புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

18 மார்., 2014

இந்திய மாக்கடலின் பாதுகாப்பு வலைப்பின்னலாக 'இந்தியாவின் முத்துமாலை'

இவ்வாண்டு இடம்பெற்றுள்ள மிலான் பயிற்சி நடவடிக்கையானது கிழக்காபிரிக்கா தொடக்கம் மேற்கு பசுபிக் வரை
விரிவுபடுத்தப்பட்டமையானது இந்திய-பசுபிக் பிராந்தியத்தில் இந்தியா தனது செல்வாக்கை விரிவுபடுத்துகின்றது என்பதைச் சுட்டிநிற்கிறது.

இவ்வாறு அவுஸ்திரேலியாவின் சிட்ணியை தளமாகக் கொண்ட The Interpreter* இணையத்தளத்தில் Dr David Brewster** எழுதியுள்ள ஆய்வுக் கட்டுரையில் தெரிவித்துள்ளார். அதனை புதினப்பலகைக்காக மொழியாக்கம் செய்தவர் நித்தியபாரதி.

சிறிலங்கா, மாலைதீவு மற்றும் இந்தியா ஆகிய மூன்று நாடுகளும் இணைந்து இந்திய மாக்கடல் பிராந்தியத்தின் பாதுகாப்புத் தொடர்பில் மேற்கொண்ட முக்கூட்டு நடவடிக்கையுடன் இந்திய மாக்கடலிலுள்ள தீவுளான செச்செல்ஸ் மற்றும் மொறிசியஸ் போன்றன இணைந்துள்ளதாக மார்ச் 07 அன்று இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவ் சங்கர் மேனன் அறிவித்திருந்தார்.

இந்தியாவின் தலைமையில் இந்திய மாக்கடல் பிராந்திய நாடுகள் மத்தியில் மேற்கொள்ளப்படும் பாதுகாப்புச் செயற்பாடுகளுக்கு கணிசமானளவு ஒத்துழைப்பு கிடைக்கப் பெற்றுள்ளது என்பதற்கான புதிய சமிக்கையாக மொறிசியஸ் மற்றும் செச்செல்ஸ் தீவுகள் இணைந்து கொண்டமை கருதப்படுகிறது.

'இந்திய மாக்கடல் பிராந்தியத் தீவுகளின் பாதுகாப்பு ஏற்பாடுகளின் வலைப்பின்னலாக' இந்தியா இருக்க வேண்டும் என கடந்த ஆண்டு இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் அறிவித்திருந்தார். 'இந்தியப் பிராந்தியத்தின்' எல்லைகள் எவை என்பது தொடர்பாக திரு.சிங் குறிப்பிடாவிட்டாலும் கூட, இந்திய மாக்கடல் பிராந்திய நாடுகளையே பிரதமர் குறிப்பிட்டுள்ளார் என்பது மிகத் தெளிவானதாகும்.

சில ஆண்டுகளாக இந்தியாவுடன் சிறிலங்கா பல்வேறு கூட்டுக் கடற்பாதுகாப்பு ஒப்பந்தங்களை மேற்கொண்டுள்ளது. 2012ல் இந்த ஒப்பந்தமானது மாலைதீவையும் உள்ளடக்கி முக்கூட்டு ஒப்பந்தமாக விரிவுபடுத்தப்பட்டது. தற்போது இந்த முத்தரப்பு ஒப்பந்தத்துடன் செச்செல்ஸ் மற்றும் மொறிசியஸ் தீவுகள் இணைந்துள்ளன. இதன்மூலம் புதிய கடற்பாதுகாப்பு கூட்டு நடவடிக்கையை மேற்கொள்ள முடியும். இப்புதிய நடவடிக்கையில் இந்து மாக்கடலின் மத்திய மற்றும் மேற்கு எல்லைகளும் உள்ளடக்கப்படும். எதிர்காலத்தில் இக்கூட்டு நடவடிக்கையானது வங்காள விரிகுடா வரை விரிவுபடுத்தப்படலாம் அல்லது வங்காள விரிகுடா நாடுகளுடன் இதையொத்த கூட்டு உடன்படிக்கை ஒன்று மேற்கொள்ளப்படலாம் என மேனன் குறிப்பிட்டிருந்தார்.

இந்திய மாக்கடல் பிராந்தியத் தீவுகளின் பாதுகாப்பு உத்தரவாத சக்தியாக நீண்ட பத்தாண்டுகளாக இந்தியா விளங்கிவருகிறது. 1980களில், இந்தியா இத்தீவுகளின் பாதுகாப்பில் தலையீடு செய்தது. மொரிசியசின் பாதுகாப்பில் 1983ல் இந்தியா தலையீடு செய்தது. இதேபோன்று உள்நாட்டுக் கிளர்ச்சிகளைத் தடுப்பதற்காக 1986ல் செச்செல்சிலும், 1988ல் மாலைதீவிலும் பின்னர் 1987-1990வரை சிறிலங்காவிலும் இந்தியா தனது பாதுகாப்பு ஏற்பாடுகளை முன்னெடுத்திருந்தது. சிறிலங்காவில் தமிழ்ப் புலிகளுக்கு எதிரான யுத்தம் நீடித்த காலப்பகுதியில் இந்தப் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக சிறிலங்கா அரசாங்கத்தால் முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைகளுக்கு இந்தியா தனது கணிசமானளவு பங்களிப்பை வழங்கியது.

