புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

11 ஆக., 2014

கடற்படையே எங்கள் உறவுகள் காணாமல் போவதற்கு காரணம்; 99 வீதமானவர்கள் குற்றச்சாட்டு 
வடக்கு கிழக்கில் காணாமல் போனவர்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்கு ஜனாதிபதியால் உருவாக்கப்பட்ட காணாமல் போனவர்களை கண்டறியும் ஆணைக்குழுவின் 6ஆவது விசாரணை அமர்வு மன்னார் மாவட்டத்தில் கடந்த 3தினங்களாக நடைபெற்று வருகின்றது.


அதன்படி 8,9 ஆம் திகதிகளில் மாந்தை மேற்கு பிரதேச செயலகத்திலும், 10 ஆம் திகதியான இன்று மன்னார் பிரதேச செயலகத்திலும் நாளை 11 ஆம் திகதி மடு பிரதேச செயலகத்திலும் இடம்பெறவுள்ளது.

இன்று காலை 9.30 மணிக்கு ஆரம்பமாகிய 3ஆவது அமர்வு மாலை 6.30 மணிவரை நடைபெற்றது. எனினும் சாட்சியப்பதிவுக்காக ஆணைக்குழுவினால் 60 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. அவர்களில் 47 பேர் வருகை தந்து தமது உறவுகள்  குறித்து உருக்கமாக சாட்சியம் அளித்தனர்.

இதேவேளை தமது உறவுகளை காணவில்லை என மேலும் 89 பேர் புதிய பதிவினை ஆணைக்குழுவிற்கு இன்று வழங்கியுள்ளனர். எனினும் அவர்களுக்கும் விரைவில் விசாரணைகள்  நடாத்த ஆணைக்குழு நடவடிக்கை எடுக்கும்  என்றும்  தெரிவித்துள்ளது.

மன்னார்  மாவட்டம் முற்றுமுழுதாக கடல் வளத்தை நம்பி வாழும் குடும்பங்களை கொண்டது. இங்கு கடற்படையின் பிரசன்னமும் அதிகமாகவே இருந்தது கிட்டத்தட்ட 4 பாரிய கடற்படை முகாமை கொண்டதாக மன்னார் மாவட்டம் உள்ளது. அந்தவகையில் இன்று சாட்சியப்பதிவுகளை மேற்கொண்டவர்களில் 99 வீதமானவர்கள்  கடற்படையினரையே பகிரங்கமாக குற்றம் சாட்டியுள்ளனர். எங்கள் உறவுகள்  காணாமல் போனதற்கு கடற்படையே பதில் கூறவேண்டும் என துணிந்து சாட்சியங்களை ஆணைக்குழு முன்னால் பதிவுசெய்தனர்.

எனினும் வன்னியில் இருந்து வெளியேறி இராணுவத்திடம் சரணடைந்து காணாமல் போனவர்கள் , முகாம்களில் இருக்கும் போது சீ.ஐ.டியினரால் பிடித்து செல்லப்பட்டனர் , விடுதலைப்புலிகள் தமது இயக்கத்தில் இணைத்துக் கொண்டனர் என்ற குற்றச்சாட்டுக்களும் முன்வைக்கப்பட்டன.

அத்துடன் 1995, 2003, 2005, 2006, 2007, 2008, 2009, ஆம் ஆண்டு ஆகிய காலப்பகுதிகளை உறவுகள் அடையாளப்படுத்தி கொடுத்துள்ளதுடன்  தங்களது உறவுகளை பிடித்து தள்ளாடி கடற்படை முகாம், தாராபுரம் கடற்படை முகாம், சனிவிலேச் கடற்படை முகாம் மற்றும்  தலைமன்னார் கடற்படை முகாம்களுக்குள் கண்டதாகவும் தைரியமாக சாட்சியம் வழங்கினர் .

அத்துடன் ஒரு சிலர் குறித்த காலப்பகுதியில் இருந்தவர்களது பெயர் விபரங்களையும் ஆணைக்குழுவிடம் தெரிவித்திருந்தனர். அதன்படி குறித்த காலப்பகுதியில் இருந்தவர்கள்  தொடர்பில் விசாரணைகள்  மேற்கொண்டு உரிய தீர்வினைப் பெற்றுத் தருவோம்  என ஆணைக்குழு உறவினர்களிடம் உறுதியளித்துள்ளது. மேலும் பணம் வழங்கினால் உங்களது உறவுகளை விடுவிக்க முடியும் என்று பலர் ஏமாற்றி வருகின்றனர் எனவே அவ்வாறான நடவடிக்கையில் பொதுமக்கள் ஈடுபட வேண்டாம் என்றும் ஆணைக்குழு மக்களிடம் தெரியப்படுத்தி இருந்தது.

