புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

4 ஜூலை, 2014


ஒரே இடத்தில் வைத்து இறுதிச்சடங்கு?
இறுதி கட்ட மீட்பு பணி : அடையாளம் காணமுடியாத அழுகிய உடல்கள்
சென்னை மவுலிவாக்கத்தில் கடந்த சனிக்கிழமை 11 மாடி கட்டிடம் இடிந்து விழுந்து தரைமட்டமானது.  அப்போது கட்டிடத்தின் பல்வேறு தளங்களிலும் இருந்த சுமார் 100
பேர் கட்டிட இடிபாடுகளில் சிக்கிக் கொண்டனர். அவர்கள் அனைவரும் அந்த கட்டிடத்தின் கட்டுமான பணிகளில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் ஆவார்கள்.


இவர்களை மீட்கும் பணியில் தீயணைப்புப் படையினர், தேசிய பேரிடர் குழுவினர், மெட்ரோ ரெயில் ஊழியர்கள் என சுமார் 2 ஆயிரம் பேர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். நவீன கருவிகள், மோப்ப நாய்கள், கிரேன்கள் உதவியுடன் மீட்புப் பணிகள் நடந்து வருகிறது.
இன்று (வியாழக்கிழமை) 6–வது நாளாக மீட்புப் பணிகள் நடந்தது. நேற்றிரவு வரை மொத்தம் 77 பேர் மீட்கப்பட்டனர். இவர்களில் 27 பேர் உயிருடன் மீட்கப்பட்டவர்கள். 50 பேர் பிணமாக மீட்கப்பட்டனர். நேற்று மட்டும் 15 உடல்கள் மீட்கப்பட்டது. நேற்று யாராவது உயிருடன் இருப்பார்கள் என்ற எதிர்பார்ப்பு நிலவியது. ஆனால் நேற்று ஒருவர் கூட உயிருடன் கண்டுபிடிக்கப்படவில்லை.
இந்த நிலையில் இன்று காலை நடந்த மீட்புப்பணியில் மேலும் 5 உடல்கள் கண்டு மீட்கப்பட்டன. 11 மணியளவில் ஒரு பெண் உடல் மீட்கப்பட்டது. 11.30 மணிக்கு 10 வயது சிறுவனின் பிணம் மீட்கப்பட்டது. 12.15 மணிக்கு மேலும் ஒரு பெண் உடல் மீட்கப்பட்டது. இதனால் கட்டிட விபத்தில் பலியானவர்கள் எண்ணிக்கை 58 ஆக உயர்ந்துள்ளது. இன்று காலை முதல் மதியம் வரை 8 உடல்கள் மீட்கப்பட்டன. முதல் 3 நாட்கள் நடந்த மீட்புப் பணிகளில் கிடைத்த உடல்களையே அடையாளம் காண முடிந்தது. அதன் பிறகு இடிபாடுகளில் சிக்கிய உடல்கள் அழுகத் தொடங்கி விட்டன.
நேற்று முன்தினமே பெரும்பாலான உடல்கள் அழுகி, சிதைந்து, உருக்குலைந்து விட்டன. இதனால் கருப்பு பாலிதீன் பைகளில் கட்டி அவற்றை வெளியில் எடுத்து வருகின்றனர். இதுவரை 85 சதவீத கட்டிட இடிபாடுகள் அகற்றப்பட்டுள்ளன. இன்னும் 15 சதவீத இடிபாடுகளே அகற்றப் பட வேண்டியதுள்ளது. இறுதி கட்டமாக தரைத் தளம் பகுதியை அகற்றி விட்டால் மீட்புப் பணிகள் நாளைக்குள் முடிந்து விடும்.
அந்த தரைத்தளத்தில் தான் சுமார் 30 பேர் ஒரு அறையில் அமர்ந்து டி.வி. நிகழ்ச்சிகளை பார்த்து கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அந்த 30 பேரும் இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்து இருப்பார்கள் என்று அஞ்சப்படுகிறது. 30க்கும் மேற்பட்ட உடல்கள் ஒரே பகுதியில் கிடப்பதாலும், உயிரிழந்தவர்களின் உடல்கள் அழுகி, உருக்குலைந்து, கூழாகி விட்டதாலும் தாங்க முடியாத அளவுக்கு துர்நாற்றம் வீசுகிறது.
