2 பிப்., 2014

கடலில் கப்பல்கள் செல்லும்போது திறந்து மூடும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள ராமேசுவரம் அருகேயுள்ள பாம்பன் ரயில் பாலம்  பிப்ரவரி 24 ஆம் தேதியுடன் நூறு ஆண்டுகளை நிறைவு செய்கிறது.

இதனையொட்டி, ரயில்வே நிர்வாகம் நூற்றாண்டு விழாவை அதே நாளில் சிறப்பாகக் கொண்டாட இருக்கிறது.
 ராமேசுவரம் தீவு ஒரு காலத்தி
ல் இந்தியாவுடன் இணைந்த நிலப்பரப்பாகவே இருந்து வந்தது.
கி.பி.1480 ஆம் ஆண்டு ஏற்பட்ட மிகப் பெரிய புயலால் மன்னார் வளைகுடா கடல் பகுதியில் கடல்நீர் உட்புகுந்ததால், ராமேசுவரம், பாம்பன் உள்ளிட்ட நிலப் பகுதிகள் தனித்தீவுகளாக மாறின.
 ராமேசுவரம் அருள்மிகு ராமநாத சுவாமியை தரிசிக்க வரும் யாத்ரீகர்களின் சிரமத்தை உணர்ந்து அவர்கள் கடலைக் கடந்து செல்ல வசதியாக ராமநாதபுரத்தை ஆண்ட 
மன்னர் விஜயரகுநாத சேதுபதி மண்டபத்தையும், பாம்பனையும் இணைக்கும் வகையில் இலவசமாக படகுப் போக்குவரத்தை அப்போது  தொடங்கியிருக்கிறார்.
    கி.பி.1640 ஆம் ஆண்டு ராமநாதபுரத்தை ஆண்ட மன்னர் இரண்டாம் சடைக்கண் சேதுபதிக்கும், மதுரை
மன்னர் திருமலை நாயக்கருக்கும் போர் ஏற்பட்ட போது சேதுபதி மன்னரும், அவரது தளபதியும் கடல் கடந்து ராமேசுவரம் சென்றனர்.
திருமலை நாயக்கரின் படைத் தளபதி ராமப்பய்யன் பெரும் படைகளுடன் பின் தொடர்ந்து வந்து கடலில் பெரிய மரங்களையும், கற்களையும் போட்டு பாலம் அமைத்து ராமேசுவரம் சென்று சேதுபதி மன்னரைக் கைது செய்திருக்கிறார். எனவே, ராமப்பய்யனால் பாம்பன் கடல் பகுதியில் கட்டப்பட்ட பாலமே முதல் பாலமாகும்.
 ஆங்கிலேயர்கள் காலத்தில் கீழே கப்பலும், மேலே ரயிலும் செல்லும் வகையில் 1911 ஆம் ஆண்டு ரயில் பாலம் கட்டுவது என முடிவு செய்யப்பட்டு, ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த ஸ்கெர்ஜர் எனும் பொறியாளரால் சுழலும் தூக்குப் பாலம் வடிவமைக்கப்பட்டு அதே ஆண்டு பாலம் அமைக்கும் பணிகளும் தொடங்கின. 1913 ஆம் ஆண்டு பாலம் கட்டும் பணிகள் முடிந்து மண்டபத்தையும், ராமேசுவரம் தீவையும் இணைக்கும் இந்தப் பாலம் 6740 அடி தூரத்துக்கு கட்டப்பட்டது. மணற்கல்லுடன் கூடிய பவளப் பாறைகளின் மீது 40 அடி இடைவெளியில் 145 தூண்களுடன் (ஏறத்தாழ 2.கி.மீ) கட்டி முடிக்கப்பட்டது.
 கப்பல்கள் செல்ல வழிவிடும் ஸ்கெர்ஜர் தூக்குப் பாலம் மட்டும் 214 அடி நீளத்தில் கப்பல்கள் செல்லும் போது திறந்து மூடும் வகையில் பாம்பன் ரயில் பாலத்தின் நடுவில் அமைந்துள்ளது. இத் தூக்குப் பாலம் கப்பல்கள் செல்லும்போது மட்டுமே திறந்து மூடும் வசதியுடையது. தூக்குப் பாலத்தில் அமைக்கப்பட்டிருக்கும் கிங்லிவர் எனப்படும் நெம்புகோலின் உதவியால் பாலத்தை மேலே தூக்கவும், இறக்கவும் முடியும். ரயில்வே ஊழியர்கள் தூக்குப் பாலத்தை இயக்கி கப்பல்கள் செல்ல வழி ஏற்படுத்தி தருகிறார்கள். இதுவே இப் பாலத்தின் முக்கிய சிறப்புமாகும்.
பாம்பனிலிருந்து ராமேசுவரம் வழியாகத்  தனுஷ்கோடிக்கு கடந்த 24.2.1914 ஆம் ஆண்டு மீட்டர்கேஜ் ரயில் போக்குவரத்து தொடங்கியது. அதே ஆண்டு செப்டம்பர் மாதம் சரக்கு ரயிலும் விடப்பட்டது. சென்னை, மதுரை போன்ற நகரங்களிலிருந்து தனுஷ்கோடிக்கு ரயில் விடப்பட்டது. இதன் மூலம் இலங்கை செல்லும் பயணிகள் இந்தோ-சிலோன் போட் மெயில் மூலம் தனுஷ்கோடி துறைமுகத்துக்கு வந்து கப்பல் மூலம் தலைமன்னார் சென்று அங்கிருந்து ரயில் மூலம் கொழும்புக்குச் சென்றனர்.
 கடந்த 23.12.1964 இல் ஏற்பட்ட பெரும் புயலின் காரணமாக பாம்பன் ரயில் பாலம் சேதமடைந்தது. பாலத்தின் இடையிலிருந்த இரும்பு கர்டர்கள் அனைத்தும் கடலில் தூக்கி வீசப்பட்டதால், ரயில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. பின்னர் மீண்டும் பாலம் புதுப்பிக்கப்பட்டு, மீட்டர்கேஜ் ரயில்பாதை அகல ரயில் பாதை அமைக்கும் பணிக்காக 92 ஆண்டுகளுக்கு பிறகு கடந்த 15.7.2006 அன்று ரயில் போக்குவரத்து இரண்டாவது முறையாகவும் நிறுத்தப்பட்டது.
 கடலில் காற்றின் வேகம், கடல் காற்றின் அரிப்புத்தன்மை, ரயில்களைத் தாங்கும் திறன், கடலுக்கு அடியில் உள்ள தூண்களின் தன்மை ஆகியனவும் ஆய்வு செய்யப்பட்டு, ரூ.20 கோடி மதிப்பிலேயே அகல ரயில் பாதை பணிகளை ரயில்வே நிர்வாகம் சிறப்பாகச் செய்து முடித்தது.
கடந்த 15.7.2006இல் நிறுத்தப்பட்ட மீட்டர்கேஜ் ரயில் போக்குவரத்து 12.8.2007இல் அகல ரயில் பாதையாக மாற்றியமைக்கப்பட்டு, ரயில் சேவை மீண்டும் தொடங்கியது.
போக்குவரத்து வசதிகள் சரியாக இல்லாத காலத்திலேயே கடந்த 24.2.1914ல் கடலில் கப்பல்கள் செல்லும்போது திறந்து மூடும் வகையில் வடிவமைக்கப்பட்ட இப்பாலம் வரும் 24.2.2014 ஆம் தேதியுடன் தனது நூறாவது வயதினை தொடுகிறது. நூற்றாண்டு விழாவை எதிர்நோக்கி இருக்கிறது.