புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

23 நவ., 2012


இறுதி வரை பால் தாக்கரேவின் நிழல் போல் இருந்த ஆறு பேரும் ஈழத் தமிழர்கள் !“மராட்டியம் மராட்டியருக்கே… வேற்று மொழியினருக்கு இங்கே இடம் இல்லை” என்றார் ஒருசமயம். இன்னொருசமயம், ”தமிழர்களை மிகவும் நேசிக்கிறேன். ஈழத் தமிழர்கள், இந்தியாவின் குழந்தைகள்…” என்றார்.

பாபர் மசூதி இடிப்பை முன்னின்று நடத்திய அரசியல் கட்சிகள் அடையாளம் மறைத்துப் பின்வாங்க, ”ஒருவேளை சிவசேனா இடித்து இருந்தால், நான் பெருமை அடைகிறேன்…”என்ற வர். ”இஸ்லாமிய பயங்கரவாதத்தை ஒழிக்க இந்துக்கள் தற்கொலைப் படையினராக மாற வேண்டும்” என்று கர்ஜித்தவர், தனது பேத்தி நெகா, ஒரு முஸ்லிமை மணந்தபோது முன்னின்று வாழ்த்தினார். ”கடவுள் இல்லாமல் உலகம்இயங்காது” என்று சொன்ன தீவிர சைவ சித்தாந்த ஆத்திகர், தனது மனைவி மீனா இறந்தபோது, மேஜை மீது இருந்த கடவுள் படங்களைச் சிதறடித்து, ”கடவுளே இல்லை” என்று கோபம் காட்டியவர். இப்படித் தனது வாழ்க்கையின் ஒவ்வொரு பக்கத்தையும் முரண்கள், சர்ச்சைகள், அதிரடிகளால் நிரப்பிய பால் தாக்கரே, கடந்த 17-ம் தேதி தனது இறுதி மூச்சை நிறுத்திக் கொண்டதை நம்ப முடியாமல் தவிக்கிறார்கள் மராட்டிய மண்ணின் மைந்தர்கள்!

போக்குவரத்து வசதிகள் நிரம்பியிராத அந்தக் காலகட்டத்தில் அண்ணாவின் மறைவுக்கு ஒன்றரைக் கோடிப் பேர் திரண்டது கின்னஸ் ரெக்கார்டு. ஆனால், எந்த ஆட்சிப் பொறுப்பிலும் நேரடியாக உட்காராத தாக்கரேவுக்கு அஞ்சலி செலுத்த 20 லட்சம் பேர் கூடியதும் ஒரு ரெக்கார்டுதான். ‘மண்ணின் மைந்தன்’ முழக்கத்தை முன் நிறுத்தி, பால் தாக்கரேவின் சிவசேனா கட்சியினர் செய்த அதிரடிகளால் மகாராஷ்டிரத்தில் வசித்த வேற்று மாநிலத்தவர்கள் மிகவும் பாதிக்கப் பட்டனர். அவர்களில் பெரும்பாலானோர் தமிழர் ஆவர். ஆனால், 80-களுக்குப் பிறகு தமிழகத்தைச் சேர்ந்த இந்து முன்னணி நிறுவனர் தாணுலிங்க நாடார் உள்ளிட்ட தமிழ்ப் பிரமுகர் களுடன் தாக்கரேவுக்குப் பரிச்சயம் ஏற்பட்டது.

இதற்கு இடையே தாக்கரேவின் கல்லூரி நண்பரான இலங்கையைச் சேர்ந்த சிவஞான சுந்தரம், சச்சிதானந்தம் ஆகியோர் இலங்கையில் தமிழர்களுக்கு நிகழும் கொடுமைகளை தாக்கரேவிடம் விவரித்தனர். அதன் பிறகுதான் – 1985-க்குப் பிறகு – தமிழர்கள் ஆதரவு நிலைப்பாட்டை எடுத்தார் தாக்கரே. அதற்கு முன்பெல்லாம் ஆண்டுக்கு ஆறேழு முறையேனும் பம்பாயின் தாராவி, மாதுங்கா உள்ளிட்ட தமிழர் வாழ் பகுதிகளில் தமிழர்கள் மீது நடந்த தாக்குதல்கள், அதன் பிறகு மடமட வெனக் குறைந்து ஒரு கட்டத்தில் இல்லாமலேயே போய்விட்டது. இதனால் மும்பையின் பெரும்பான்மைத் தமிழர்கள் சிவசேனா தொண்டர்கள் ஆகினர்.

இந்தியா அமைதிப் படையை இலங்கைக்கு அனுப்புகையில் கடும் எதிர்ப்பைத் தெரிவித்தவர்,ஒருமுறை அத்வானி துணை பிரதமராக இருந்தபோது, ‘காஷ்மீரில் பயங்கரவாதிகளை ஒழிக்க விடுதலைப் புலிகளை அழைத்து வர வேண்டும்’என்றார்.

தாக்கரேவுக்கு மகாராஷ்டிர அரசு சார்பாகப் பாதுகாப்பு அளிக்கப்பட்டா லும், இறுதிவரை அவரது நிழல் போலவே இருந்த ஆறு மெய்க்காப்பாளர்களும் ஈழத் தமிழர்கள். இது யாருக்கும் தெரியாது. மராட்டிய இந்துக்களைத் தாண்டியும் தாக்கரேவை ரசித்தவர்கள் ஏராளம். ஆனால், அவரோ தன்னை அந்தச் சின்ன வட்டத்துக்குள் குறுக்கிக்கொண்டது தான் துயரம். தென்னிந்தியர்கள் மீதான வெறுப்பில் தொடங்கி இப்போதைய வட இந்தியர்கள் மீதான வெறுப்பு வரையிலான இனவெறி விதைகளை மராட்டியர்களிடம் விதைத்ததில் சிவசேனாவுக்கு முக்கியப் பங்கு உண்டு. மும்பைக் கலவரமும் முஸ்லிம்கள் மீதான சிவசேனாவின் தாக்குதல்களும் தாக்கரேவின் வரலாற்றில் விழுந்த கரும்புள்ளிகள். ஆனால், எக்கச்சக்க எதிர்மறை விமர்சனங்கள் சூழ்ந்திருந்தாலும் பால் தாக்கரேவின் மறைவைத் தாங்க மாட்டாமல் கதறி அழுகிறார்கள் மண்ணின் மைந்தர்கள் !

ad

ad