இந்த துர்நாற்றம் மவுலி வாக்கத்தின் மற்ற பகுதிகளிலும் பரவி வருகிறது. இதனால் மீட்புக் குழுவினரும், விபத்து நடந்த பகுதி அருகே உள்ளவர்களும் கடும் அவதிக்குள்ளாகி இருக்கிறார்கள். இடிபாடுகளில் சிக்கியவர்களின் உடல்கள் 6 நாட்களாக கிடப்பதால் அதிலிருந்து வெளியாகும் கிருமிகள் மூலம் விபத்து நடந்த பகுதியில் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் மீட்புக் குழுவினர் அனைவருக்கும் முன் எச்சரிக்கை நடவடிக்கையாக தடுப்பு மருந்துகள் கொடுக்கப்பட்டுள்ளன.
நோய் பரவல் இருப்பதற்கான மவுலிவாக்கத்தின் பல்வேறு பகுதிகளிலும் கிருமி நாசினி மருந்துகள் தெளிக்கப்பட்டு வருகின்றன. கட்டிட இடிபாடுகளில் தொடர்ந்து சுகாதாரத்துறை ஊழியர்கள் மருந்து தெளித்து வருகிறார்கள். செவ்வாய்க்கிழமை இரவு ஏற்பட்ட துர்நாற்றம் நேற்று அதிகரித்தது. இன்று துர்நாற்றத்தின் தாக்கம், மூச்சு விடக் கூட முடியாத அளவுக்கு உள்ளது.
இதனால் அருகில் உள்ள குடியிருப்புவாசிகளுக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. குன்றத்தூர் சாலையில் மக்கள் நடந்து செல்ல முடியாதபடி துர்நாற்றம் இருப்பதால் அங்கு மக்கள் நடமாட தடை விதிக்கப் பட்டுள்ளது.
மீட்பு படையினர் 2 ராட்சத கிரேன்கள் மூலமாக இடிபாடுகளை அகற்றி வருகிறார்கள். கட்டிடத்தின் முன்பகுதியில் அந்த மரக்கடையை சுற்றி குவிந்து கிடந்த இடிபாடுகள் முழுவதுமாக அகற்றப்பட்டு விட்டது.
அகற்றப்பட்ட இந்த இடிபாடுகள் லாரிகள் மூலமாக எடுத்துச் செல்லப்பட்டு வருகிறது. கட்டிடத்தின் பின் பகுதியில் இடிபாடுகளை அகற்றும் பணி தற்போது முடுக்கி விடப்பட்டுள்ளது. இந்த பணிகளும் இன்று அல்லது நாளை இரவுக்குள் முடிக்கப்பட்டு விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கட்டிட இடிபாடுகளுக்குள் இதற்கு மேல் யாரும் உயிருடன் இருக்க வாய்ப்பு இல்லை என்பதால் அவைகளை அகற்றும் பணி வேகமாகவே நடைபெற்று வருகிறது. இருப்பினும் அழுகிக் கிடக்கும் உடல்கள் சிதைந்து விடாமல் இருப்பதற்காக பொக்லைன் எந்திரம் மூலம் மீட்பு படையினர் பார்த்து பார்த்து தோண்டி வருகிறார்கள்.
இதன் காரணமாகவே மீட்பு பணிகளில் லேசான தொய்வு ஏற்பட்டுள்ளது. இன்று அல்லது நாளை இரவுக்குள் இடிபாடுகளுக்குள் சிக்கி இருக்கும் அனைத்து உடல்களும் மீட்கப்பட்டுவிடும்.  என்றாலும் அங்குள்ள கட்டிட கழிவுகளை எல்லாம் ஒட்டு மொத்தமாக அகற்றி முடிப்பதற்கு மேலும் 2 அல்லது 3 நாட்கள் வரை ஆகலாம் என்று எதிர் பார்க்கப்படுகிறது.
மீட்பு பணி தொடர்பாக மீட்பு குழுவினர் கூறும் போது, ‘‘கடந்த 6 நாட்களாக இந்தப் பணி கடுமையான சவாலாகவே இருந்து வருகிறது’’ என்று தெரிவித்தனர்.  நேற்றும், இன்றும் எடுக்கப்பட்ட உடல்கள் அடையாளம் காண முடியாதபடி சிதைந்து விட்டன. அந்த உடல்கள் ராயப்பேட்டை மருத்துவமனையில் பாலிதீன் பைகளில் சுருட்டி வைக்கப்பட்டுள்ளன.
மீட்கப்பட்ட உடல்களின் முகம், உடல் உறுப்புகள் பெருமளவு சிதைந்து போனதால், இனி உடல்களை அடையாளம் காண்பது சிரமம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். எனவே அடையாளம் காண முடியாத உடல்களை ஒரே இடத்தில் வைத்து இறுதிச் சடங்குகள் செய்ய அதிகாரிகள் ஆலோசித்து வருகிறார்கள்.

ad

ad