புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

3 பிப்., 2015

இறுதி கட்டத்தை எட்டுகிறது கிரானைட் முறைகேடு விசாரணை : சகாயத்திடம் 2 மணி நேரம் மணிமாறன் வாக்குமூலம்


மதுரை மாவட்டத்தில் சுமார் 16 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு இழப்பு ஏற்பட்டதாக கூறப்படும் கிரானைட் முறைகேடுகள் குறித்து ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயம் ஐகோர்ட்டு உத்தரவுபடி விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

முதல் கட்டமாக கிரானைட் அதிபர்களால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் மற்றும் விவசாயிகள்–நில உரிமையாளர்கள் உள்ளிட்ட 150–க்கும் மேற்பட்டோர் சகாயத்திடம் புகார் அளித்தனர்.

இதைத் தொடர்ந்து கிரானைட் குவாரிகளுக்கு சகாயம் நேரில் சென்று பல்வேறு கட்டமாக ஆய்வு நடத்தினார். கிரானைட் குவாரிகளால் பாதிக்கப்பட்ட விவசாய நிலங்கள், சேதப்படுத்தப்பட்ட கண்மாய்கள், வரத்து கால்வாய்கள், சட்ட விதிமுறைகளை மீறி அதிக அளவில் வெட்டி எடுக்கப்பட்ட கற்களையும் அவர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதற்கான நவீன காமிராவும் பயன்படுத்தப்பட்டது.

குவாரிகள் தொடர்பான ஆய்வுகள் முடிக்கப்பட்டு, 6–வது கட்டமாக பாதிக்கப்பட்டவர்களை நேரில் அழைத்து அவர்களின் வாக்குமூலத்தை பதிவு செய்யும் நடவடிக்கை இன்று முதல் தொடங்கப்பட்டுள்ளது.

இதற்காக விசாரணை அதிகாரி சகாயம் இன்று தனது அலுவலகத்தில் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து விசாரணை நடத்தினார். 50–க்கும் மேற்பட்டவர்களிடம் விளக்கம் பெறுவதற்காக அவர்களுக்கு சம்மன் அனுப்பப்பட்டு உள்ளது.

இது தொடர்பாக மதுரை தொழிலதிபர் மணிமாறன் இன்று காலை சகாயம் முன்னிலையில் ஆஜரானார். அவர், கடந்த தி.மு.க. ஆட்சியின்போது கிரானைட் முறைகேடுகள் குறித்து மாவட்ட கலெக்டரிடம் புகார் அளித்ததாகவும், அந்த புகாரின் பேரிலேயே விசாரணை நடத்திய அப்போது கலெக்டராக இருந்த சகாயம், அரசுக்கு அறிக்கை அனுப்பி இருந்ததையும் தனது வாக்குமூலத்தில் தெரிவித்தார்.

மேலும் கிரானைட் அதிபர்களால் மிரட்டப்பட்டதாகவும் தன் மீது பொய் வழக்குகள் போடப்பட்டதாகவும் விசாரணையில் அவர் தெரிவித்தார்.

சுமார் 2 மணி நேரம் நடந்த இந்த விசாரணை வீடியோ மூலமாகவும், எழுத்து மூலமாகவும் பதிவு செய்யப்பட்டது.

இதைத் தொடர்ந்து மேலவளவை சேர்ந்த விவசாயி தங்கராஜ், சகாயம் முன்னிலையில் ஆஜராகி வாக்குமூலம் அளித்தார். அவரது வாக்குமூலமும் எழுத்துப்பூர்வமாக பதிவு செய்யப்பட்டது. இன்னும் சம்மன் அனுப்பிய பலரிடம் விசாரணை நடத்தி வாக்குமூலத்தை பதிவு செய்ய சகாயம் திட்டமிட்டுள்ளார்.  எனவே மதுரை மாவட்டத்தில் நடந்த கிரானைட் முறைகேடுகள் தொடர்பான விசாரணை தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.

ad

ad