புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

11 மே, 2014




மிழர்களின் பழமையும் பண்பாடும், காதலும் கொண்ட வீர விளையாட்டான மஞ்சு விரட்டால் புகழ்பெற்ற அலங்காநல்லூர், பாலமேடு, சிறாவயல், கல்லல், கண்டிப்பட்டி, இருமதி, தெண்ணீர் வயல், அமராபதி, சிங்கம்புணரி உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட கிராமங்களில் வாழும் மக்கள் 7-5-14 மாலை முதல் தங்கள் வீடுகளில் கறுப்புக்கொடி ஏற்றி, தங்கள் துக்கத்தை, வேதனையை, எதிர்ப் பைத் தெரிவித்துக்கொண்டிருக்கிறார்கள்.நக்கீரன் நன்றி 

எதற்காக?

மஞ்சுவிரட்டு, எருது கட்டு, வடமஞ்சு விரட்டு, மாட்டுவண்டிப் பந்தயம் போன்ற தமிழர்களின் வீர விளையாட்டுகளுக்கு உச்சநீதிமன்றம் விதித்திருக்கும் தடை தீர்ப்பிற்கு தங்கள் எதிர்ப்பைத் தெரிவித்தே இந்தக் கறுப்புக்கொடிகள்.

அலங்காநல்லூரில் தன் வீட்டில் கறுப்புக்கொடி ஏற்றிய இளைஞர் நாகராஜனிடம் காரணம் கேட்டோம்.

""மஞ்சுவிரட்டுதான் எங்க ஊருக்கு உலகப் புகழை வாங்கித் தந்துச்சு. வயிற்றுப்பாட்டுக்காக ஏதாச்சும் வேலை செய்றேன். ஆனால் எனக்கு வாழ்க்கையே மாட்டை அடக்குறதுதான். சார்... நானாச்சும் நாலஞ்சு வருஷமாத்தான் மாடுபிடி வீரன். ஆனால் மாடு பிடிக்கிறதே வாழ்க்கையா கொண்ட ஆயிரக்கணக்கானவங்க அறுபது, எழுபது வருஷமா இருக்காங்களே... உயிர்பலி ஏற்படும்னா நாங்கள்லாம் உசுரோட இருக்க முடியுமா? மஞ்சுவிரட்டு மாடு, எந்த மாடாச்சும் ஊனமா போயிருக்கா? வாடிவாசல்ல செத்துருச்சா? கிடையவே கிடையாது. அப்புறம் என்னங்க வதை, சொதைனு காரணம் சொல்றாக? 


வாடிவாசல்ல ஒரு காளை அதிகமா போனா ஒரு நிமிஷம், 2 நிமிஷம் நிண்டு வெளையாடும். புடிபடும், இல்லைனா ஓடிப் போயிடும். ஒண்ணு சொல்லவா? தமிழ்நாடு கால்நடைத் துறையில இருந்து வந்து செக் பண்ணுனாங்க. காளைமாடு முன்னூறு, நானூறு கிலோ எடையைத் தொடர்ந்து 3 மணி நேரம் சுமக்கும். வாடி வாசல்ல 100 கிலோ மனிதனை 2 நிமிஷம் 1 நிமிஷமா சுமக்கிற தெல்லாம் ஒரு வதையில்லைனு சொல்லிட்டுப் போனாங்க. இப்பச் சொல்லுங்க... மஞ்சு விரட்டுக்குத் தடை விதிக்கலாமா? தண்ணிக்கும் சோத்துக்கும் தடை விதிக்கலாமா? அதான் கறுப்புக்கொடி'' கண்களில் நீர் திரளச் சொன் னார் நாகராஜன்.

பாலமேடு சென்றோம். பல வீடுகளில் கறுப்புக்கொடி. மாடுபிடி வீரர் சிதம்பரத்திடம் பேசினோம்.

""ஒரு நாளைக்கு 8 மணி நேரம் உழு கிறோம். வண்டியடிக்கிறோம். பிணையல் அடிக்கிறோம். அதெல்லாம் வதையில்லை. வருஷத்துக்கு ஒரு நாளோ நாலு நாளோ வெறும் 5 நிமிஷம் விளையாடினா அது மிருகவதையா? உலகத்துல கொடுமையான வலி எது? பிரசவ வலிதானே. பெண்கள் மறுபிறவி எடுக்கிறாங்க. இது பெரிய மனித வதை. இனிமே யாரும் கல்யாணமே பண்ணப்பிடாதுனு எந்த நீதிபதி யாச்சும் சொல்வாரா? சிலம்பு வெளையாடுறம், இளவட்டக் கல் தூக்குறோம், மல்யுத்தம்... குத்துச்சண்டை... இதையெல்லாம் தடை செய்வாங்களா? பாத்துக்கினே இருங்க... இனிமே எல்லாரும் பேண்டுதான் போடணும்னு வேட்டிக்கு தடை விதிக்கப் போறாங்க'' எரிச்சலோடு சொன்னார் சிதம்பரம்.

