மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் உடல் முழு அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.
கோடிக்கணக்கான மக்களின் இதயங்களை கொள்ளை கொண்ட முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம், மேகாலயா தலைநகர் ஷில்லாங்கில் கடந்த திங்கட்கிழமை மாலை மரணம் அடைந்தார்.
அவரது உடல் டெல்லியில் இருந்து சிறப்பு விமானம் மூலம் நேற்று காலை மதுரை கொண்டு வரப்பட்டது. பின்னர் அப்துல் கலாமின் உடல் அங்கிருந்து ராணுவ ஹெலிகாப்டர் மூலம் மண்டபத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டது. தலைவர்கள் அஞ்சலி செலுத்திய பின்னர் அங்கிருந்து மலர்களால் அலங்கரிக்கப்பட்ட கடற்படைக்கு சொந்தமான வாகனத்தில் உடல் ராமேசுவரத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. அப்போது மண்டபம் முதல் ராமேசுவரம் வரை கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் தேசிய நெடுஞ்சாலையின் இருபுறமும் மாணவர்கள், இளைஞர்கள் என பல்லாயிரக்கணக்கான மக்கள் திரண்டு நின்று அப்துல் கலாமின் உடலுக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தினார்கள்.
பிற்பகல் 3.30 மணிக்கு அந்த வாகனம் ராமேசுவரம் பஸ் நிலையம் அருகே உள்ள கிழகாடு மைதானத்தை சென்று அடைந்தது. அங்கு அரசியல் கட்சி தலைவர்கள், பிரமுகர்கள் மற்றும் பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இதற்காக அங்கு அமைக்கப்பட்டு இருந்த தனி மேடையில் அப்துல் கலாமின் உடல் வைக்கப்பட்டது. அவரது உடலுக்கு பொதுமக்கள் மற்றும் தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர். பொதுமக்கள் அஞ்சலி செலுத்திய பின் இரவில் அப்துல் கலாமின் உடல் அவருடைய உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
ஜனாதிபதி அப்துல் கலாமின்உடல், இன்று காலை அவரது இல்லத்தில் இருந்து பள்ளிவாசல் கொண்டு செல்லப்பட்டது. பள்ளிவாசலில் சிறப்பு தொழுகை நடத்தப்பட்டது. அது முடிந்ததும் அலங்கரிக்கப்பட்ட ராணுவ வாகனத்தில் அப்துல்கலாம் அவர்களின் உடல் வைக்கப்பட்டு இறுதி ஊர்வலம் தொடங்கியது. மக்கள் வெள்ளத்தில் கலாம் உடல் எடுத்துச் செல்லப்பட்டது. ஆயிரக்கணக்கான மக்கள், பாரத மாதாவிற்கு ஜெ! என்ற கோஷத்துடன் ராணுவ வாகனத்துடன் சென்றனர்.
பள்ளிவாசலில் இருந்து ராமேசுவரம் நகர வீதிகள் வழியாக 4 கிலோ மீட்டர் தொலைவில் தங்கச்சிமடம் அருகே உள்ள பேய்கரும்பு என்ற இடத்தை இறுதி ஊர்வலம் சென்று அடைந்தது. அப்துல் கலாம் அவர்களின் உடலுக்கு பிரதமர் நரேந்திர மொடி அஞ்சலி செலுத்தினார். மலர் வளையம் வைத்து பிரதமர் மோடி அஞ்சலி செலித்தினார். பிரதமர் மோடி அப்துல் கலாம் உடலை சுற்றுவந்து கும்பிட்டார். பிரதமர் மோடி நீண்ட நேரம் அஞ்சலி செலுத்தினார். அவரை தொடர்ந்து தமிழக கவர்னர் ரோசையாவும் அஞ்சலி செலுத்தினார். மத்திய மந்திரி வெங்கையா நாயுடு, மனோகர் பாரிக்கர், பொன் ராதாகிருஷ்ணன் ஆகியோர் அஞ்சலி செலுத்தினர். பன்னீர் செல்வம் உள்பட தமிழக அமைச்சர்கள் அஞ்சலி செலுத்தினார். காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி அஞ்சலி செலுத்தினார்.
அஞ்சலி செலுத்திய பிரதமர் நரேந்திர மோடி, அப்துல் கலாம் அவர்களின் அண்ணனிடம் பேசினார். அப்போது, அவருக்கு ஆறுதல் கூறினார். தொடர்ந்து அரசியல் கட்சி தலைவர்கள் அப்துல் கலாம் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். கலாம் உடலுக்கு லட்சக்கணக்கான மக்கள், மாணவர்கள் இளைஞர்கள் இறுதி அஞ்சலி செலுத்தினர். இதனைத் தொடர்ந்து அப்துல் கலாமின் உடல் முழு அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது. பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் எழுந்து நின்று மரியாதை செலுத்தினர்.