1980களிலிருந்து, இந்த நாடுகளுக்கு கடல்சார் பாதுகாப்புக்களை வழங்குகின்ற நடவடிக்கைகளை இந்தியா மெதுவாக மேற்கொள்ளத் தொடங்கியது. சிறிலங்கா, மாலைதீவு, மொறிசியஸ், செச்செல்ஸ் நாடுகளின் கடற்படையினருக்கும் எல்லைப் பாதுகாப்புப் படையினருக்கும் கடற்பாதுகாப்புப் படகுகள், பயிற்சிகள், மூத்த இராணுவ ஆலோசனைகள், உலங்குவானூர்திகள் போன்றவற்றை இந்தியா வழங்கியது. கடந்த சில ஆண்டுகளாக, மாலைதீவு, செச்செல்ஸ் மற்றும் மொறிசியஸ் தீவுகளில் இந்தியா கரையோரக் கண்காணிப்பு வலைப்பின்னல்களை உருவாக்கிக் கொடுத்துள்ளது. மாலைதீவு மற்றும் மொறிசியஸ் தீவுகளில் இந்தியா பிறிதொரு விதத்தில் தன பாதுகாப்பு நடவடிக்கையை மேற்கொள்வதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளதாக சந்தேகிக்கப்படுகிறது.

கடற் பயங்கரவாதம், கடற்கொள்கை மற்றும் சட்டரீதியற்ற மீன்பிடி போன்றவற்றை முறியடிக்கும் வகையில் தகவல்களைப் பரிமாறுதல் உபகரணங்களைப் பரிமாறுதல் போன்றன தற்போது புதிதாக உருவாக்கப்பட்டுள்ள இந்திய பாதுகாப்பு கூட்டு நடவடிக்கையில் முக்கியப்படுத்தப்பட்டுள்ளது. இந்திய மாக்கடல் பிராந்தியத்தின் ஊடாக இந்திய பாதுகாப்பிற்கான பங்களிப்பை நிறைவேற்றுவதற்கு நீண்ட காலம் தேவைப்படும். இந்தப் பிராந்தியத்தில் தற்போது சீனாவின் பிரசன்னம் அதிகரித்துவரும் நிலையில், இந்தியாவின் புதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படுகிறது. ஜனவரியில் இந்திய மாக்கடலின் கிழக்கில் சீனாவின் மூன்று கடற்கலங்கள் கண்காணிப்பில் ஈடுபடுத்தப்பட்டன. சீனாவின் இவ்வாறான நடவடிக்கை
களை முறியடிக்கும் விதத்தில் இந்தியா தனது பாதுகாப்பு நடவடிக்கையை விரிபடுத்த வேண்டிய தேவையேற்பட்டுள்ளது.

வங்காள விரிகுடாவில் உள்ள இந்தியாவின் அந்தமான் தீவுகளின் பிளேயர் துறைமுகத்தில் இந்தியாவின் Exercise Milan பாதுகாப்புப் பயிற்சி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்ட போது சீனக் கடற்கலங்கள் இதனைக் குழப்பும் நடவடிக்கையில் ஈடுபட்டன. இந்தக் கடற்பாதுகாப்பு நடவடிக்கையில் இந்தியாவுடன் மேலும் 16 நாடுகளின் கடற்படையினர் மற்றும் எல்லைப் பாதுகாப்புப் படையினர் ஈடுபட்டிருந்தனர். தென்னாசிய நாடுகளான பங்களாதேஸ், சிறிலங்கா மற்றும் மாலைதீவு போன்றனவும் தென்கிழக்காசிய நாடுகளான மியான்மார், தாய்லாந்து, மலேசியா, இந்தோனேசியா, சிங்கப்பூர், கம்போடியா மற்றும் பிலிப்பீன்ஸ் போன்றனவும், அவுஸ்திரேலியா, நியூசிலாந்து மற்றும் இந்திய மாக்கடலின் மேற்கு எல்லை நாடுகளான கென்யா, மொறிசியஸ், செச்செல்ஸ் மற்றும் தன்சானியா போன்ற நாடுகள் இந்தக் கடற்பாதுகாப்பு பயிற்சி நடவடிக்கையில் பங்குபற்றின. இது இவ்வாண்டு இடம்பெற்ற மிகப்பெரிய இந்திய-பசுபிக் கூட்டு நடவடிக்கையாகக் காணப்படுகிறது.

