தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜின் படுகொலையுடன் தொடர்புடைய
சந்தேக நபர்களின் இரத்த மாதிரிகள் மரபணு பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அமரர் ரவிராஜ் கடந்த 2006ம் ஆண்டு நவம்பர் மாதம் படுகொலை செய்யப்பட்டிருந்தார்.
இந்த கொலையுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்பய்பட்ட கடற்படை உத்தியோகத்தர்களின் இரத்த மாதிரிகள், மரபணு பரிசோதனைக்காக ஜீன்டெக் ஆய்வு கூடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டதாக புலனாய்வுப் பிரிவினர், கொழும்பு மேலதிக நீதவான் நிரோசா பெர்னாண்டோவிடம் தெரிவித்துள்ளனர்.
படுகொலை செய்ய பயன்படுத்திய துப்பாக்கி பற்றிய அறிக்கையும் நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட உள்ளது.எம்.ஏ.நிலன்த சம்பத் எனப்படும் நேவி சம்பத் உள்ளிட்ட நான்கு சந்தேக நபர்களையும் எதிர்வரும் 24ம் திகதி வரையில் விளக்க மறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
கொழும்பு அல்விட்டிகல வீதியில் வைத்து இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ரவிராஜ் மற்றும் அவரது காவல்துறை பாதுகாவலர் லக்ஸ்மன் லொக்குவல்லவும் கொலை செய்யப்பட்டிருந்தார்.
பெற்றோரிடம் கப்பம் பெற்றுக்கொள்வதற்காக ஐந்து மாணவர்களை, ரவிராஜ் வழக்கின் சந்தேக நபர் ஒருவர் கொலை செய்துள்ளதாகவும் புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
ரவிராஜ் கொலை தொடர்பான வழக்கு எதிர்வரும் 24ம் திகதி மீளவும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது.