சட்டவிரோதமாக வெளிநாட்டிற்கு கடத்திச் செல்லப்பட இருந்த ஒரு தொகை கடலாமைகள் மற்றும் நண்டுகள் கட்டுநாயக்க விமான நிலைய சுங்கப் பிரிவினரால் மீட்கப்பட்டுள்ளது.
கடலாமைகள் மற்றும் நண்டுகள் அடங்கிய 7 பயணப் பொதிகள் கைப்பற்றப்பட்டுள்ளதாக சுங்கப் பிரிவு ஊடகப் பேச்சாளர் லெஸ்லி காமினி தெரிவித்தார்.
200 கிலோ கிராம் எடையுடைய குறித்த பயணப் பொதிகளில் கடலாமைகள் மற்றும் நண்டுகள் உயிருடன் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
யக்கல பிரதேச தொழிற்சாலை ஒன்றின் முகவரி கொண்டு இந்த கடலாமைகள் மற்றும் நண்டுகள் வெளிநாட்டிற்கு கொண்டு செல்லப்பட இருந்ததாக லெஸ்லி காமினி குறிப்பிட்டார்.
இதன் பெறுமதி நான்கு லட்சத்து 5,879 ரூபா என கூறப்பட்டுள்ளது. யுஎல் 318 என்ற விமானத்தின் மூலம் குறித்த கடல் உயிரினங்கள் மலேசியாவிற்கு கொண்டு செல்லப்பட இருந்தது.