புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

2 டிச., 2015

சென்னை தனித்தீவாகியது விமானநிலையம் மூடபட்டது வரலாறு காணாத சோகம் அணைத்து போக்குவரத்துக்களும் தடை மெட்ரோ மட்டும் ஓடுகிறது


சென்னை எங்கும் வரலாறு காணாத வெள்ளத்தினால் பல பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளதுடன், மக்கள் இயல்பு வாழ்க்கை முற்றாக பாதிக்கப்பட்டுள்ளது.
சென்னை நகருக்கு தேவையான குடிநீரை தேக்கி வைக்கும் முக்கிய ஏரிகளில் ஒன்றான செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து வினாடிக்கு சுமார் 30 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறந்து விடப்படுவதால் அடையாற்றின் குறுக்கே செல்லும் அனைத்து பாலங்களின் மேல்பகுதிவரை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் இவ்வழியாக செல்லும் சாலை போக்குவரத்து இன்று காலையில் இருந்து முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளது.
 
கிண்டி, சைதாப்பேட்டை, ஈக்காட்டுத்தாங்கல் அடையாறு உள்ளிட்ட பாலங்களின் மேல் தண்ணீர் பாய்ந்து செல்வதால் பஸ் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. இதேபோல், கத்திபாரா - கோயம்பேடு பகுதிகளை இணைக்கும் 100 அடி சாலையிலும் பஸ், ஆட்டோ உள்ளிட்ட வாகனங்களின் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.
 
கடந்த பத்தாண்டுகளில் முதன்முறையாக சென்னை விமான நிலையம் கனமழை காரணமாக மூடப்பட்டுள்ளது. இதேபோல் சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையிலும் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. பல்வேறு பகுதிகளில் மழைநீர் சூழ்ந்துள்ளதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டு சென்னை முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ள நிலை ஏற்பட்டுள்ளது. கிழக்கு கடற்கரை சாலை, ஜி.எஸ்.டி. ரோடு, பழைய மகாபலிபுரம் சாலைகளிலும் போக்குவரத்து முற்றிலும் தடைப்பட்டுள்ளது.
 
தாழ்வான குடியிருப்புப் பகுதிகளை சூழ்ந்த வெள்ளநீர் அங்கிருந்து நிரம்பி, வழிந்து சற்று சமதரையான பகுதிகளையும் ஆக்கிரமித்ததால் அங்குள்ள வீடுகளுக்குள்ளும் வெள்ளநீர் குடியேறியது. இதனால், ஆயிரக்கணக்கான மக்கள் துணிமணிகளுடன் வீடுகளை விட்டு வெளியேறிக் கொண்டிருக்கின்றனர். குறிப்பாக, காசி தியேட்டர் சந்திப்பு, அசோக் நகர், எம்.ஜி.ஆர். நகர், கே.கே.நகர் உள்ளிட்ட பகுதிகளில் நாற்புறமும் வெள்ளக்காடாக காட்சி அளிக்கின்றது.
 
அசோக்நகரில் இருந்து வழிந்தோடும் செம்பரம்பாக்கம் ஏரியின் உபரிநீர், அசோக் பில்லர் பகுதியை கடந்து கோடம்பாக்கம் பவர்ஹவுஸ் சாலை வழியாக ஆறுபோல ஆர்ப்பரித்து பாய்ந்து வருகிறது. இதனால், வெகுவிரைவில் கோடம்பாக்கம் சுற்றுவட்டாரத்தில் வெள்ளநீரின் அளவு அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.
 
மேற்கண்ட பகுதிகளுக்குட்பட்ட பல இடங்களில் நேற்றிரவில் இருந்தே மின்சாரம் தடை செய்யப்பட்டதால் இல்லத்தரசிகளின் இயல்பு வாழ்க்கையும் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. வெள்ளப் பெருக்கு மற்றும் மின்தடை காரணமாக ஈக்காட்டுத்தாங்கலில் உள்ள காசி தியேட்டர் மற்றும் அசோக் பில்லர் அருகே இருக்கும் உதயம் திரையரங்க வளாகத்தில் உள்ள அனைத்து தியேட்டர்களிலும் இன்றைய படக்காட்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
 
சாலை போக்குவரத்து துண்டிக்கப்பட்டதால் ஆலந்தூர் - கோயம்பேடு இடையில் ஓடும் மெட்ரோ ரெயில்களில் வரலாறு காணாத மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. மெட்ரோ ரெயில் சேவை துவக்கப்பட்ட நாளில் காணப்பட்டதைவிட இன்று அனைத்து மெட்ரோ ரெயில் நிலையங்களில் உள்ள டிக்கெட் கவுண்ட்டர்களிலும் அதிகமான கூட்டம் காத்திருப்பதாக வடபழனி ரெயில் நிலைய டிக்கெட் கவுண்ட்டரில் காத்திருந்த கோடம்பாக்கத்தை சேர்ந்த ஜார்ஜ் என்ற பயணி தெரிவித்தார்.
 
ஆபத்பாந்தவனாக இந்த மெட்ரோ ரெயில் சேவை மட்டும் இல்லாவிட்டால் இந்த மழை, வெள்ளத்துக்கு மக்களின் நிலை மிகவும் மோசமாகி இருக்கக்கூடும் எனவும் அவர் கூறினார்.
 






ad

ad