புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

19 நவ., 2015

”விக்கினேஸ்வரன் தலைமைத்துவம் கொடுக்க முன்வந்தால் ஒத்துழைப்பு வழங்கத் தயார்” – திரு. கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

வட மாகாண முதலமைச்சர் விக்கினேஸ்வரன் எடுத்து வருகின்ற நடவடிக்கைகளுக்கும் அவருடைய கருத்துக்களோடு ஒன்றித்துச் செல்லக் கூடிய நிலைமையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இன்று இல்லை. அவர் சொல்லி வருகின்ற கொள்கையை முன்னெடுக்கின்ற ஒரு தரப்பு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிதான். எனவே அவருடைய கருத்துக்களை நாம் முழுமையாக ஏற்கத் தயார் என்று தெரிவித்த தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் முதலமைச்சர் விக்கினேஸ்வரன் தன்னுடைய செயற்பாடுகளை முன் கொண்டு செல்ல வேண்டுமாக இருந்தால் கூட்டமைப்பின் தலைமையை அவர் ஏற்க வேண்டும். இல்லாவிட்டால் வெளியில் வந்து தலைமைத்துவம் கொடுக்க வேண்டும் எனவும் அதற்கு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி முழு ஒத்துழைப்பையும் கொடுக்கத் தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார்.
 கேள்வி: நல்லாட்சி அரசாங்கம் என்று கூறிக் கொண்டு வந்த மைத்திரி-ரணில் அரசு தேர்தல் மேடைகளில் தமிழ் அரசியல் கைதிகளுடைய விடுதலை தொடர்பில் உரிய நடவடிக்கை விரைவில் எடுக்கப்படும் என்று வாக்குறுதியளித்திருந்தது. ஆனால் அவர்களுடைய விடுதலை தொடர்ந்தும் இழுபறியில் இருந்து கொண்டிருக்கிறது. இதனை நீங்கள் எவ்வாறு பார்க்கிறீர்கள்?
பதில்: தேர்தல் மேடைகளில் அரசு வாக்குறுதியளித்ததற்கு அப்பால் கடந்த செப்டெம்பர் மாதம் ஐ.நா.மனித உரிமைகள் பேரவையில் இலங்கை அரசாங்கம் சர்வதேச சமூகத்திற்கு மத்தியில் தீர்மானமொன்றிற்கு இணங்கி அந்தத் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டிருந்தது.
அந்தத் தீர்மானத்தில் இலங்கையில் அமுலிலிருக்கும் பயங்கரவாதத் தடைச் சட்டத்தை மீள் பரிசீலனை செய்து சட்டப் புத்தகத்திலிருந்து நீக்குவதற்கு இலங்கை அரசு இணங்கியிருக்கிறது. இது வழமையாக தமிழ் மக்களை ஏமாற்றுவது போன்ற வாக்குறுதியல்ல; பயங்கரவாதத்தடைச்சட்டம் பிழையானதொன்று என எண்ணி அதனை நீக்குவோம் என்று சர்வதேச சமூகத்தின் மத்தியில் கூறிய ஒரு விடயம். பயங்கரவாதத்தடைச்சட்டத்தின் கீழேதான் தமிழ் அரசியல் கைதிகள் அனைவரும் கைது செய்யப்பட்டு சிறைகளில் இருக்கிறார்கள்.
சர்வதேசத்துக்குப் பிழையான ஒரு சட்டத்தை நீக்குவதாக இணங்கி விட்டு அந்தப் பிழையான சட்டத்துக்கு கீழ் கைதிகளை தொடர்ந்தும் தடுத்து வைத்திருப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது. அதில் எந்தவித நியாயமும் கிடையாது.
தேர்தல் காலத்தில் தமிழ் மக்களுக்கு கொடுக்கின்ற வாக்குறுதிகளைத் தாண்டி முழு உலகிற்கும் கொடுத்திருக்கின்ற வாக்குறுதியை மீறுகின்ற வகையில்தான் இந்த அரசாங்கம் செயற்பட்டுக் கொண்டிருக்கிறது. இதனை எக்காரணம் கொண்டும் அவர்களால் நியாயப்படுத்த முடியாது.
கேள்வி: ஜனவரி 8 க்குப் பின்னர் உருவாகியுள்ள அரசு தமிழ் மக்களுடைய விவகாரங்களில் காட்டும் போக்கினை நீங்கள் எவ்வாறு நோக்குகிறீர்கள்?
பதில்: தமிழ் மக்களுடைய காணிகளை விடுவித்தமையில் ஒரு சில முன்னேற்றங்கள் ஏற்பட்டிருக்கின்றன. ஆனாலும் இதனை சற்று ஆழமாகப் பார்த்தால் விடுவித்த காணிகள் அனைத்தும் மகிந்த அரசு விடுவிப்பதற்கு இணங்கியிருந்த காணிகள் என்று இந்த அரசு கூறி வருகின்றது. அதாவது மகிந்த அரசாங்கம் இணங்கியிருந்தவற்றைத்தான் நாம் தமிழர்களுக்கு வழங்கி வருகின்றோம் என்று அரசு சிங்கள மக்களுக்கு கூறி வருகின்றது. எனவே புதிய அரசு தமிழ் மக்களுக்கு எந்தவொரு திட்டத்தையும் முன்வைக்கவுமில்லை அவர்களுக்கு எவற்றையும் தாங்களாக முன்வந்து கொடுக்கவுமில்லை என்பதே இவர்களுடைய கருத்துக்களின் வெளிப்பாடு.
தமிழர்களுடைய வாக்குகளைக் கொண்டு ஆட்சியதிகாரத்தில் ஏறுவதற்காகவே தேர்தல் காலத்தில் வாக்குறுதிகளை அள்ளி வீசுகிறார்கள் என்பதும் தேர்தல் முடிந்த கையோடு அவ்வாக்குறுதிகளை மறந்து விடுவார்கள் என்பது எமக்கு முன்னரே தெரியும்.இவ்வாறான நிலைமையைத் தமிழ் மக்கள் ஆண்டாண்டு காலமாக அனுபவித்து வந்திருக்கிறார்கள்.
கடந்த கால வரலாறுகளை முன்னுதாரணமாகக் கொண்டு, தேர்தலுக்கு முன்னர் நாம் நிபந்தனைகளை முன் வைத்திருக்க வேண்டும். ஏனெனில் தமிழ் மக்களுடைய ஆதரவு இல்லாமல் இந்த ஆட்சி மாற்றம் நடந்திருக்க முடியாது. அது அனைவருக்கும் தெரிந்த விடயம். சர்வதேசத்துக்கும், இந்தியாவுக்கும் மகிந்த ராஜபக்சவைத் தோற்கடித்து புதிய அரசு ஒன்றைக் கொண்டு வர வேண்டிய தேவையிருந்தது. எனவே அவர்களிடத்திலிருந்து நாம் நிபந்தனைகளை முன் வைத்து வாக்குறுதிகளைப் பெற்றிருக்க வேண்டும். ஆனால், நாம் அதனைச் செய்ய மறுத்திருக்கின்றோம். நிபந்தனையில்லாத ஆதரவைக் கொடுத்து விட்டு இன்று எந்தவித பிடியுமில்லாமல் நடுத் தெருவில் இருக்கின்றோம்.
கேள்வி: பாராளுமன்றத்தில் இன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எதிர்க் கட்சியாக இருக்கின்றது. இந்நிலையில் அவர்களுடைய செயற்பாடுகளை நீங்கள் எவ்வாறு பார்க்கிறீர்கள்?
பதில்: தமிழ்த் தேசிய கூட்டமைப்பு பெயரளவில் எதிர்க் கட்சியாக இருக்கிறதே தவிர, அவர்கள் அரசாங்கத்தின் பங்காளிக் கட்சியாகத்தான் செயற்பட்டு வருகிறார்கள். அதில் எவ்வித மாற்றுக் கருத்தும் இல்லை.
தமிழ் மக்களுக்குப் பல வாக்குறுதிகளை வழங்கி ஆட்சி அதிகாரத்தில் ஏறியுள்ள அரசு அதன் பின்னர் அவ்வாக்குறுதிகளை மறந்து தமிழ் மக்களுக்கு எவ்வித நன்மையும் செய்யாது பயணித்துக் கொண்டிருக்கின்ற சூழ்நிலையிலும் அவர்களுக்கு அழுத்தங்களைக் எடுக்கின்ற வகையில் எந்தவிதமான செயற்பாட்டையும் கூட்டமைப்புக் கொடுக்கவில்லை. இவற்றை எல்லாம் வைத்துப் பார்க்கும் பொழுது கூட்டமைப்பு அரசின் பங்காளிக் கட்சியாகச் செயற்படுகிறதே தவிர, எதிர்க்கட்சியல்ல என்பது நிரூபணமாகிறது.
கேள்வி : வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரனுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஒரு சில தலைவர்களுக்குமிடையே முறுகல் நிலைமையொன்று காணப்படுகிறதே! இதனை நீங்கள் எவ்வாறு பார்க்கிறீர்கள் ?
