சமஷ்டி முறையை அன்று எதிர்த்த தமிழ் மக்கள் இன்று அதனை கோருகின்றனர். எனினும் ஐக்கிய இலங்கைக்குள் அதிகாரப் பரவலை வழங்குவதே அரசாங்கத்தின் நிலைப்பாடாகும்
என்று அமைச்சரவைப் பேச்சாளரும், அமைச்சருமான ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று வியாழக்கிழமை இடம்பெற்ற ஊடக சந்திப்பில் உரையாற்றும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
அவர் அங்கு தொடர்ந்தும் உரையாற்றுகையில்,
ஐக்கிய இலங்கைக்குள் அதிகாரப் பரவலை வழங்குவோம் என்பதே நமது நிலைப்பாடாகும். சுயாட்சி கோரிக்கை அதிகபட்சமானதாகும். எவ்வாறாயினும் அதிகளவில் கேட்டால் குறைந்தபட்சமாவது கிடைக்கும் என்பதே பொது நிலைப்பாடாகும்.
1954ஆம் ஆண்டிலிருந்து அவர்கள் சமஷ்டியைக் கொண்ட கட்சியாக இலங்கைத் தமிழரசுக் கட்சி காணப்படுகிறது. தமிழ்க் கட்சிகள் அதனை கோரிய பின்னரே சமஷ்டி என்பது குறித்த அச்சம் ஏற்பட்டது.
முன்னாள் ஜனாதிபதி எஸ்.டபிள்யூ. ஆர். டி பண்டாரநாயக்கவினால்தான் இந்த சமஷ்டி முறை அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த நாட்டை முன்னேற்ற சமஷ்டி முறையே சாலச்சிறந்தது என்று அவர் குறிப்பிட்டிருந்தார்.
டொனமூர் அரசியல் யாப்பிலிருந்து சமஷ்டி கோரிக்கை முன்வைக்கப்பட்டு வருகின்றது. அப்போது இலங்கையிலிருந்த சிங்கள பௌத்த மக்களே சமஷ்டி முறையை கோரியிருந்தனர். ஆனால் அன்று இருந்த தமிழ் மக்கள் சமஷ்டியை நிராகரித்ததோ, ஐக்கிய இலங்கை என்பதையும் வலியுறுத்தினர்.
ஆனால் இன்று அது மாறிவிட்டது. இன்று தமிழ் மக்கள் சமஷ்டியை கோருகின்றனர். அதற்கு சிங்கள மக்கள் எதிர்ப்பு வெளியிடுகின்றனர். எவ்வாறாயினும் ஐக்கிய இலங்கைக்குள் அதிகாரப் பரவலை வழங்கும் நிலைப்பாட்டிலேயே நாங்கள் இருக்கின்றோம் – என்றார்.