ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள வந்தாறுமூலை பிரதேசத்தில் சுமார் எட்டு வருடங்களுக்கு முன்னர் இளம் குடும்பப் பெண்ணொருவரை துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட ஈபிடிபியின் முன்னாள் உறுப்பினர் ஒருவருக்கு நேற்று மரண தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு மேல் நீதிமன்ற நீதிபதி எஸ்.சந்திரமணி இத்தீர்ப்பினை வழங்கினார்.
2007 டிசம்பர் 25 ஆம் திகதி வந்தாறுமூலை ஏபீசி வீதியைச் சேர்ந்த 25 வயதுடைய கே. எஸ். பிரமாவதி என்ற குடும்பப் பெண் அவரது வீட்டில் உறங்கிக் கொண்டிருந்தவேளை, துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
சந்தேக நபரை ஏறாவூர்ப் பொலிஸார் கைது செய்தனர். சம்பவம் தொடர்பான வழக்கு மட்டக்களப்பு மேல்நீதிமன்றில் நடைபெற்று வந்தது.
இக்கொலைச் சம்பவத்தின் சந்தேக நபராக ஈபிடிபி இயக்க முன்னாள் உறுப்பினர் திலகன் என்றழைக்கப்படும் பாலுதாஸ் குறிப்பிடப்பட்டிருந்தார்.
குற்றம் நிரூபிக்கப்படதையடுத்து இவருக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
வெதுப்பகம் (பேக்கரி) உரிமையாளரான குறித்த பெண்ணின் கணவரும் இவரும் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்தவேளை இனந்தெரியாத குழுவினர் கதவைத்தட்டி பாண் கேட்டுள்ளனர்.
“இப்போது பாண் தரமுடியாது” எனக்கூறியதையடுத்து “உன் கணவரை சந்திக்க வேண்டும்” என கூறினர்.
“இப்போது சந்திக்க முடியாது நாளை வாருங்கள்” என அப்பெண் பதிலளித்ததையடுத்து, வெளியே நின்றவர்கள் வீட்டின் கதவிற்கு உதைத்து விட்டு கதவின் மீது துப்பாக்கி பிரயோகம் செய்துள்ளனர்.
இதனால் துப்பாக்கி ரவைகள் கதவைத்துளைத்துக் கொண்டு பெண்ணின் கழுத்தில் பட்டு ஏற்பட்ட காயத்தினால் உயிரிழந்தார்.
துப்பாக்கி நபர் ஏற்கனவே அவரது பேக்கரியில் வேலை செய்த முன்னாள் ஈபிடிபி இயக்க உறுப்பினர் என குரலின் மூலம் அடையாளம் காணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது