புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

18 மார்., 2014

தி.மு.க. வேட்பாளர்கள் அறிமுகம்


'தி.மு.க-வில் அறிவிக்கப்பட்டுள்ள வேட்பாளர்களில் வழக்கறிஞர்கள் 13 பேர்; டாக்டர்கள் 3 பேர்; பொறியாளர்  ஒருவர். முதுகலைப் பட்டதாரிகள் 8 பேர்; இளங்கலைப் பட்டதாரிகள் 7 பேர்; சிட்டிங் எம்.பி-க்கள் 8 பேர். புதியவர்கள் 27 பேர்; பெண்கள் 2 பேர்!’- இது
கருணாநிதி சொல்லியிருக்கும் கணக்கு. அவர் சொல்லாத ஒரு கணக்கும் உண்டு. ஸ்டாலின் ஆதரவாளர்கள் 34 பேர்; இதில் தொழிலதிபர்கள் பலர்; கோடீஸ்வரர்கள் சிலர்! களமிறங்கியிருக்கும் வேட்பாளர்களைப் பற்றிய முதல் அறிமுகம் இது...
 திருநெல்வேலி: தேவதாச சுந்தரம்
கட்சிக்காரர்களுக்கு அறிமுகம் இல்லாத முகம் தேவதாச சுந்தரம். பணம் என்பது மட்டுமே இவரது பலம். எந்த கோஷ்டியையும் சாராதவர். திருச்செந்தூர் கோயில் அறங்காவலராக இருந்தபோது கோயில் நலனுக்காக நிறைய செய்தார் என்று சொல்கிறார்கள். சென்னையில் பிசினஸ் செய்துவரும் இவர், ஜெயித்தாலும் நெல்லைக்கு வருவாரா என்று நிறைய சந்தேகக் கேள்விகளை எழுப்புகிறார்கள் கட்சிக்காரர்கள். மாவட்டச் செயலாளர் கருப்பசாமிப் பாண்டியன் தனது கைக்கு அடக்கமான ஒருவரை வேட்பாளர் ஆக்கிவிட்டார் என்கிறார்கள்.
சேலம்: உமாராணி
எம்.ஏ. சமூகவியல் படித்தவர். இவரது தந்தை, எல்.ஆர்.என். பஸ், ஹோட்டல் உரிமையாளர். கணவர், டாக்டர் செல்வராஜ். சமூக சேகவர் என்ற அடையாளம் இவருக்கு ப்ளஸ். ஸ்டாலினின் மனைவி துர்காவின் நெருங்கிய தோழி. 1996-2001 காலகட்டத்தில் சேலம் மாநகராட்சி கவுன்சிலராக இருந்தவர். சேலம் வன்னியர் பகுதி. இவர், கொங்கு வேளாள கவுண்டர் சமூகத்தைச் சேர்ந்தவர். புறநகர் பகுதிகளில் அறிமுகம் கிடையாது. வீரபாண்டி ஆறுமுகம் மறைவுக்குப் பிறகே தீவிர கட்சி ஈடுபாட்டில் இறங்கினார். அதனால் வீரபாண்டியார் ஆதரவாளர்கள் மத்தியில் அதிருப்தி இருக்கிறது.
நீலகிரி: ஆ.ராசா
2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் கைதாகி சிறையில் இருந்து வந்துள்ள ஆ.ராசா, மீண்டும் நீலகிரியில் நிறுத்தப்பட்டுள்ளார். மீண்டும் போட்டியிட வாய்ப்புகேட்டு நெருக்கடி தர மாட்டேன் என ஆ.ராசா வெளிப்படையாக அறிவித்த போதும், தி.மு.க. நிர்வாகிகள் பலர், நீலகிரியில் ராசாவுக்குத்தான் வாய்ப்பு கொடுக்க வேண்டும் எனக் கேட்டனர். நீலகிரி, கோவை, ஈரோடு, திருப்பூர் ஆகிய நான்கு மாவட்டங்களில் இந்தத் தொகுதி இடம்பெறுவதால் அந்த மாவட்ட தி.மு.க. செயலாளர்களும் ஆ.ராசாவுக்கே தொகுதியை வழங்க வேண்டும் எனக் கேட்க, அதன்படியே அவருக்கு இந்தத் தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது.  
தென் சென்னை: டி.கே.எஸ்.இளங்கோவன்
வட சென்னை எம்.பி-யாக இருந்தவருக்கு தென் சென்னையை மாற்றிக் கொடுத்துள்ளது கட்சித் தலைமை. தி.மு.க-வில் அமைப்புச் செயலாளர். சொந்த ஊர் தஞ்சாவூர் என்றாலும், செட்டிலானது சென்னையில். இவருக்கு வட சென்னையைத்தான் தந்திருக்க வேண்டும். ஆனால், ஸ்டாலின் விசுவாசியான வக்கீல் கிரிராஜனுக்கு வட சென்னையைத் தரவேண்டும் என்பதற்காக இவரை தென் சென்னைக்கு தள்ளிவிட்டுவிட்டார்கள். இந்தத் தொகுதியில் மா.சுப்பிரமணியனை நிறுத்தத்தான் ஸ்டாலின் நினைத்தார். ஆனால் மாவட்டச் செயலாளரான ஜெ.அன்பழகன் அதனைக் கடுமையாக எதிர்த்தார். அதனை ஸ்டாலினால் மீற முடியவில்லை. திடீர் அதிர்ஷ்டமாக டி.கே.எஸ்ஸுக்கு தொகுதி கிடைத்துள்ளது.
கிருஷ்ணகிரி: சின்ன பில்லப்பா
கடந்த 25 ஆண்டுகளாக கட்சியில் உறுப்பினராக இருந்தாலும், ஓசூர் ஒன்றியப் பொறுப்பாளர் மற்றும் வழக்கறிஞர் அணி அமைப்பாளர் பதவிகளை மட்டும்தான் இதுவரை அடைந்திருக்கிறார். புது முகங்களுக்கு வாய்ப்பு வழங்க வேண்டும் என்ற அடிப்படையில் இவருக்கு சீட் வழங்கப்பட்டிருக்கிறது. மாவட்டச் செயலாளர் செங்குட்டுவனின் லாபியால்தான் இவர் அறிவிக்கப்பட்டதாகச் சொல்கிறார்கள். சாதி ஆதிக்கம் நிறைந்த பகுதி என்பதால், குரும்பர் இனத்தைச் சேர்ந்த இவரை, கட்சியின் வாக்குகள்தான் காப்பாற்ற வேண்டும்.
திருப்பூர்: செந்தில்நாதன்
டாக்டர் செந்தில்நாதனுக்கு வயது 72. அறிவிக்கப்பட்ட 35 வேட்பாளர்களில் பொன்.முத்துராமலிங்கத்துக்கு (74) அடுத்து வயது மூத்தவர். 'டாக்டரான இவருக்கு ஆபரேஷனில் அனுபவம் அதிகம். அரசியலில் இல்லை’ என தி.மு.க-வினரே சொல்கிறார்கள். கவுண்டர் சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதும் அ.தி.மு.க-விலும் வலுவில்லாத வேட்பாளர் என்பது இவருக்கு சாதகமாகும் என தி.மு.க-வினர் நம்புகின்றனர்.
 விருதுநகர்: ரத்னவேல்
பி.ஜே.பி. கூட்டணி வேட்பாளராக வைகோ போட்டியிடலாம் என்று சொல்லப்படும் தொகுதி இது. இந்தத் தொகுதியில் வெற்றி - தோல்வியை நிர்ணயிக்கும் அளவுக்குக் கணிசமாக உள்ள நாடார் சமுதாயத்தைச் சேர்ந்தவரையே வேட்பாளராக நிறுத்த தி.மு.க. தலைமை முடிவுசெய்தது. இங்கு வேட்பாளர் கிடைக்காமல் தி.மு.க. அலைந்தது. அதில் மாட்டியவர்தான் ரத்னவேல். 15 ஆண்டுகளாகத் தொழில் வர்த்தகச் சங்கத்தின் தலைவராகப் பதவி வகித்த இவர், அழகிரியின் ஆதரவாளராக இருந்து, 'அப்பாவுக்குத் தப்பாது பிறந்த பிள்ளை’ என்று புத்தகம் எழுதியவர். நாடார்கள் வாக்குகளை நம்பி இவர் களம் இறக்கப்பட்டு இருக்கிறார்.
பொள்ளாச்சி: பொங்கலூர் பழனிசாமி
தனது மகன் பைந்தமிழ் பாரி, மருமகன் டாக்டர் கோகுல் ஆகியோருக்குத்தான் சீட் கேட்டார் பொங்கலூர் பழனிசாமி. 'அவங்களுக்கு எல்லாம் தரமுடியாது, போய் நீயே நில்லு’ என்று கருணாநிதி சொல்லிவிட, வேட்பாளர் அறிவிப்புக்கு முன்னரே பணிகளைத் தொடங்கிவிட்டார். கவுண்டர் சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதும், தொகுதி முழுவதும் அறிமுகம் என்பதும் இவருக்கு ப்ளஸ். தேர்தல் செலவு விஷயத்தில் தோள் கொடுத்தால் ஜெயிக்கலாம் என்கின்றனர் தி.மு.க-வினர்.
