தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரனின் 61வது பிறந்த நாள் சென்னையில் வெகுவிமரிசையாக கொண்டாடப்பட்டது. ம.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் அக்கட்சி பொதுச்செயலர் வைகோ இனிப்பு வழங்கி பிரபாகரன் பிறந்த நாளை கொண்டாடினார். விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனின் பிறந்த நாள் நவ.26. அந்த இயக்கத்தின் உயிர் நீத்த போராளிகளை நினைவுகூறும் மாவீரர் நாள் நவ. 27. 2009ஆம் ஆண்டு இறுதி யுத்தத்துக்கு முன்னர்வரை விடுதலைப் புலிகள் ஆட்சி செய்த பகுதிகளில் இந்நிகழ்வுகள் ஒரு வாரகாலம் கடைபிடிக்கப்படும். நவம்பர் 27-ந் தேதியன்று மாவீரர்களுக்கு வீரவணக்கம் செலுத்தி பிரபாகரன் உரையாற்றுவது வழக்கம். 
2009-க்குப் பின்னரும் தமிழகம் மற்றும் ஈழத் தமிழர் வாழும் நாடுகளில் பிரபாகரன் பிறந்த நாளும் மாவீரர் நாளும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. பிரபாகரனின் 61-வது பிறந்த நாளையொட்டி சென்னை ராயப்பேட்டையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் நள்ளிரவு 12 மணிக்கு ஆட்டம் பாட்டத்துடன் கேக் வெட்டி கொண்டாடினர்.
இதேபோல் ம.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் தொண்டர்களுக்கு அக்கட்சிப் பொதுச்செயலர் வைகோ, சர்க்கரை பொங்கல் மற்றும் இனிப்புகள் வழங்கி பிரபாகரன் பிறந்த நாளை கொண்டாடினார்.