.5% இடஒதுக்கீட்டில் திமுக எந்தவிதத்திலும் உரிமை கொண்டாட முடியாது - அமைச்சர் ஜெயக்குமார்இடஒதுக்கீட்டில் திமுக எந்தவிதத்திலும் உரிமை கொண்டாட முடியாது என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
அரசுப்பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 7.5% உள் இடஒதுக்கீடு வழங்கும் மசோதாவிற்கு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் இன்று ஒப்புதல் அளித்தார். இந்த சட்ட மசோதாவானது தமிழக சட்டப்பேரவையில் கடந்த செப்டம்பர் 15-ம் தேதி ஒருமனதாக நிறைவேற்றப்பட்டு ஆளுநரின் பரிசீலனைக்கு அனுப்பப்பட்டது.
ஆனால் ஆளுநரின் ஒப்புதல் வர தாமதமானதால், சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாவின் அடிப்படையில் 7.5% உள் இடஒதுக்கீடு வழங்கப்படும் என்று தமிழக அரசு நேற்று அரசாணை வெளியிட்டது. அதனை தொடர்ந்து இன்று தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் 7.5% இடஒதுக்கீடு மசோதாவிற்கு ஒப்புதல் அளித்துள்ளார்.
இதனை தொடர்ந்து கிண்டியில் உள்ள ராஜ்பவனுக்கு வருகை தந்த முதலமைச்சர் பழனிசாமி, ஆளுநரை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தார். இந்நிலையில் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் இது குறித்து இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் 7.5% உள் ஒதுக்கீடு மசோதாவுக்கு ஒப்புதல் அளித்ததற்காக ஆளுநருக்கு தமிழக அரசின் சார்பில் முதலமைச்சர் நன்றி தெரிவித்ததாக கூறினார்.
7.5% இடஒதுக்கீடு நடப்பாண்டிலேயே நடைமுறைப்படுத்தப்படும் என்று தெரிவித்த அமைச்சர் ஜெயக்குமார், இந்த இடஒதுக்கீட்டால் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பில் இடம் கிடைக்கும் என்று கூறினார். மேலும் இடஒதுக்கீடு ஒப்புதல் விவகாரத்தில் திமுக எந்தவிதத்திலும் உரிமை கொண்டாட முடியாது என்று கூறிய அவர், சட்டமன்றத்தில் எதிர்கட்சித் தலைவர் ஸ்டாலின் இதற்காக தனித்தீர்மானம் கொண்டு வந்தாரா? என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.