பெரம்பலூர்: சீமானூர் பிரபு
தி.மு.க. வசம் உள்ள தொகுதி என்றாலும், இங்கு வெற்றிபெற்ற நடிகர் நெப்போலியன் ஏரியா பக்கம் தலைவைத்துக்கூட படுக்கவில்லை என்ற கோபம் தி.மு.க. மீதும் தெரிகிறது. வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள இவர், தொட்டியம் ஒன்றிய தி.மு.க. செயலாளர். நேரு தலைமையில் முசிறியில் நடந்த நாடாளுமன்றத் தேர்தலுக்கான தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டத்தைச் சிறப்பாக நடத்தி தி.மு.க. பொருளாளர் ஸ்டாலின் மனதில் இடம்பிடித்தவர். வேட்பாளர் பரிசீலனையின்போது, 'பிரபுவை ஜெயிக்க வைக்கிறோம். சீட் கொடுங்க’ என்று உத்தரவாதம் கொடுத்தாராம் நேரு. அதன் பிறகுதான் பிரபுக்கு சீட் வழங்கப்பட்டதாம். பெரம்பலூரைத் தாண்டி சுற்றுவட்டாரப் பகுதியிலும் இவர் பெயர் அறிமுகம் என்பது ப்ளஸ்.
கரூர்: சின்னசாமி
லோக்கல் தி.மு.க-வினர் எதிர்பார்த்ததுபோல் சின்னசாமிக்கே சீட் கொடுத்துள்ளது தி.மு.க. தலைமை. இவர் அ.தி.மு.க. சார்பாக இரண்டு முறை எம்.எல்.ஏ-வாக தேர்ந்தெடுக்கப்பட்டு, அமைச்சராகவும் இருந்தவர். 1999-ல் கரூர் தொகுதி எம்.பி-யாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டவர். அ.தி.மு.க. தலைமையுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கட்சியில் இருந்து ஓரங்கட்டப்பட்ட சின்னசாமி, 2010-ல் தி.மு.க-வில் இணைந்தார். இவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டதை அடுத்து, அ.தி.மு.க. அமைச்சர் செந்தில்பாலாஜியால் ஓரங்கட்டப்பட்ட அந்தக் கட்சியின் சீனியர்கள் பலரும் சின்னசாமியைச் சந்தித்து வாழ்த்துச் சொல்லிவருவதால், தெம்பாக இருக்கிறார்.
தூத்துக்குடி: பெ.ஜெகன்
பெ.ஜெகனுக்கு ப்ளஸ் மைனஸ் இரண்டுமே அவருடைய தந்தை என்.பெரியசாமிதான். 'மாவட்டத்தில் நிறைந்திருக்கிற கிறிஸ்தவர், இஸ்லாமியர் மக்களின் ஆதரவு ஏகமாக கிடைக்கும்’ என பெரியசாமி நம்புகிறார். ஆனால், கிறிஸ்தவ திருமண்டலத் தேர்தலில் தலையிட்டதன் விளைவாக கிறிஸ்தவ மக்களில் ஒரு தரப்பிடம் எதிர்ப்பைச் சம்பாதித்து வைத்திருக்கிறார் பெரியசாமி. அதனால், நூறு சதவிகித கிறிஸ்தவ மதத்தினரின் ஆதரவு கிடைக்குமா என்பது சந்தேகம்தான். அதேபோல், 'எந்தப் பதவி என்றாலும் பெரியசாமி குடும்பத்துக்குத்தானா?’ என்கிற அதிருப்திக் குரல்களும் கட்சியினர் மத்தியில் உரக்க ஒலிக்கிறது.
ஈரோடு: பவித்திரவள்ளி
சென்னை எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்தில் எம்.பி.ஏ. படித்தவர். 27 வயதான பவித்திரவள்ளி, திருப்பூர் மாவட்டம் வரதப்பன்பாளையத்தில் திருமணம் முடித்தவர். இவருடைய மாமியார் கிருஷ்ணவேணி காங்கயம் ஒன்றியத் தலைவராக 1996-ல் பதவி வகித்தவர். கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன் தி.மு.க. உறுப்பினர் ஆக்கப்பட்டவர் பவித்ரவள்ளி. முன்னாள் அமைச்சர் வெள்ளக்கோவில் சுவாமிநாதனின் ஆதரவு குடும்பம் என்பதால், ஸ்டாலின் பரிந்துரையில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு இருக்கிறார். ஈரோடு தொகுதியில் எத்தனை ஒன்றியங்கள் இருக்கின்றன, கட்சியில் யார் யாரெல்லாம் பொறுப்பு வகிக்கின்றனர் என்பதை பவித்திரவள்ளி தெரிந்துகொள்வதற்குள் தேர்தலே முடிந்துவிடும் என்று தி.மு.க. நிர்வாகிகள் சிலர் கிண்டல் அடிக்கின்றனர்.
