- பந்தை பவுண்டரிக்கு விளாசும் ஸ்டிர்லிங்.
இருபது ஓவர் உலகக் கோப்பை தகுதிச் சுற்று ஆட்டத்தில் ஸ்டிர்லிங் அதிரடியாக அரைசதம் அடித்து உதவ, ஜிம்பாப்வே அணியை 3 விக்கெட் வித்தியாசத்தில் அயர்லாந்து அணி வீழ்த்தியது.
வங்கதேசத்தின் சில்ஹெட்டில் திங்கள்கிழமை நடைபெற்ற குரூப் பி பிரிவு தகுதிச் சுற்று ஆட்டத்தில் இரு அணிகளும் மோதின.
டாஸ் வென்ற அயர்லாந்து அணி ஃபீல்டிங்கைத் தேர்வு செய்தது.
ஜிம்பாப்வே அணியின் கேப்டன் பிரண்டன் டெய்லர் 46 பந்துகளில் 6 பவுண்டரி 2 சிக்ஸர்களின் உதவியுடன் 59 ரன்கள் அடித்தார். கடைசி கட்டத்தில் சிகும்பரா மற்றும் மருமா ஆகியோர் அதிரடியில் இறங்க ஜிம்பாப்வே அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 163 ரன்கள் எடுத்தது.
சவாலான இலக்கை நோக்கி களமிறங்கிய அயர்லாந்து அணிக்கு கேப்டன் வில்லியம் போர்டர்ஃபீல்டு மற்றும் தொடக்க வீரர் ஸ்டிர்லிங் அசத்தல் தொடக்கம் தந்தனர். இருவரும் இணைந்து முதல் விக்கெட்டுக்கு 8.2 ஓவர்களில் 80 ரன்கள் அடித்தனர். 34 பந்துகளை சந்தித்த ஸ்டிர்லிங் 9 பவுண்டரி 1 சிக்ஸரின் உதவியுடன் 60 ரன்கள் குவிக்க போர்டர்ஃபீல்டு தன் பங்குக்கு 23 பந்துகளில் 31 ரன்கள் அடித்தார்.
இருவரும் ஆட்டமிழந்த பின் அயர்லாந்து அணியின் மிடில் ஆர்டரை பதம் பார்த்தார் ஜிம்பாப்வே வேகப்பந்து வீச்சாளர் தினஷே பன்யங்கரா. குறிப்பாக கடைசி ஓவரில் மட்டும் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இருப்பினும் கடைசி ஓவரின் கடைசி பந்தில் வெற்றி இலக்கான 164 ரன்களை எடுத்து அயர்லாந்து வெற்றி பெற்றது.
பயிற்சியில் பாகிஸ்தான் வெற்றி: நியூஸிலாந்து - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான பயிற்சி ஆட்டம் மிர்பூரில் திங்கள்கிழமை நடந்தது. முதலில் பேட் செய்த நியூஸிலாந்து அணி 145 ரன்கள் எடுத்தது. பின்னர் களமிறங்கிய பாகிஸ்தான் அணி 4 விக்கெட்டுகளை இழந்து 149 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.