புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

11 டிச., 2018

ஆஸ்திரேலிய மண்ணில் முதலாவது டெஸ்ட் போட்டியில் வென்று இந்திய அணிவரலாறு படைத்தது

ஆஸ்திரேலிய மண்ணில் அந்த அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 31 ரன்கள்
வித்தியாசத்தில் வெற்றி பெற்று வரலாறு படைத்தது.

இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி அடிலெய்டில் நடந்தது. இதில் முதல் இன்னிங்சில் முறையே இந்திய அணி 250 ரன்களும், ஆஸ்திரேலிய அணி 235 ரன்களும் எடுத்தன.

15 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை ஆடிய இந்திய அணி 307 ரன்கள் குவித்து ஆட்டம் இழந்தது. பின்னர் 323 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் 2-வது இன்னிங்சை ஆடிய ஆஸ்திரேலிய அணி 4-வது நாள் ஆட்டம் முடிவில் 49 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 104 ரன்கள் எடுத்து இருந்தது. ஷான் மார்ஷ் 31 ரன்னுடனும், டிராவிஸ் ஹெட் 11 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.


நேற்று 5-வது மற்றும் கடைசி நாள் ஆட்டம் நடந்தது. தொடர்ந்து ஆடிய டிராவிஸ் ஹெட் (14 ரன்) இஷாந்த் ஷர்மாவின் ஷாட் பிட்ச் பந்து வீச்சை தடுத்து ஆடுகையில் ரஹானேவிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். அடுத்து கேப்டன் டிம் பெய்ன் களம் இறங்கினார். நிலைத்து நின்று ஆடிய ஷான் மார்ஷ் (60 ரன்) பும்ரா பந்து வீச்சில் விக்கெட் கீப்பர் ரிஷாப் பான்டிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார்.

இதைத்தொடர்ந்து கம்மின்ஸ், டிம் பெய்னுடன் இணைந்தார். இருவரும் நிதானமாக ஆடினார்கள். அணியின் ஸ்கோர் 187 ரன்னாக உயர்ந்த போது டிம் பெய்ன் (41 ரன்கள்) பும்ரா பந்து வீச்சில் ரிஷாப் பான்டிடம் கேட்ச் கொடுத்து ஆட்டம் இழந்தார். அடுத்து மிட்செல் ஸ்டார்க், கம்மின்சுடன் ஜோடி சேர்ந்தார். இந்திய அணி வீரர்கள் சிறப்பாக பந்து வீசினாலும், ஆஸ்திரேலிய பின்வரிசை வீரர்கள் நிதானமாகவும், நேர்த்தியாகவும் செயல்பட்டு இந்திய அணிக்கு நெருக்கடி அளித்தனர்.

அணியின் ஸ்கோர் 228 ரன்னாக உயர்ந்த போது மிட்செல் ஸ்டார்க் (28 ரன்) முகமது ஷமி பந்து வீச்சில் ரிஷாப் பான்டிடம் கேட்ச் ஆனார். தடுப்பு ஆட்டத்தில் அதிக கவனம் செலுத்திய கம்மின்ஸ் 121 பந்துகளில் 3 பவுண்டரியுடன் 28 ரன்கள் எடுத்த நிலையில் பும்ரா பந்து வீச்சில் ஸ்லிப்பில் நின்ற விராட்கோலியிடம் கேட்ச் கொடுத்து பெவிலியன் திரும்பினார். அப்போது அணியின் ஸ்கோர் 259 ரன்னாக இருந்தது.

கடைசி விக்கெட்டுக்கு ஹேசில்வுட், நாதன் லயனுடன் இணைந்தார். இருவரும் நிதானமான போக்கை கடைப்பிடித்து இந்திய வீரர்களுக்கு பதற்றத்தை உருவாக்கினர். ஒரு வழியாக கடைசி விக்கெட்டான ஹேசில்வுட்டை (13 ரன்கள்) அஸ்வின் வீழ்த்தினார்.

ஆஸ்திரேலிய அணி 2-வது இன்னிங்சில் 119.5 ஓவர்களில் 291 ரன்னில் ‘ஆல்-அவுட்’ ஆனது. இதனால் இந்திய அணி 31 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. நாதன் லயன் 38 ரன்னுடன் ஆட்டம் இழக்காமல் இருந்தார். இந்திய அணி தரப்பில் பும்ரா, அஸ்வின், முகமது ஷமி தலா 3 விக்கெட்டும், இஷாந்த் ஷர்மா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினார்கள். முதல் இன்னிங்சில் 123 ரன்னும், 2-வது இன்னிங்சில் 71 ரன்னும் எடுத்த இந்திய வீரர் புஜாரா ஆட்டநாயகன் விருது பெற்றார்.

இந்த வெற்றியின் மூலம் 4 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் போட்டி தொடரில் இந்திய அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்று இருப்பதுடன் புதிய வரலாறும் படைத்துள்ளது. ஆஸ்திரேலிய மண்ணில் கடந்த 71 ஆண்டுகளில் (1947முதல்) டெஸ்ட் போட்டி தொடரில் முதல் ஆட்டத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது இல்லை என்ற வரலாற்றை மாற்றியுள்ளது. இரு அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி பெர்த்தில் வருகிற 14-ந் தேதி தொடங்குகிறது.

ad

ad