காஞ்சிபுரம்: செல்வம்
காஞ்சிபுரம் அடுத்துள்ள ராஜகுளம் பகுதியில் உள்ள சிறுவேடல் கிராமத்தைச் சேர்ந்தவர். விவசாய குடும்பத்தில் பிறந்தவர். வாலாஜாபாத் ஒன்றிய இளைஞர் அணி துணை அமைப்பாளராக இருந்தவர். இப்போது மாவட்ட ஆதிதிராவிட நலக் குழு அமைப்பாளராக உள்ளார். கட்சியினரிடையே பெரிய அளவில் அறிமுகம் இல்லாததும், தேர்தல் வேலை செய்வதில் கட்சியினரிடையே மோதல்கள் நிலவுவதும் இவருக்குப் பெரிய பலவீனம். ஆனால், பெரும் பணக்காரர் ஒருவர் இந்தத் தொகுதியைக் கைப்பற்றிவிடத் துடித்தபோது சாதாரணக் கட்சிக்காரரான செல்வத்துக்குத் தொகுதியை வாங்கித் தந்தது முன்னாள் அமைச்சர் தா.மோ.அன்பரசன் என்கிறார்கள்.
புதுச்சேரி: ஏ.எம்.ஹெச்.நாஜிம்
புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின் காரைக்கால் பகுதியைச் சேர்ந்தவர். புதுச்சேரியில் எந்தக் கட்சி ஆட்சி அமைத்தாலும் அவர்களோடு நட்பு பாராட்டி சொந்தக் காரியங்களை சாதித்துக்கொள்வது நாஜிமின் ஸ்டைல். சமீபத்தில் காரைக்காலில் பாலியல் பலாத்கார சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண்களின் கேரக்டர் குறித்து விமர்சனம் செய்து சர்ச்சையில் சிக்கியவர். காரைக்கால் பகுதி புறக்கணிக்கப்படுவதாக அந்தப் பகுதியைச் சேர்ந்த அனைத்து கட்சியினரையும் ஒன்றுதிரட்டி ஆட்சியாளர்களை கதிகலங்கச் செய்தவர். இதனால், காரைக்கால் மக்களின் ஏகோபித்த ஆதரவை பெற்ற அளவுக்கு, புதுச்சேரி பகுதி மக்களின் அதிருப்திகளையும் சம்பாதித்து வைத்திருக்கிறார்.
கடலூர்: நந்தகோபாலகிருஷ்ணன்
ஜனதாதளத்தில் அரசியல் பயணத்தைத் தொடங்கி... காங்கிரஸ், தி.மு.க., ம.தி.மு.க., பா.ம.க., அ.தி.மு.க. என பல கட்சிகளில் கூடாரம் அமைத்து, மீண்டும் 'யு டர்ன்’ அடித்து தி.மு.க-வில் ஐக்கியம் ஆனவர். கடந்த சட்டமன்றத் தேர்தலிலும், உள்ளாட்சித் தேர்தலிலும் போட்டியிட்ட கட்சியின் எதிர்கோஷ்டியினர் தோற்க வேண்டி, பல உள்ளடி வேலைகளைச் செய்தார் என்ற குற்றச்சாட்டு உள்ளது. மருத்துவரான இவர் கட்சிகாரர்களுக்காக காசு செலவு செய்தது இல்லை என்ற குற்றச்சாட்டு பலமாக உள்ளது. உள்ளாட்சித் தேர்தலில் தனது சொந்த ஊரான மருங்கூரில் போட்டியிட்டபோது 3-ம் இடமே கிடைத்தது. அந்த அளவுக்கு மக்கள் செல்வாக்கு?!
நாமக்கல்: காந்திச்செல்வன்
எம்.ஏ., எம்.பில். படித்தவர். நாமக்கல் மாவட்டச் செயலாளராக இருப்பதாலும், மத்திய சுகாதாரத் துறை இணை அமைச்சராகவும் இருந்ததாலும், மக்களிடம் நல்ல அறிமுகம் உண்டு. நாமக்கல், கவுண்டர் ஏரியா. இவரும் அதே சமூகத்தைச் சேர்ந்தவர். பெரிய அளவில் ஊழல் குற்றச்சாட்டுகளில் அகப்படாதவர்.  தொகுதி பக்கம் வந்தது இல்லை என்றும் சுகாதாரத் துறை இணை அமைச்சராக இருந்தும் நாமக்கல் பொது மருத்துவமனை அவல நிலையில்தான் இருக்கிறது என்றும் புகார் வாசிக்கிறார்கள் தொகுதிவாசிகள்.
