புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

17 ஆக., 2015

வைகோ,நல்லக்கண்ணு,ஜி.ராமகிருஷ்ணன், திருமாவளவன் பங்கேற்கும் கூட்டணி ஆட்சிக் கொள்கை மாநாடு



விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தொல்.திருமாவளவன் அறிக்கை:

‘தமிழகத்தில் ஒருகட்சி ஆட்சிமுறை உதிர வேண்டும் - கூட்டணி ஆட்சிமுறை மலர வேண்டும்’ என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்.  அதற்கான ஆதரவைத் திரட்டும் வகையில் அனைத்துக் கட்சித் தலைவர்களையும் சந்தித்துக் கலந்துரையாடி வருகிறோம். அத்துடன், இக்கருத்துக்கு வலுச்சேர்க்கும் வகையில் கருத்தரங்கம், மாநாடு போன்றவற்றை ஒருங்கிணைத்து வருகிறோம்.  அந்த வகையில் ஆகஸ்டு 17 அன்று எனது பிறந்த நாளை முன்னிட்டு நடைபெறும் தமிழர் எழுச்சி நாளில் ‘கூட்டணி ஆட்சிக் கொள்கை மாநாடு’ சென்னையில் நடைபெறவுள்ளது. 

 நாளை (17.8.2015) நடைபெறவுள்ள இந்த மாநாட்டில் மக்கள் நலக் கூட்டியக்கத் தலைவர்கள் வைகோ, தோழர்கள் ஆர்.நல்லக்கண்ணு, ஜி.இராமகிருஷ்ணன் மற்றும் தமீமுன்அன்சாரி ஆகியோர் கலந்துகொண்டு சிறப்புரையாற்றுகின்றனர்.  மேலும், கவிக்கோ அப்துல்ரகுமான் அவர்களின் தலைமையில் ‘மானுடம் தேடும் மாற்று’ என்னும் தலைப்பில் கவியரங்கமும், ‘உண்மை சனநாயகம் தழைப்பதற்கான அடுத்த நகர்வு’ என்னும் தலைப்பில் கவிமாமணி அப்துல்காதர் அவர்களின் தலைமையில் பட்டிமன்றமும் நடைபெறவுள்ளது.

தமிழகத்தில் கூட்டணி ஆட்சி மலர வேண்டும் என்கிற இந்தக் கோரிக்கை குறிப்பிட்ட சிலருக்குப் பதவி வேண்டும் என்பதற்காக முன்வைக்கப்படுவதல்ல.  மாறாக,  விளிம்புநிலைச் சமூகத்தினருக்கு ஆட்சி அதிகாரத்தில் பங்கு வேண்டும் என்பதை வலியுறுத்துவதற்காகவேயாகும்.  குறிப்பாக, தலித்துகள், பழங்குடியினர், சிறுபான்மையினர், பெண்கள் மற்றும் தொழிலாளர்கள் போன்ற விளிம்புநிலை மக்கள் அதிகார வலிமை பெற வேண்டும் என்னும் நோக்கத்தின் அடிப்படையில்தான் கூட்டணி ஆட்சி முறையை விடுதலைச் சிறுத்தைகள் வலியுறுத்துகிறோம்.

அதிகாரம் ஒரே இடத்தில் குவிந்தால் அது எதேச்சதிகாரமாக எளிய மக்களின் மீது மேலாதிக்கம் செலுத்துகிறது.  எளிய மக்கள் அதிகார வலிமையற்றவர்களாகத் தொடர்ந்து நசுக்கப்படுகின்றனர்.  ஆகவே, எளியோரை வலியோராக மேம்படுத்துவதற்கு அதிகாரப் பகிர்வு அவசியமானதாகும்.  எனவேதான் ஒருகட்சி ஆட்சிமுறைக்கு மாறாக, பல்வேறு கட்சிகள் இடம்பெறும் கூட்டணி ஆட்சி முறையை தமிழகத்திலும், இந்தியாவின் பிற மாநிலங்களிலும் நடைமுறைக்குக் கொண்டுவர வேண்டுமென விடுதலைச் சிறுத்தைகளின் சார்பில் தொடர்ந்து உரத்து முழங்கி வருகிறோம்.  

இந்தச் சனநாயகக் கோரிக்கையை ஒரு கோட்பாடாகப் புரிந்துகொண்டு அனைத்துத் தரப்பினரும் நல்லாதரவு வழங்க வேண்டுமெனவும், நாளை நடைபெறவுள்ள விடுதலைச் சிறுத்தைகளின் மாநாட்டில் பங்கேற்று வெற்றிபெறச் செய்ய வேண்டுமெனவும் கேட்டுக்கொள்கிறோம்.’’

ad

ad