26 அக்., 2015

ஐ.நா. தீர்மானம் மூலம் தமிழருக்கு நீதி கிடைக்கும்! - சம்பந்தன் நம்பிக்கை

இலங்கை தொடர்பான ஐ.நா. தீர்மானம் வரவேற்கத்தக்கது. அந்தத் தீர்மானத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான புதிய அரசும் ஏற்றுக்கொண்டுள்ளது.  குறித்த தீர்மானத்தில் பல்வேறு விடயங்கள் கூறப்பட்டுள்ளன. அதன்மூலம் பாதிக்கப்பட்ட தமிழர் தரப்புக்கு நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கை எமக்குள்ளது.
இவ்வாறு எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் இன்று கொழும்பு - பம்பலப்பிட்டியில் அமைந்துள்ள புளொட் அமைப்பின் அலுவலகத்தில் நடைபெற்றது. இதன்போது கருத்து வெளியிடுகையிலேயே கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான  சம்பந்தன் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் அங்கு மேலும் கூறுகையில்,
தமிழர் பிரச்சினை இன்று சர்வதேச அரங்கில் ஒலித்துக்கொண்டிருக்கின்றது. இந்நிலையில், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் பெரும்பாலான நாடுகளின் ஆதரவுடன் இலங்கை தொடர்பில் முக்கிய தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.  அந்தத் தீர்மானமானது வரவேற்கத்தக்கதாகும். அதில் பல்வேறு விடயங்கள் கூறப்பட்டுள்ளன. அதன்மூலம் பாதிக்கப்பட்ட தமிழர் தரப்புக்கு நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கை எமக்குள்ளது.
புதிய ஆட்சியாளர்களின் போக்கு வித்தியாசமானதாகக் காணப்படுகின்றது. அவர்கள் எமக்கு பல்வேறு வாக்குறுதிகளை வழங்கியுள்ளார்கள்.
அதுமட்டுமன்றி புதிய அரசு  ஐ.நா.சபை உட்பட சர்வதேசத்திற்கும் பல்வேறு விடயங்கள் தொடர்பாக வாக்குறுதிகளை வழங்கியுள்ளது. குறிப்பாக ஐ.நா.சபையின் தீர்மானத்தை புதிய அரசு ஏற்றுக்கொண்டுள்ளது.
அவ்வாறான நிலையில் அத்தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ள பரிந்துரைகளை நிறைவேற்றுவது குறித்து புதிய அரசால் மேற்கொள்ளப்படும் நியாயமான செயற்பாடுகளுக்கு எம்மாலான பங்களிப்புக்களை வழங்கவேண்டும். அது மட்டுமன்றி அவ்விடயங்களை முழுமையாக முன்னெடுப்பதற்குரிய அழுத்தங்களை நாம் தொடர்ந்தும் வழங்கவேண்டும்.
ஐ.நா. தீர்மானத்தை நிறைவேற்றுவது குறித்த ஆலோசனைகளை வழங்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சர்வகட்சிகளின் கூட்டத்தை நடத்தியிருந்தார். அதன்போது அனைத்துத் தரப்பினரும் எழுத்து மூலமான நிலைப்பாட்டை வழங்குமாறு கோரியிருந்தார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சிகள் தனித்தனியாக அக்கூட்டத்தில் பங்கேற்றிருந்த போதும் அனைவருடைய கருத்துக்கள் தொடர்பிலும் கூடி ஆராய வேண்டியுள்ளது.
நீண்டகாலமாக காணப்படும் இனப்பிரச்சினைக்கான நிரந்தரமான தீர்வொன்றை எட்டுவதற்கான சந்தர்ப்பமொன்று தற்போது ஏற்பட்டுள்ளது. அதனைக் குழப்பும் வகையில் எமது செயற்பாடுகள் அமைந்துவிடக்கூடாது. அனைத்துக் கருமங்களும் பக்குவமான முறையில் முன்னெடுக்கப்பட வேண்டும்" - என்றார்.