விழுப்புரம்: கோ.முத்தையன்
தஞ்சாவூரில் பிறந்து வளர்ந்த முத்தையன், மருத்துவம் படித்தவர். விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருவத்துவராகப் பணியைத் தொடங்கி, இப்போது தனியாக எலும்பு முறிவு மருத்துவமனை நடத்திவருகிறார். மேலும், மாவட்ட இலக்கிய அணி புரவலராகவும் இருக்கிறார். மூன்று வருடங்ளுக்கு முன்பு கட்சியில் சேர்ந்த இவருக்கு, பொன்முடியின் மகன் கௌதம சிகாமணியின் தயவால் சீட் கிடைத்துள்ளது. இதனால், தொகுதியை எதிர்பார்த்துக் காத்திருந்தவர்களும், அவர்களின் ஆதரவாளர்களும் ஏக கடுப்பில் உள்ளனர்.  
ஆரணி: ஆர்.சிவானந்தம்
மாவட்ட  துணை அமைப்பாளராக இருக்கும் இவர், ரியல் எஸ்டேட் மற்றும் அரிசி ஆலைகளை நடத்திவருகிறார். 1996 மற்றும் 2006 என இரண்டு முறை எம்.எல்.ஏ-வாக இருந்தவர். வன்னியர் சமூகத்தைச் சேர்ந்தவர். கடந்த முறை எம்.எல்.ஏ-வாக இருந்தபோது, தலித்கள் மீது குண்டர் சட்டம் போட்டுப் பலவிதமான அடக்குமுறைகளை கையாண்டார் என்ற குற்றச்சாட்டு உள்ளது. அதனால், 2011 சட்டமன்றத் தேர்தலில் இவருக்கு விடுதலைச் சிறுத்தைகள் தேர்தல் வேலைசெய்ய மறுத்ததோடு, தே.மு.தி.க வேட்பாளர் பாபு முருகவேலை வெற்றிபெற வைத்தனர். இந்த முறையும் அவர்களது ஒத்துழைப்பு கிடைக்குமா என்பது சந்தேகமே!

 ஸ்ரீபெரும்புதூர்: ஜெகத்ரட்சகன்
மாணவப் பருவத்திலேயே தி.மு.க-வில் தனது அரசியல் வாழ்க்கையைத் தொடங்கியவர். அ.தி.மு.க. உதயமானபோது, உத்திரமேரூர் எம்.எல்.ஏ. வேட்பாளராக களம் இறக்கப்பட்டு வெற்றிபெற்றவர். ஆற்றுப்பகுதியில் மணல் அள்ளப்படுவதாக உத்திரமேரூர் மக்கள் இவரிடம் கொடுத்த மனுவை போகும் வழியில் ஆற்றில் வீசிவிட்டுச் சென்றதால், அடுத்த முறை இவர் வந்தபோது சட்டையை அவிழ்த்து நிற்கவைத்துவிட்டதாக ஒரு பழைய சம்பவத்தைச் சொல்கிறார்கள். எம்.ஜி.ஆர். மறைவுக்குப் பின்பு ஜானகி அணியில் இருந்தவர், பின்பு தி.மு.க-வில் இணைந்தார். பிறகு செங்கல்பட்டு தொகுதியில் ஒருமுறை, அரக்கோணத்தில் இரண்டு முறை என மூன்று முறை தி.மு.க. சார்பாக எம்.பி-யாக வெற்றிபெற்றுள்ளார். பாரத் பல்கலைக்கழகத்தின் வேந்தர். வாலாஜாபாத் அருகே ஒரு மதுபான கம்பெனியும் உள்ளது. எந்த சர்ச்சைகள் கிளம்பினாலும், தனது 'செல்வாக்கால்’ அவற்றை எடுபடாமல் செய்துவிடுவார். சகல மட்டத்திலும் வைட்டமின் 'ப’ புகுந்து விளையாடுவதால், கட்சியினர் குஷியில் உள்ளனர்.
