புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

19 மே, 2015

மேல்முறையீட்டுக்கு பரிந்துரை: ஜெ. அதிர்ச்சி!


ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கில் மேல் முறையீடு செய்ய கர்நாடக அரசின் தலைமை வழக்கறிஞர், அம்மாநில
அரசுக்கு பரிந்துரை கடிதம் அனுப்பியுள்ளார். இதனால் இந்த வழக்கில் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை விடுதலை செய்து கர்நாடக உயர் நீதிமன்ற சிறப்பு நீதிபதி குமாரசாமி தீர்ப்பு கூறினார். இந்த வழக்கில் அவரது தோழி சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோருக்கும் விடுதலை அளிக்கப்பட்டதோடு, அவர்களுக்கு விதிக்கப்பட்ட அபராதமும் ரத்து செய்யப்பட்டது.

இந்த தீர்ப்பில் கணக்கு பிழை இருப்பதாக கூறி, தீர்ப்பை எதிர்த்து கர்நாடக அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும் என்று திமுக, தேமுதிக, பாமக, காங்கிரஸ், மார்க்சிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.

இதனிடையே, மேல்முறையீடு குறித்து கருத்து தெரிவித்த கர்நாடக முதல்வர் சித்தராமையா, இந்த தீர்ப்பை எதிர்த்து கர்நாடக அரசு மேல் முறையீடு செய்வது குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. இது மிகவும் முக்கியமான வழக்கு என்பதால் அவசரப்பட்டு எந்த முடிவும் எடுக்கமாட்டோம் எனக் கூறியிருந்தார். 

இந்த நிலையில் ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கில் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யலாம் என கர்நாடக  அரசின் தலைமை வழக்கறிஞர் ரவிவர்ம குமார்,  கர்நாடக சட்டத்துறை அமைச்சர் ஜெயசந்திராவுக்கு பரிந்துரை கடிதம் அனுப்பி உள்ளார்.

இந்த பரிந்துரை கடிதத்தின் மீது மே 21ஆம் தேதி நடைபெறும் அமைச்சரவை கூட்டத்தில் விவாதித்து முடிவு எடுக்கப்படும்  என தெரிகிறது.
வருகிற 22 ஆம் தேதி நடைபெற உள்ள அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் ஜெயலலிதாவை முதலமைச்சராக தேர்ந்தெடுக்க திட்டமிடப்பட்டுள்ள நிலையில், கர்நாடக அரசு தலைமை வழக்கறிஞர் மேல் முறையீட்டிற்கு பரிந்துரைத்திருப்பது ஜெயலலிதா மற்றும் அதிமுகவினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ad

ad