24 ஜன., 2014

கோத்தபாய வாயை மூடாவிட்டால் அரசுக்கு ஆபத்து!- லலித் வீரதுங்க ஜனாதிபதியிடம் தெரிவிப்பு
பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவின் வாயை அடக்குமாறும் இல்லாவிட்டால் அரசாங்கத்திற்கு ஆபத்து என்றும் ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவிடம் கூறியுள்ளதாக அரசாங்க வட்டாரங்களில் இருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மட்டக்களப்பில் நேற்று நடைபெற்ற வைபவம் ஒன்றில் பேசிய பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச,
எமக்கு தலைவர்கள் தேவையில்லை. எமது பிரச்சினைகளை தீர்த்து கொள்ள எங்களுக்கு தெரியும். அவற்றுக்கு தீர்வு காண ஆலோசனைகள் தேவையில்லை. நான் இதனை அமெரிக்க தூதுவரிடம் நேரிடையாக கூறினேன் என்றார்.
மட்டக்களப்பில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் மத தலைவர்கள், அரசியல்வாதிகள் மற்றும் வெகுஜன அமைப்புகளின் தலைவர்கள் மற்றும் பிரதேச இராணுவ அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
பாதுகாப்புச் செயலாளரின் தேசப்பற்று பேச்சை இலங்கையில் உள்ள தேசப்பற்றாளர்களும் தேசாபிமானிகளும் வரவேற்றாலும் அவரது இந்த பேச்சானது, அமெரிக்காவுடன் நல்லெண்ணத்தை வளர்த்து கொள்ளும் நோக்கில் அங்கு விஜயம் செய்துள்ள ஜனாதிபதியின் செயலாளர் மற்றும் வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல். பீரிஸ் ஆகியோருக்கு பெரும் நெருக்கடியை கொடுத்துள்ளதாக ராஜதந்திர வட்டாரங்களின் தகவல்கள் தெரிவித்தன.
ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க, இந்த வாரத்தின் முற்பகுதியில் சுவிஸர்லாந்தின் ஜெனிவா நகருக்கு சென்றிருந்தார்.
ஐ.நா மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை உட்பட முக்கிய அதிகாரிகளை சந்தித்த அவர், கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை அமுல்படுத்துவது தொடர்பில் இலங்கை அடைந்துள்ள முன்னேற்றம் குறித்து விபரமாக விளக்கியுள்ளார்.
லலித் வீரதுங்க, ஜீ.எல்.பீரிஸ் மற்றும் ரவிநாத ஆரியசிங்க ஆகியோரின் பாரிய முயற்சியில் இலங்கை தொடர்பாக கட்டியெழுப்படும் இலங்கை பற்றிய நல்லெண்ணமானது கோத்தபாயவின் ஒரு பேச்சினால் இல்லாமல் செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பாக மிகவும் ஆதங்கத்திற்கு உள்ளாகியுள்ள ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க, ஜனாதிபதியுடன் தொடர்பு கொண்டு, எதிர்வரும் மாச் மாதம் முடியும் வரை பாதுகாப்புச் செயலாளரை வாயை மூடிக் கொண்டிருக்குமாறு கூறுங்கள் என கேட்டுள்ளார்.
தாம் மிகவும் சிரமப்பட்டு கட்டியெழுப்பி வரும் நல்லெண்ண செயற்பாடுகள் பாதுகாப்புச் செயலாளரின் ஒரு வார்த்தையால் வீணாகி போகிறது எனவும் லலித் வீரதுங்க, ஜனாதிபதியிடம் விளக்கியுள்ளார்.
தனது செயலாளரின் இந்த ஆலோசனை புரிந்து கொண்ட ஜனாதிபதி, எனது அரசாங்கத்திற்குள் பல அரசாங்கங்கள் இருக்கின்றன. இதுதான் பிரச்சினைக்கு காரணம்  என தனதருகில் இருந்தவர்களிடம் கூறியுள்ளார்.
எவ்வாறாயினும் ஜனாதிபதி, பாதுகாப்புச் செயலாளரின் தேசப்பற்றான பேச்சை கண்டிக்கவில்லை.
ஜெனிவா மனித உரிமை பேரவையில் நிச்சயம் தோல்வி ஏற்படும் என்பதை அறிந்துள்ள ஜனாதிபதி, அமைதியாக தோல்வியை ஏற்றுக்கொள்வதை விட இவ்வாறு வாளுடன் மோதும் நபருடன் பொல்லுடன் மோதும் வழிமுறையை பின்பற்ற வேண்டும் என்ற நிலைப்பாட்டில் இருப்பதாக கூறப்படுகிறது.