கன்னியாகுமரி: எஃப்.எம்.ராஜரத்தினம்
1984-ல் குளச்சல் தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்டு எம்.எல்.ஏ. ஆனவர் ராஜரத்தினம். அதன் பின்னர் தி.மு.க-வில் இணைந்தவர், தற்போது தலைமைச் செயற்குழு உறுப்பினராகவும், குறுந்தன்கோடு ஒன்றியச் செயலாளராகவும் இருக்கிறார். குறுந்தன்கோடு உள்ளாட்சித் தேர்தலில் யூனியன் சேர்மன் பதவிக்குப் போட்டியிட்டு மூன்று முறை தோற்றதும், இதுநாள் வரை குமரி மாவட்ட தி.மு.க. தொண்டர்களிடம் நெருக்கம்  இல்லாததும் இவரது மைனஸ்.
திண்டுக்கல்: காந்திராஜன்
பாரம்பரியமான காங்கிரஸ் குடும்பத்தைச் சேர்ந்தவர் காந்திராஜன். 63 வயதாகும் இவர் கல்லூரியில் படிக்கும் காலத்தில் இருந்து அ.தி.மு.க. உறுப்பினர். ஜெ. அணியில் வேடச்சந்தூர் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். அதன் பிறகு அ.தி.மு.க-வில் அதே தொகுதியில் போட்டியிட்டு வெற்றியும் பெற்றார். 1994 முதல் 1996 வரை தமிழக சட்டமன்றத் துணை சபாநாயகராகவும் இருந்தார். 2006-ம் ஆண்டு அ.தி.மு.க-வில் சீட் கிடைக்காததால், தி.மு.க-வுக்குத் தாவினார். இப்போது தி.மு.க-வில் தலைமை செயற்குழு உறுப்பினராக இருக்கிறார்.
திருவண்ணாமலை: சி.என்.அண்ணாதுரை
தி.மு.க. மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளராக இருக்கும் அண்ணாதுரை கான்ட்ராக்டர் தொழில் செய்துவருகிறார். கடந்த ஆண்டு படவேடு கிராமத்தில் நடந்த இளைஞர்களுக்கான பயிற்சிப் பட்டறையை சிறப்பாக நடத்திக்காட்டியதன் மூலம், ஸ்டாலின் மனதில்  ஒட்டிக்கொண்டார். முன்னாள் அமைச்சர் பிச்சாண்டி, முன்னாள் நகர்மன்றத் தலைவர் ஸ்ரீதர் என கழகத்தின் முன்னோடிகள் பலர் இருந்தாலும், எ.வ.வேலுவின் தீவிர விசுவாசியாக இருப்பதால் மட்டுமே இவருக்கு சீட் வழங்கப்பட்டுள்ளது.
மத்திய சென்னை: தயாநிதி மாறன்
கடந்த இரண்டு முறை எம்.பி-யாக இருக்கும் தயாநிதி மாறனுக்கே இந்த முறையும் மத்திய சென்னை வழங்கப்பட்டுள்ளது. தயாநிதி மாறன் தேர்தலில் நிற்க மாட்டார் என்றே கட்சிக்காரர்கள் நினைத்தார்கள். ஆனால், கடந்த ஆறு மாதங்களாக இறங்கி வேலைகள் பார்க்க ஆரம்பித்தார். தலைவர் குடும்பத்தைச் சேர்ந்தவர் என்பதால் கட்சிக்காரர்கள் இறங்கி வேலை பார்ப்பார்கள் என்பதும் சிறுபான்மையினர் வாக்குகளும் இவரது பலம்.
ராமநாதபுரம்: முகம்மது ஜலீல்
70 வயதாகும் ஜலீல் கட்சியின் ஆரம்ப கால உறுப்பினர். பணத்துக்குக் குறைவில்லாத செல்வந்தர் என்பதால் மட்டுமே இவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள தேவிப்பட்டினம் இவரது சொந்த ஊராக இருந்தாலும், வசிப்பது என்னவோ மதுரையில்தான். பொதுமக்கள், கட்சிக்காரர்கள் என யாரிடமும் நெருக்கமான பழக்கம் இல்லை. பணம் மட்டுமே கைகொடுக்கும் என்ற நம்பிக்கையில் இருக்கிறார் ஜலீல்.
சிவகங்கை: சுப.துரைராஜ்
மாநில தி.மு.க. பொதுக்குழு உறுப்பினராக இருப்பவர் சுப.துரைராஜ். எம்.ஜி.ஆர். காலத்தில் அ.தி.மு.க-வில் எம்.எல்.ஏ-வாக இருந்தவர். தா.கிருஷ்ணன் மாவட்டச் செயலாளராக இருந்தபோது தி.மு.க-வுக்கு வந்தவர். வசதி வாய்ப்புகளுக்குக் குறைவில்லாதவர். மணல் பிசினஸில் கொடிகட்டிப் பறந்த பிரமுகர் ஒருவர்தான் தலைமையிடம் பேசி இவருக்கு சீட் வாங்கித்தந்ததாக சிவகங்கை முழுக்கவே பேச்சு.
தேனி: பொன்.முத்துராமலிங்கம்
மூத்த அரசியல்வாதி பொன்.முத்துராமலிங்கம். கட்சிக்காரர்களை பெயர் சொல்லி அழைக்கும் அளவுக்கு எல்லா மட்டத்திலும் அறிமுகமானவர். மதுரை மாவட்டத்துக்காரர். மதுரையில் நின்றால் தேவையில்லாத சிக்கல் வரும் என்பதால், தேனியைக் கேட்டு வாங்கியிருக்கிறார். கம்பம் செல்வேந்திரனை நிறுத்துவதாகத்தான் முதலில் நினைத்தார்களாம். அவர் செலவுசெய்ய பணம் கிடையாது என்று சொன்னதால் வாய்ப்பு பொன்.முத்துவுக்குப் போனது.
மதுரை: வேலுச்சாமி
வழக்கறிஞரான வேலுச்சாமியின் பூர்வீகம் ராமநாதபுரம் மாவட்டம். மதுரை நீதிமன்றத்தில் வழக்கறிஞராகப் பணியாற்றுகிறார். கட்சிக் காரர்களின் வழக்குகளை காசு வாங்காமல் நடத்தும் வழக்கறிஞர். 1989-ல் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். 1996-ம் ஆண்டு மதுரை கிழக்குத் தொகுதியில் எம்.எல்.ஏ. ஆனார். மதுரை மாநகர் மாவட்டச் செயலாளராகவும் 10 ஆண்டுகள் இருந்துள்ளார். அழகிரிக்கு அடிபணியாதவர் என்பதே இவரது வீழ்ச்சிக்குக் காரணமாக இருந்தது. அதே காரணம்தான் இப்போது அவருக்கு சீட் கிடைத்ததற்கும்!
அரக்கோணம்: என்.ஆர்.இளங்கோ
சோளிங்கர் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ-வான ரங்கநாதனின் மகன்தான் இளங்கோ. உயர் நீதிமன்ற வக்கீலாக இருக்கும் இவர், 2ஜி வழக்கை கவனித்துக்கொண்டார். அதற்குப் பிரதிபலனாக சீட் வழங்கப்பட்டுள்ளது என்கிறார்கள். இப்போது சென்னையில் வசிக்கும் இவர், சீட் கேட்டு விருப்ப மனுவும் தாக்கல் செய்யவில்லை; நேர்காணலிலும் கலந்துகொள்ளவில்லையாம். புதுமுகங்களுக்கு வாய்ப்பு வழங்க வேண்டும் என்ற அடிப்படையில், இவருக்கு சீட் வழங்கப்பட்டுள்ளது.
நாகப்பட்டினம்: ஏ.கே.எஸ்.விஜயன்
மூன்று முறை எம்.பி-யாக இருந்த ஏ.கே.எஸ்.விஜயன், நான்காவது முறையும் சீட் வாங்கிவிட்டார். ஸ்டாலினுக்கு நெருக்கமானவர். இவரது அப்பா சுப்பையா கம்யூனிஸ்ட்காரர். அதனால், ஒவ்வொரு முறையும் கம்யூனிஸ்ட்காரர்களின் கரிசனம் விஜயனுக்குக் கிடைக்கும். இதுவரை தொகுதிக்கு பெரிய அளவில் திட்டங்கள் எதையும் கொண்டுவரவில்லை என்பதே விஜயனுக்கு வீக். 'ஒரே ஆளுக்கே வாய்ப்பு கொடுக்குறாங்கப்பா... நாம எல்லாம் கட்சிக்கு உழைச்சாலும் எந்தப் பிரயோசனமும் இல்ல!’ என்ற வருத்தக் குரல்கள் நாகை தி.மு.க-வில் பலமாகவே ஒலிக்கிறது.
வட சென்னை: கிரிராஜன்
சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் கிரிராஜன். மாணவப் பருவத்தில் இருந்தே தி.மு.க. உறுப்பினர். 2001-ல் சென்னை மாநகராட்சி கவுன்சிலராக இருந்தவர். ஸ்டாலினின் தீவிர ஆதரவாளர். அதுவே இவருக்கு இந்த வாய்ப்பைக் கொடுத்துள்ளது. முன்பு எம்.பி-யாக இருந்த டி.கே.எஸ்.இளங்கோவன் தொகுதிக்காக வளர்ச்சிப் பணிகள் எதையும் செய்யவில்லை. தொகுதிக்குள்ளும் தலைகாட்டவில்லை. அது கிரிராஜனுக்கு எதிராகத் திரும்பவும் வாய்ப்புள்ளது.