உச்சநீதிமன்றம் 7-5-14 அன்று இரண்டு முக்கிய தீர்ப்புகளை வழங்கியது. ஒன்று முல்லைப்பெரியாறு அணைநீர் பற்றியது. இந்தத் தீர்ப்பு தென் மாவட்டங்களில் மிகப்பெரிய மகிழ்ச்சியைக் கொண்டு வந்தது. மற்றொரு தீர்ப்பு மஞ்சுவிரட்டுக்கு தடை விதித்து நீதியரசர்கள் கே.எஸ்.ராதாகிருஷ்ணனும் பினாகி சந்திரகோசும் அளித்த தீர்ப்பு.

இந்தத் தீர்ப்பு பற்றி நம்மிடம் பேசிய தமிழ்நாடு ஜல்லிக்கட்டுப் பேரவைத் தலைவர் ராஜசேகரன் ""தமிழர்களின் பண்பாட்டுக்கும், வீர விளையாட்டுக் களுக்கும் ஆபத்து ஏற்படுத்தப்படும்போதும் முதலில் குரல் கொடுப்பது நக்கீரன்தான். இந்த வழக்குப் பற்றி 18-1-2013 நக்கீரன்ல ""வருது... வருது...'' ஒரு அருமையான எச்சரிக்கை செய்தி வெளியிட்டீங்க. 

2007-ஆம் ஆண்டு மதுரை உயர்நீதிமன்றம் மஞ்சுவிரட்டுக்கு தடை விதித்தது. அப்ப மதுரைக்கு வந்த முதல்வர் கலைஞர்ட்ட இந்த தடை பற்றி சொன்னோம். உயரதிகாரிகளோடு கலந்து பேசி அப்போதைய மதுரை கலெக்டர் உதயசந்திரனுக்கு சில உத்தரவுகள் போட்டார். 

கலைஞர் யோசனைப்படியே கலெக்டர் உதய சந்திரன் கோர்ட்டில் ஒரு அபிடவிட் தாக்கல் செய் தார். அதில் ""சங்க இலக்கிய மற்றும் வரலாற்றுச் சான்றுகளை சொல்லிவிட்டு, வீரமிக்க தமிழ் இளை ஞர்களின் குருதியிலும் மூச்சிலும் உள்ளது மஞ்சு விரட்டு. மஞ்சுவிரட்டும் தைப்பொங்கலும் தமிழ்ப்பண் பாடு என்ற நாணயத்தின் இரண்டு பக்கங்கள். இத்தகைய வீர விளையாட்டை தமிழகத்தில் தொடர்ந்து நடத்திடுமாறு தீர்ப்பு வழங்கிடுங்கள்'' என்று குறிப்பிட்டிருந்தார் கலெக்டர்.

அதைப் படித்த நீதிபதி, மஞ்சுவிரட்டுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கினார். இதையடுத்தே 2009-ஆம் ஆண்டு மஞ்சுவிரட்டு நடத்துவதற்கான சட்டத்தைக் கொண்டுவந்தார் கலைஞர்.

""இப்போது மஞ்சுவிரட்டை தடை செய் வதில் முக்கிய பங்கு வகித்தது "பீட்டா' என்ற தொண்டு நிறுவனம்தான். இந்த நிறுவனத்தின் தலைமை அலுவலகம் நெதர்லாந்திலும் இன் னொரு அலுவலகம் அமெரிக்காவிலும் உள்ளது. பல்லாயிரம் கோடி டாலர்களை வைத்துக் கொண்டி ருக்கும் இந்த நிறுவனம்தான் "மஞ்சுவிரட்டுக்கு எதிரான தீர்ப்பை தனது சக்தி முழுவதையும் பயன்படுத்தி பெற்றிருக்கிறது. நமது பண்பாட்டு உரிமையைப் பெற நாம் தொடர்ந்து போராடுவோம்'' என்றார் ராஜசேகரன்.