மேலும் இன்று வெள்ளைவானில் வந்தவர்களால் கடத்திச் செல்லப்பட்டனர், மோட்டார் சைக்கிளில் போகும் போது இடைமறித்து முகாமுக்குள் அழைத்துச் செல்லப்பட்டனர், வாகனத்துடன் கடத்தப்பட்டனர் , கடலில் வைத்து சுடப்பட்டனர், கைது செய்யப்பட்டனர். ஊர் ஆட்களுக்கு காசு தருவதாக கூறி கடத்தி கொடுத்தவர்கள், முழத்துக்கு முழம் கடற்படை இங்கு இருக்கும்போது எவ்வாறு இன்னொருவர் வந்து கடத்திச் செல்ல முடியும் ?

நாங்கள் திட்டவட்டமாக கூறுகின்றோம் நேவியை தவிர எங்களின்  உறவுகள் காணாமல் போனதற்கு வேறு யாரும் காரணமாக இருக்க மாட்டார்கள். எனவே அரசாங்கமே பதில் கூற வேண்டும். எங்களுக்கு அரசின் உதவிகள் எவையும் எங்களுக்கு வேண்டாம் பிள்ளைகளை தாருங்கள் என சாட்சியம்  வழங்கினர்.

அத்துடன் இன்று மன்னார் ஆயர் ஆணைக்குழு முன்னால் வடக்கில் தற்போது மக்கள் படும் பாடுகள்  மற்றும் அரசின் நிலை, ஐ.நா விசாரணை தொடர்பிலும் கருத்து வெளிட்டார். எனினும் இவை அரசியல் கதையில்லை ஜனாதிபதியால் எம்மிடம் கூறப்பட்டவற்றையே நாம் மேற்கொண்டு வருகின்றோம் என்றனர்.

மேலும் தீர்வு பெற்றுத்தராத ஆணைக்குழுவில் எதற்காக சாட்சியம் அளிக்க வேண்டும்? ஏன் நேரத்தை வீணாக்க வேண்டும் என்றும் ஆயர் தெரிவித்திருந்தார். இந்த ஆணைக்குழு முன்னால் நான்  சாட்சியத்திற்கு வரவில்லை ஆதங்கத்தை வெளிப்படுத்தவே வந்தேன் என்றும்  தெரிவித்தார்.

இதன்போது முகாமில் இருக்கும் போது சீ.ஐ.டி கடத்தியது , வட்டுவாகலில் கணவர் காணாமல் போனார் . அதன்பின்னர் வெளிநாட்டு இலக்கம் தெரியக் கூடியதாக தொலைபேசியில் எடுத்து எங்களுடன் பேசினார் என புலனாய்வு பிரிவை சேர்ந்த ஒருவரின்  மனைவி  சாட்சியமளித்தார்.

அத்துடன் அமைச்சர் ரிசாட் பதியுதீனின் ஆதரவாளர் ஒருவர் ஜேர்மனிக்கு அனுப்புவதாக கூறி 23 இலட்சம் பெற்றுக் கொண்ட நிலையில் தலைமறைவாகி விட்டார் என்றும் காசு பணத்துக்கான எனது மாமியை கடத்தியுள்ளனர் என்றும் ஆணைக்குழுவிற்கு தெரிவித்தனர்.

இன்றைய சாட்சியப்பதிவினை கவனிக்கும் வகையில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன், வட மாகாண போக்குவரத்து அமைச்சர் டெனீஸ்வரன் , வடக்கு மாகாண சபை உறுப்பினர் சிராய்வா மன்னார் மாவட்ட பிரஜைகள் குழுவின் பிரதிநிதிகள், சட்டத்தரணிகள் ஆகியோரும் பிரசன்னமாகி இருந்தனர்.

இதேவேளை நாளை மடு பிரதேச செயல பிரிவில் பதிவுகள்  இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
- See more at: http://onlineuthayan.com/News_More.php?id=724273315711752655#sthash.7qHUUmDN.dpuf

ad

ad