புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்

4 மே, 2015

ஜெயலலிதா அப்பீல் மனு மீது தீர்ப்பு தேதி இன்று வெளியாகிறதா? வாட்ஸ்அப் தகவலால் பரபரப்பு!

ஜெயலலிதா அப்பீல் மனு மீது இன்று தீர்ப்பு தேதி வெளியாவதாக வாட்ஸ்அப்பில் தகவல் ஒன்று தீயாய் பரவி வருகிறது.

ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கின் அப்பீல் மனு விசாரணை கர்நாடக ஹைகோர்ட்டில் நடைபெற்று முடிந்துள்ளது. நீதிபதி குமாரசாமி, தீர்ப்பு தேதியை சொல்லாமல் வழக்கை ஒத்தி வைத்துள்ளார்.
இதனிடையே பவானிசிங் நியமனம் தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நடைபெற்றபோது, தீர்ப்பு அளிக்க ஏப்ரல் 30ம் தேதிவரை காலக்கெடு கேட்டுக் கொண்டார் ஹைகோர்ட் நீதிபதி குமாரசாமி. இதையடுத்து மே 12ம் தேதி வரை தீர்ப்புக்கு கெடு கொடுத்தது சுப்ரீம் கோர்ட்.
ஆனால், பவானிசிங் வழக்கு முடிந்து கடந்த மாதம் 27ம் தேதியே தீர்ப்பு வெளியாகிவிட்டது. இதையடுத்து அன்பழகன் மற்றும் கர்நாடக தரப்பு ஹைகோர்ட்டில் தங்கள் தரப்பு வாதத்தையும் தாக்கல் செய்துவிட்டது.
இந்நிலையில், ஹைகோர்ட்டில் தீர்ப்பு எப்போது வேண்டுமானாலும் வரலாம் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில்தான், ஜெயலலிதா அப்பீல் மனு மீது எப்போது தீர்ப்பு வெளியாகும் என்பதை கர்நாடக ஹைகோர்ட் இன்று அறிவிக்க உள்ளதாக காலை முதலே வாட்ஸ்அப்பில் ஒரு தகவல் நாடு முழுவதும் தீயாய் பரவி வருகிறது.
இதுகுறித்து ஹைகோர்ட் வட்டாரங்களிடம் கேட்டபோது “தீர்ப்பு வெளியாகுவது குறித்து ஒருநாள் முன்பாக ஹைகோர்ட் அறிவிக்கும். இரவு 7 மணிக்குள் இந்த அறிவிப்பு எப்போது வேண்டுமானாலும் வெளியிடப்படலாம். உதாரணத்துக்கு, நாளை, செவ்வாய்க்கிழமை, தீர்ப்பு வழங்கப்படுவதாக இருந்தால், அதுகுறித்து இன்று இரவு 7 மணிக்குள் ஹைகோர்ட் நேட்டிபிகேஷன் செய்யும்” என்று தெரிவித்தனர்.
பெங்களூரு நகர போலீஸ் உயர் அதிகாரிகளிடம் இதுகுறித்து கேட்டபோதும், தங்களுக்கு எந்த முன்னெச்சரிக்கை தகவலும் இதுவரை வரவில்லை என்று கூறிவிட்டனர்.
எனவே இன்று இரவு 7 மணிக்குள், தீர்ப்பு தேதி வெளியாகாவிட்டால், வாட்ஸ்அப் தகவல் வதந்தியாகிவிடும்.