தொழினுட்ப அறிவை வழங்குவதற்கு அப்பால், இந்தியக் கடல் சார் இராஜதந்திரப் பயிற்சிநெறியாக Exercise Milan அடிப்படையில் காணப்படுகிறது. 1995ல் இந்தப் பயிற்சி ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து, பங்குபற்றும் நாடுகளின் மூத்த கடற்பாதுகாப்பு அதிகாரிகள் மத்தியில் நல்லுறவையும் நம்பிக்கையையும் கட்டியெழுப்புவதை நோக்காகக் கொண்டு இந்தப் பயிற்சி நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.

மிகப் பெரிய சக்தியாக இந்தியா வளர்ந்து வரும் நிலையில் இது தனது மூலோபாய நலனை விரிவுபடுத்துவதை 'மிலான் பயிற்சி நடவடிக்கை' முன்னுரிமைப்படுத்துகிறது. இந்திய மாக்கடல் பிராந்தியத்திலும் அதற்கப்பாலும் மிகப்பெரிய பாதுகாப்பு ஒத்துழைப்பை வழங்குவதில் இந்தியா ஆர்வமாக உள்ளது. இந்தியாவின் அதிகரித்து வரும் 'மென்மையான' இராணுவ அதிகாரத்தை வெற்றியாக்குவதில் மிலான் பயிற்சி நடவடிக்கை மிக முக்கிய பங்களிப்பை வழங்குகிறது.

இவ்வாண்டு இடம்பெற்றுள்ள மிலான் பயிற்சி நடவடிக்கையானது கிழக்காபிரிக்கா தொடக்கம் மேற்கு பசுபிக் வரை விரிவுபடுத்தப்பட்டமையானது இந்திய-பசுபிக் பிராந்தியத்தில் இந்தியா தனது செல்வாக்கை விரிவுபடுத்துகின்றது என்பதைச் சுட்டிநிற்கிறது.

தனது பிராந்தியத்தில் இந்தியா ஒத்துழைப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கும் சீனாவின் ஒருதலைப்பட்சமான தலையீடுகளுக்கும் இடையில் முரண்பாடு ஏற்பட முடியாது. இந்திய மாக்கடல் பிராந்தியத்தில் சீனாவின் பாதுகாப்பை விட இதன் மூலோபாய பலவீனமானது அதிகமாக உள்ளது என்பதை சீனாவின் ஒருதலைப்பட்ச நகர்வு சுட்டிநிற்பதாக விவாதிக்க முடியும்.

செச்சல்சின் கடல்சார் வளங்களைப் பயன்படுத்துவதற்காக செச்செல்ஸ் 'நீலப் பொருளாதாரம்' என்கின்ற புதிய உடன்படிக்கையை எட்டியதைத் தொடர்ந்து, கடந்த மாதம் செச்செல்ஸ் தற்போது கூட்டு கடற்பாதுகாப்பு நடவடிக்கையில் பங்காளியாக மாறியுள்ளதாக இந்தியா அறிவித்தது. பொருளாதார அபிவிருத்தியை முன்னெடுக்கும் நோக்குடன் செச்செல்சும் மொறிசியசும் 'நீலப் பொருளாதாரம்' என்கின்ற நடவடிக்கையில் ஈடுபடுகின்றன. மிகப் பெரிய பொருளாதார வலயங்களைக் கொண்டுள்ள மொறிசியஸ் மற்றும் மாலைதீவுடன் நீலப் பெருளாதாரப் பங்காளியாக இந்தியாவும் உள்நுழையலாம்.

இந்திய மாக்கடல் பிராந்தியத்தின் ஐந்து நாடுகள் மத்தியில் தற்போது மேற்கொள்ளப்படும் புதிய கடற்பாதுகாப்பு ஏற்பாடுகள் இதன் பாதுகாப்பு முன்னெடுப்புக்களின் மிகப் பெரிய நகர்வாக நோக்கப்படுகிறது. இந்திய மாக்கடலின் பாதுகாப்பு ஏற்பாடுகளின் தலைமைப் பொறுப்பை முதன்முலாக இந்தியா தற்போது ஏற்றுள்ளது. இவ்வாறான பாதுகாப்பு ஏற்பாடுகள் வங்காள விரிகுடா நாடுகளுக்கு விரிவுபடுத்துவதற்கான சாத்தியப்படுகள் தென்படும் நிலையில், எமது பிராந்தியத்தில் இந்தியா மேலும் மேலும் புதிய பாதுகாப்பு சார் பங்களிப்பை வழங்குவதற்கான உறுதியான நிலையை எட்டியுள்ளது. நன்றி புதினபலகை

*The Interpreter is published by the Lowy Institute for International Policy, an independent, nonpartisan think tank based in Sydney.

**Dr David Brewster is with the Strategic and Defence Studies Centre at the Australian National University, where he specializes in South Asian and Indian Ocean strategic affairs. He is also a Senior Maritime Security Fellow at the Indian Council on Global Relations, Mumbai, and a Fellow with the Australia India Institute.

ad

ad