அலங்காநல்லூர் மஞ்சுவிரட்டு போல பெயர் பெற்றது சிங்கம்புணரி அரளிப்பாறை மஞ்சுவிரட்டு. இதை ஒருங்கிணைத்து நடத்திய திருப்பத்தூர் முன்னாள் எம். எல்.ஏ. காங்கிரஸ் அருணகிரி நம்மிடம், ""இராமேஸ்வரத் துக்குப் போய், 22 தீர்த்தம் ஆடி, சாமியையும் கும்பிட்ட பிறகு அங்கே இருக்கிறவர்கள் என்ன சொல்வாங்க தெரி யுமா? ஏதாவது மாட்டு வாலைப் பிடித்து நல்லா முறுக்கி விட்டுப் போங்க அப்பதான் உங்களுக்கு மோட்சம் கிடைக் கும்னு சொல்லுவாங்க. கோயில்ல மாட்டுவாலைப் பிடித்தால் சொர்க்க மாம். விளையாட்டில் மாட்டின் திமிலைப் பிடித்தால் சிறைத் தண்டனையாம். என்ன நியாயமோ?'' தலையில் அடித்துக் கொண்டார்  எக்ஸ் எம்.எல்.ஏ. அருணகிரி.

தேவகோட் டைக்கு அருகிலுள்ள இருமதி கிராமமக்கள் 15 வருடம் முன்பு பள்ளத்தில் விழுந்து இறந்த வெண்ணியூர் மஞ்சு விரட்டு காளைக்கு கோயில் கட்டி, வருடா வரு டம் விழா எடுப் பதைக் கேள்விப்பட்டு அங்கு சென்றோம்.

1942 ஆகஸ்ட் புரட்சியின் தளபதி பாலபாரதியின் பேரன் இருமதி துரை.கருணாநிதி நம்மை வரவேற்றார்.

""முயலைச் சித்ரவதை செய்றான். தவக்களையை சித்ரவதை செய்றான். கேட்டால் ஆராய்ச்சிங்கிறான். அதெல்லாம் விலங்கு வதை இல்லையா? ஊர் கூடி வருஷத் துக்கு ஒருநாள் நடத்துற விழாவுக்கு தடை போடு றாங்களா என்ன அர்த்தம்? கோயிலுக்கு ஆடு வெட்டப் பிடாது. கோழி அறுக்கப்பிடாதுனு மறுபடியும் கண்டி ஷன் போடப் போறாங்கன்னு அர்த்தம். '' மஞ்சு விரட்டு விழா நடத்த முடியாத கொந்தளிப்போடு சொன்னார். இருமதி துரை.கருணாநிதி.

""18 வயசில மாடு பிடிக்க ஆரம்பிச் சோம். இப்ப 50 வயசாகுது. மஞ்சு விரட்டை சுப்ரீம் கோர்ட் தடை பண்ணிப்பிடுச்சுனு இன்னக்கி காலைலதான் சொன்னாக. கேட்டதில இருந்து பச்சைத் தண்ணிகூட தொண்டைக் குழிக்குள்ள இறங்கல...!'' கண் கலங்கினார்கள் சிங்கம்புணரி மாடு பிடி வீரர்களான தருமனும் அருளும். பண்பாட்டு ஆய்வாளர் பேரா சிரியர் தொ.பரம சிவனிடம் இது பற்றிக் கேட்டோம்.

""தமிழனின் பண் பாடு பற்றிய எது வும் தெரியாதவர் களால் கொடுக்கப் பட்டிருக்கும் தீர்ப்பு. கையில எந்தவித ஆயுதமும் இல் லாத வீரவிளை யாட்டு இது. மஞ்சு விரட்டில் மாடு களுக்கு காயம் ஏற்படுவதே இல் லை. மாடுகளை தமிழன் அடித்து வளர்ப்பதில்லை. ஹரப்பா- மொகஞ்ச தரோ காலந்தொட்டு மாடுகளை வணங்கிக் கொண்டிருப்பவர்கள் நாம். மஞ்சு விரட்டிற்கான ஆதாரம் சங்க இலக்கியங்களில், கல்வெட்டுகளில், பாறைச் சிற்பங்களில் இருக்கிறது. தமிழர் அல்லாத மற்றவர்களுக்கு இதன் அருமை தெரியாது!'' என்றார் பண்பாட்டாய்வாளர் தொ.பரமசிவன்.

தமிழினப் பகைவர்களான ஒருசில தனிமனிதர்கள் தமிழினப் பண்பாட்டின் மீது சதிப்போர் தொடுத்திருக்கிறார்கள். தமிழக அரசு என்ன செய்யப் போகிறது?

ad

ad