திருக்கின்றோம். அவர்கள் தங்கள் பணியை செய்துகொண்டிருக்கின்றார்கள். அவர்களுக்கு தமிழ்மொழியில் சேவை செய்வதற்காக தமிழ்மொழிப் பயிற்சியை வழங்கி வருகின்றோம்.
கடந்த காலங்களில் மக்கள் தேர்தல்களில் வாக்களிக்கும் வீதம் குறைவாக காணப்பட்டது. பின்பு படிப்படியாக தேர்தல்களில் வாக்களிக்கும் எண்ணிக்கை அதிகரித்து வருவதை காணக்கூடியதாக உள்ளது.
யுத்தத்தில் உயிரிழப்புகள் பொருளாதார இழப்புகள் ஏற்பட்டது. யுத்தத்தின் பின்னர் இன்று சுற்றுலாத்துறை அபிவிருத்தியடைந்து வருகின்றது. பல நாடுகளிலிருந்தும் சுற்றுலாப் பயணிகள் இங்கு வந்து செல்கின்றார்கள். அதுமட்டுமல்லாது கடந்த காலங்களில் வெளிநாடுகளில் முதலீடுசெய்தவர்கள் இன்று இலங்கையில் முதலீடு செய்வதற்காக இங்கு வந்துசெல்கின்றார்கள். அத்துடன் பல அபிவிருத்திப் பணிகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதை காணக்கூடியதாக உள்ளது.
இந்த சமாதானத்தை பெறுவதற்காக நாம் மிகவும் கஷ்டப்பட்டோம். பல இழப்புகளை சந்தித்திருந்தோம். இனி நாம் பெற்ற சமாதானத்தை நிலைநிறுத்துவதற்கான பணி எமக்கிருக்கின்றது. இப் பணிக்கு யாராவது அநீதி விளைவித்தால் அது பாரதூரமான குற்றமாகும். இச் சமாதானத்தை தொடர்ந்து நிலைநாட்டுவது நம் எல்லோருடைய கடமையாகும். பொறுப்பு வாய்ந்த பதவிகளில் இருப்பவர்கள் இப்பணியை சரிவர செய்வது அவர்களின் கடமையாகும்.
நம் மத்தியில் பிரச்சினைகள் இருக்கலாம். பேச்சுவார்ததைகள் மூலமும் கலந்துரையாடல்கள் மூலமுமே அதற்கு தீர்வு காணலாம். வன்முறைகள் மூலம் தீர்வுகாண முடியாது. நம் மத்தியிலுள்ள பிரச்சினைகளை நாம் தான் தீர்க்கவேண்டுமே தவிர வெளியிலிருந்து யாரும் வந்து தீர்க்க முனைவது நடைபெறாத காரியமாகும்.
இந்த நாட்டில் சிங்களவர்கள், தமிழர்கள், முஸ்லிம்கள்,கிறிஸ்தவர்கள் போன்ற பல்லின மக்களும் வாழ்கின்றார்கள். அதேபோல் பௌத்தமதம், இந்து மதம், இஸ்லாம் மதம், கிறிஸ்தவ மதம் போன்ற பல மதங்களும் இங்கு இருக்கின்றது. ஆனால் இவர்கள் அனைவரும் இலங்கையர்கள் ஆவார்கள். மகிந்த சிந்தனையின்படி இங்கு வாழும் அனைத்து மக்களும் சமமாகவும் சுபீட்சமாகவும் வாழவேண்டும் என்பதில் எமது ஜனாதிபதி நிலையான கொள்கையை உடையவராக இருக்கின்றார்.
இந்த நாட்டின் ஜனாதிபதி அவர்கள் நாற்பது வருட அரசியல் அனுபவத்தை கொண்டவர். ராஜபக்ச பரம்பரையினர் எழுபத்தைந்து வருடங்களாக இந்நாட்டு அரசியலில் அங்கம் வகிப்பவர்களாக இருந்து கொண்டிருக்கின்றார்கள்.
எங்களுக்கு வெளியாட்களின் தலையீடு தேவையில்லை. நாங்கள் எங்கள் பணியை செய்வோம். நாங்கள் யுத்தத்தை நிறுத்தி அபிவிருத்திகளையும் செய்து காட்டியிருக்கின்றோம். எங்களுக்கு ஒரு தூரநோக்கு இருக்கின்றது. மகிந்த சிந்தனையில் கூறப்பட்ட ஒவ்வொரு விடயத்தையும் நாங்கள் செய்துகொண்டு வருகின்றோம்.
சிலர் இந்நாட்டிற்கு அபகீர்த்தியை ஏற்படுத்த முயற்சித்து வருகின்றார்கள். இந் நாட்டிற்கு சென்றால் சமய அனுஷ்டானங்களை செய்ய முடியாது. அவர்களுக்கு பல பிரச்சனைகளை கொடுக்கின்றார்கள் என பிழையான தகவல்களை வழங்கிவருகின்றார்கள். ஆனால் இங்கு வந்து சென்றபின் அது பொய்யான தகவல் என பலர் உணர்ந்திருக்கின்றார்கள்.
கொழும்பில் குறைந்த வருமானம் பெறுபவர்களுக்கு வீட்டுத்திட்டத்தை வழங்கும் பணியை நாங்கள் ஆரம்பித்திருக்கின்றோம். இருபதாயிரம் வீட்டுத்திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டு ஐநூறு வீடுகள் பூர்த்தி செய்து வழங்கியிருக்கின்றோம். அதில் அதிகமானவர்கள் தமிழர்களாவர். அதன் பின் முஸ்லிம்களாவர். ஆனால் தமிழர்களையும் முஸ்லிம்களையும் கொழும்பிலிருந்து துரத்திவிட்டதாக அப்பட்டமான பொய்யை சிலர் பரப்பி வருகின்றார்கள்.
கொழும்பில் சகல மதங்களும் வாழ்கின்றனர். கோயில்கள், பள்ளிவாசல்கள், விகாரைகள், தேவாலயங்கள் என அனைத்தும் அங்கு அமைக்கப்பட்டுள்ளன. சில குறுகிய நோக்கமுடையவர்கள் தேவையற்ற கதைகளை மக்கள் மத்தியில் பரப்பிவருகின்றார்கள்.