தர்மபுரி: தாமரைச்செல்வன்
சிட்டிங் எம்.பி-யான தாமரைச்செல்வனுக்கே மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. 86-ல் தர்மபுரி இளைஞர் அணி பொறுப்பாளராக நியமிக்கப்பட்டு, பின்னர் பல்வேறு பொறுப்புகள் வகித்திருக்கிறார். வழக்கறிஞரான இவர் ஜெயலலிதாவின் சொத்துக்குவிப்பு வழக்கை தி.மு.க. சார்பாக கவனித்துவருபவர் என்ற வகையில், தலைமையின் நம்பிக்கையைப் பெற்றவராக இருக்கிறார். மாவட்டப் பொறுப்பாளர்களுக்கும் முன்னுரிமை அளிக்காதவர் என்பது, இவருக்கு கட்சியினர் மத்தியில் மைனஸ் ஆக இருக்கிறது.
கோயம்புத்தூர்: கணேஷ்குமார்
நாயுடு சமூகத்தைச் சேர்ந்தவருக்கு வாய்ப்பு தரலாம் என்ற முடிவுதான், கணேஷ்குமாருக்கு சீட் கிடைத்ததற்கான காரணமாம். அது தவிர கட்சித் தலைமையோடு நெருங்கிய தொடர்பும் இவருக்குத் தேர்தலை சந்திக்க வாய்ப்பு அளித்திருக்கிறது. பெரிய அளவு அதிருப்தி இல்லாவிட்டாலும், மாநகரில் நிலவும் கோஷ்டிப்பூசலை சமாளிக்க வேண்டியிருக்கும்.
திருச்சி: அன்பழகன்
திருச்சி மாநகரச் செயலாளரும் முன்னாள் துணை மேயருமான அன்பழகனை வேட்பாளராகக் களமிறக்கியுள்ளது தலைமை. ஆரம்பத்தில் சைக்கிள் கடை வைத்திருந்து, அன்பில் பொய்யாமொழியால் அரசியலுக்கு அறிமுகம் செய்யப்பட்ட அன்பழகன், நகர இளைஞர் அணி அமைப்பாளர், மாவட்ட இளைஞர் அணி அணி அமைப்பாளர்... எனப் படிப்படியாக வளர்ந்து இப்போது மாநகரச் செயலாளராக இருக்கிறார். கே.என்.நேருவின் தீவிர விசுவாசி இவர்.
கள்ளக்குறிச்சி: மணிமாறன்
தலைமையோடு உள்ள நெருக்கத்தைப் பயன்படுத்தி தன் மகன் மணிமாறனுக்கு சீட் வாங்கிக்கொடுத்துள்ளார் பொன்.ராமகிருஷ்ணன். 25 ஆண்டுகளாக அரசு பணியில் இருந்த மணிமாறன், வீ.ஆர்.எஸ். வாங்கிக்கொண்டு தியாகதுருகத்தின் மவுன்ட் பார்க் என்ற உறைவிடப் பள்ளியை நடத்திவருகிறார். தொகுதியில் இவருக்கு அறிமுகம் குறைவுதான் என்றாலும், தந்தையின் பெயரே மணிமாறனைக் கரையேற்றும் என்கிறார்கள். ஆனால், பொன்முடி ஆதரவாளர்கள் முழு மூச்சுடன் தேர்தல் வேலை பார்ப்பார்களா என்பது சந்தேகமே!
தஞ்சாவூர்: டி.ஆர்.பாலு
ஸ்டாலினின் எதிரியாக இருந்து, தஞ்சையை வாங்க வேண்டும் என்பதற்காக ஆதரவாளராக மாறியவர் டி.ஆர்.பாலு. பழனிமாணிக்கத்தை வீழ்த்தியதன் மூலமாக தஞ்சை இவருக்குத் தாரைவார்த்துக் கொடுக்கப்பட்டுவிட்டது. தென் சென்னை, ஸ்ரீபெரும்புதூர் என்று தொகுதிகள் மாறியவர், இப்போது தஞ்சையில் போட்டியிடுகிறார். எதிர்ப்புக் காட்டவும் கொடும்பாவி எரிக்கவும் முயற்சித்தவர்களைச் சமாதானப்படுத்தவே பாலுவுக்கு மூச்சு முட்டிவிடும் போலிருக்கிறது.

ad

ad