பதில்: வட மாகாண முதலமைச்சர் அண்மைக் காலமாகக் கூறி வருகின்ற விசேடமாக இனப்படுகொலை தொடர்பான தீர்மானம் நிறைவேற்றப்பட்ட காலப்பகுதியிலிருந்து அவர் தலைமையில் எடுக்கப்படுகின்ற ஒரு சில செயற்பாடுகளும் அரசியல் நிலைப்பாடுகளும் எங்களுடைய கட்சி எடுத்து வந்த நிலைப்பாடுகளுடன் ஒத்தவையாக இருக்கின்றன. இனப்படுகொலை தொடர்பாக மாகாண சபை நிறைவேற்றிய தீர்மானத்திலுள்ளவற்றை நாங்கள் 2010 ஆம் ஆண்டு முதல் வலியுறுத்தி வந்திருக்கின்றோம். அதே போன்று ‘இரு தேசம் ஒரு நாடு’ விடயத்தை நாங்கள்தான் பகிரங்கமாகக் கூறி வருகின்றோம். அதனால்தான் நாம் கூட்டமைப்பிலிருந்தும் விலகி வந்தோம். 2010 இல் இடம்பெற்ற தேர்தலிலேயே ‘இரு தேசம் ஒரு நாடு’ என்பதை நாம் பகிரங்கமாகக் கூறியிருந்தோம்.
நாம் கடந்த ஐந்து வருடங்களாகக் கூறி வருகின்ற மேற்கூறிய விடயங்களைத்தான் முதலமைச்சர் இன்று மிகத் தெளிவாக-ஆணித்தரமாக ஏற்று முன்வைத்து வருகிறார். எனவே முதலமைச்சர் முன் வைக்கின்ற கருத்துக்களை முழுமையாக ஏற்க நாம் தயார். ஆனால் முதலமைச்சர் கூறுகின்ற கருத்துக்களுக்கு அவர் சார்ந்த கட்சி நேர் எதிராகச் செயற்பட்டு வருகிறது. எனவே முதலமைச்சர் விக்கினேஸ்வரன் தன்னுடைய செயற்பாடுகளை முன்கொண்டு செல்ல வேண்டுமானால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமையை எடுக்க வேண்டும். அதனை நாங்கள் வரவேற்கின்றோம். அவர் அந்தத் தலைமையை எடுத்து தற்பொழுது எடுத்து வருகின்ற நிலைப்பாடுகளை நேர்மையாக முன்னெடுப்பதற்கு செயற்பட்டால் நாங்கள் அவருக்கு முழுமையாக ஒத்துழைக்கத் தயாராயிருக்கிறோம். அவ்வாறு இல்லாது அத்தலைமையை கூட்டமைப்பிடமிருந்து எடுக்க முடியாவிட்டால் அதிலிருந்து வெளியில் வந்து தலைமைத்துவம் கொடுக்க முன்வரவேண்டும்.அவ்வாறு அவர் செய்யா விட்டால் அது தவறான தலைமைக்கு வாக்குகளைச் சேர்த்துக் கொடுப்பதாக சென்று விடுமே தவிர, உண்மையான-நேர்மையான அரசியலை நோக்கி செல்வதற்கு அவருடைய செயற்பாடுகள் வழி வகுக்காது.
எனவே அவர் கொண்டுள்ள நிலைப்பாட்டை வைத்துக் கொண்டு கூட்டமைப்பில் இருப்பது பயனற்றது. எனவே, ஒன்று கூட்டமைப்பின் தலைமையை அவர் எடுக்க வேண்டும் இல்லாவிட்டால் வெளியில் வந்து தலைமையை எடுத்தால்தான் அது தமிழ் மக்களுக்கும் அவருடைய நிலைப்பாட்டுக்கும் விமோசனமாக அமையும். அதற்கு எமது கட்சி முழுமையான ஒத்துழைப்பை வழங்கும்.
கேள்வி: அவ்வாறானால் ஏனைய பரிந்துரைகளை அமுல்படுத்துவதிலும் அரசின் நிலைப்பாடு எவ்வாறு அமையும் என நீங்கள் கருதுகிறீர்கள்?
ஐ.நா. மனித உரிமைகள் பேரவையினுடைய தீர்மானங்களில் எமக்குக் கடும் விமர்சனங்கள் இருக்கின்றன. ஆனால் அவை எல்லாவற்றையும் தாண்டி அதாவது பொறுப்புக் கூறலுக்கு அப்பால் சில விடயங்கள் முன்னேற்றகரமான விடயங்களாக சேர்க்கப்பட்டிருக்கின்றன.
உதாரணத்துக்கு பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை நீக்க வேண்டும் போன்ற ஒரு சில விடயங்கள் கூறப்பட்டிருக்கின்றன. எனவே ஆகக் குறைந்தது இந்த விடயங்களையாவது நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதே எமது நிலைப்பாடு. இவற்றை நிறைவேற்றுவதாக அரசு ஏற்கனவே சர்வதேச சமூகத்தின் மத்தியில் இணங்கியிருக்கிறது.எனவே பொறுப்புக் கூறலையும் செய்யாது தொடர்ந்தும் அரசு காலம் தாழ்த்தினால் அதற்குப் பதில் சொல்ல வேண்டியவர்கள் இந்த அரசை ஆட்சியதிகாரத்தில் அமர்த்துவதற்காக தமிழ் மக்களுடைய ஆதரவைக் கோரிய தமிழ்த் தலைவர்களே.

ad

ad