20 மே, 2016

முள்ளிவாய்க்காலில் ஆயிரக்கணக்கில் தமிழர்களை கொண்று குவித்தவர்கள் தண்டிக்கப்படும் வரை ஓய மாட்டோம் – திரு.பற்றிக் பிறவுன்

நீண்டதொரு உள்நாட்டுப் போராக இடம்பெற்ற இலங்கைப் போரின் இறுதியுத்தத்தில் இடம்பெற்ற இனப்படுகொலையின் ஏழாம் ஆண்டில்
நாங்கள் மௌனித்து அதனை நினைவு கொள்கின்றோம். மிகக் கோரமான இலக்கற்ற எறிகணை வீச்சில் அந்த மக்கள் கொல்லப்பட்டார்கள்.
இன்று அவர்களிற்காகக் கூடி நிற்கின்றோம். அவர்களை எந்த நாளும் நாங்கள் மறக்க மாட்டோம். அந்த மக்களின் இழப்பிற்கு நீதி கிடைக்கும் வரை ஓயமாட்டோம் என ஒன்றாரியோ மாகாண எதிர்க்கட்சித்தலைவர் திரு. பற்றிக் பிறவுன் தெரிவித்துள்ளார்.
நான் பாராளுமன்ற உறுப்பினராக இருந்த காலத்தில் எவ்வாறு தமிழ் மக்களிற்காகக் குரல் கொடுத்தேனோ அவ்வாறு ஒன்ராறியோ மாகாண எதிர்க்கட்சித் தலைவராகவும் குரல் கொடுப்பேன் எனத் தெரிவித்தார்.
இலங்கையில் இனப்படுகொலை இடம்பெற்றுக் கொண்டிருந்த போது தமிழர்கள் பாராளுமன்றத்தை நோக்கி ஓடி வந்தார்கள். நான் தான் தடைகளையெல்லாம் தாண்டி அவர்களைச் சந்தித்த முதல் பாராளுமன்ற உறுப்பினன்.
இலங்கையில் இடம்பெற்றது இனப்படுகொலையே என்று முதலில் பாராளுமன்றத்தில் குரல் கொடுத்த கனடியப் பாராளுமன்ற உறுப்பினனும் நானே. ஜெனிவா வரை சென்று ஐக்கியநாடுகளைவையில் தமிழர்களின் அவலங்களிற்கு நீதி தேடினேன்.
எனது இந்தப் பயணம் ஓயாது. இன்று நாங்கள் மௌனித்து நிற்கின்றோம். யுத்தசூனியப் பிரதேசத்தில் இருந்த மக்கள் மீது செல்வீச்சுக்களை மேற்கொண்டவர்கள் தண்டிக்கப்படும் வரை, இறந்தவர்களிற்கான நீதி கிடைக்கும் வரை நான் ஓய மாட்டேன் என திரு. பற்றிக் பிறவுத் தெரிவித்தார்.
திரு.பற்றிக் பிறவுன் 2009ல் இலங்கை செல்ல முயன்றபோது இலங்கை அரசு அவருக்கு விசா வழங்க மறுத்திருந்திருந்தது. தமிழர்களின் உணர்வுகளை மிகவும் புரிந்தவரான திரு. பற்றிக் பிறவுன் தமிழ் அரசியலாளர்கள் பலரே ஐக்கியநாடுகளவை செல்லாத போதும், கனடியப் பாராளுமன்ற உறுப்பினராகச் சென்று தமிழர்களிற்கான குரலாக செயலாற்றியவர்.
2018ல் தான் முதலமைச்சராகி தனது பயணம் இலங்கையின் கிழக்கு மாகாணம் மற்றும் வடக்கு மாகாணங்களிற்காக இருக்கும் என்றும் தமிழ்த் தொழிலதிபர்களையும் பத்திரிகையாளர்களையும் தன்னும் கூட்டிச் செல்வேன் என்றும் ஏற்கனவே தெரிவித்திருந்தது இங்கு குறிப்பிடத்தக்கது.
கனடியத் தேசிய நீரோட்டப் பத்திரிகைகளில் கருத்துப்படி, திரு. பற்றிக் பிறவுனே 2018ல் ஒன்ராறியோ மாகாணத்தில் முதல்வராக வருவார் என்பது கணிப்பாக உள்ளது.