புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

18 டிச., 2012

கோத்தாவுக்கு புனர்வாழ்வு கொடுத்து பல்கலை மாணவரை விடுவியுங்கள்; எதிர்க்கட்சிகள் கண்டனம்
வெலிக்கந்த முகாமில் தடுத்துவைக்கப்பட்டுள்ள யாழ். பல்கலைக்கழக மாணவர்கள், புனர்வாழ்வளிக்கப்பட்ட பின்னரே விடுதலை செய்யப்படுவர் என்று பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ள கருத்தை ஏற்கமுடியாது எனக் கூறும் எதிர்க்கட்சிகள்,
வரம்பு மீறி திமிருடன் செயற்படும் கோத்தபாயவுக்கே புனர்வாழ்வு அளிக்கவேண்டும் என்றும் சுட்டிக்காட்டியுள்ளன.

"நீதிமன்றத்தின் செயற்பாடுகளைத் தன்னிச்சையாகச் செய்வதற்கு கோத்தபாய யார்? அவர் ஒரு சாதாரண அரச அதிகாரி. எனவே, தனக்கு வழங்கப்பட்டுள்ள அதிகார எல்லைக்குள்தான் அவர் செயற்பட வேண்டும்'' என தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு உட்பட அனைத்து எதிர்க்கட்சிகளும் கண்டித்துள்ளன.

தடுத்துவைக்கப்பட்டுள்ள பல்கலைக்கழக மாணவர்கள் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும் என்றும் அக்கட்சிகள் வலியுறுத்தியுள்ளன. யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் 12 பேர் அண்மையில் பயங்கரவாத விசாரணைப் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டு வவுனியாவுக்கு விசாரணைக்கென அழைத்துச் செல்லப்பட்டனர்.

விசாரணைகள் முடிவடைந்த பின்னர் 8 மாணவர் கள் விடுதலை செய்யப்பட்டனர். நால்வர் வெலிகந்தவில் தொடர்ந்தும் தடுத்துவைக்கப்பட்டனர். யாழ். பல்கலைக்கழக நிர்வாகத்தினருக்கும், பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவுக்கும் இடையில் கடந்த வெள்ளிக்கிழமை பாதுகாப்பு அமைச்சில் முக்கிய சந்திப்பொன்று நடைபெற்றது.

இதன்போது புனர்வாழ்வுக்கு உட்படுத்தப்பட்ட பின்னரே தடுத்துவைக்கப்பட்டுள்ள மாணவர்கள் நால்வரும் விடுதலை செய்யப்படுவர் என பாதுகாப்புச் செயலாளர் அறிவித்துள்ளார்.

இது குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஐக்கிய தேசியக் கட்சி, ஜனநாயக மக்கள் முன்னணி, நவசமசமாஜக் கட்சி, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி ஆகிய முக்கிய கட்சிகளிடம் கருத்துக்  கேட்டபோது மேற்படி கட்சிகளின் பிரமுகர்கள் கூறியதாவது:

சுரேஷ் பிரேமச்சந்திரன்

எவரையும் புனர்வாழ்வுக்கு உட்படுத்துவது பாதுகாப்பு அமைச்சுச் செயலாளரின் வேலை அல்ல. எழுந்தமான போக்கில் பேசுவதே பாதுகாப்புச் செயலாளரின் இன்றைய வேலையாகவுள்ளது. கைதுசெய்யப்பட்ட மாணவர்களுக்குப் புனர்வாழ்வளிக்கவேண்டுமா அல்லது அவர்களுக்கு சிறைத்தண்டனை வழங்கப்படவேண்டுமா என்பதை நீதிமன்றம்தான் தீர்மானிக்கவேண்டும்.

பொலிஸார் நள்ளிரவுகளில் மாணவர்களின் வீடுகளுக்குள் புகுந்தே அவர்களை      அச்சுறுத்திக் கைதுசெய்துள்ளனர். இது ஒரு தவறான செயல். அவர்களைச்  சரணடையுமாறு மிரட்டியது இரண்டாவது குற்றம்.

கைதுசெய்யப்பட்ட மாணவர்கள் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட வேண்டும். எனினும், ஜனாதிபதியின் தம்பியான தனக்கு எதையும் செய்யமுடியும் என்ற திமிரில் பாதுகாப்புச் செயலாளர் தான்தோன்றித்தனமாகச் செயற்பட்டுள்ளார் என்றார் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன்.

விக்கிரமபாகு கருணாரத்ன


தனக்கு வழங்கப்பட்டுள்ள பதவி என்ன என்பதை இன்னும் சரியாகப் புரிந்துகொள்ளாது செயற்படும் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவுக்குத்தான் முதலில் புனர்வாழ்வளிக்கப்படவேண்டும். அவர்தான் அதிகார மமதையால் பாதிக்கப்பட்டுள்ளார்.

அரச அதிகாரியான கோட்டாபய எந்த அதிகாரத்தின் அடிப்படையில் மாணவர்களை புனர்வாழ்வுக்கு உட்படுத்துமாறு உத்தரவிட்டார். பயங்கரவாதத் தடைச்சட்டத்தைப் பயன்படுத்தி விசாரணைகளை நடத்தினாலும், புனர்வாழ்வுக்கு உத்தரவிடும் அதிகாரம் அவருக்கில்லை. கோத்தபாயவின் இந்தச் செயற்பாட்டை நாம் வன்மையாகக் கண்டிக்கின்றோம்.

அத்துடன், மாணவர்கள் விடுதலைக்காகவும் குரல் கொடுப்போம். அன்று கல்வியில் பாகுபாடு காட்டியதால்தான் நாட்டில் போர் ஏற்பட்டது. எனவே, அரசு மாணவர் சமூகத்துடன் விளையாட முற்படக்கூடாது எனத் தெரிவித்தார் நவசமசமாஜக் கட்சியின் பொதுச் செயலாளரும், தெஹிவளை  கல்கிஸை மாநகரசபை உறுப்பினருமான கலாநிதி விக்கிரமபாகு கருணாரட்ன.

மனோ கணேசன்


சுமார் ஆயிரம் தமிழ் அரசியல் கைதிகள் சிறைச்சாலைகளிலும், தடுப்பு முகாம்களிலும் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு புனர்வாழ்வளித்து விடுவிக்குமாறு அல்லது குறைந்தபட்சம் பிணையிலாவது விடுதலை செய்யுமாறு நாம் பல தடவைகள் அரசிடம் கோரிக்கை விடுத்தோம். இதையெல்லாம் செய்யாத அரசும், அதன் அதிகாரிகளும் சுதந்திரமாகக் கல்விகற்கவேண்டிய மாணவர்களை அடித்து, பிடித்துக் கொண்டுசென்று புனர்வாழ்வளிப்பதாகக் கூறுவது காட்டுமிராண்டித்தனமான செயல்.

ஐ.நா. சபையில் பல தடவைகள் கண்டனத்துக்குள்ளாகியும் இலங்கை அரசு இன்னும் திருந்தவில்லை என்பதையே இவ்வாறான சம்பவங்கள் வெளிச்சம்போட்டுக் காட்டுகின்றன என்றார் ஜனநாயக மக்கள் முன்னணித் தலைவர் மனோ கணேசன்.

கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

யாழ். பல்கலையில் கைதுசெய்யப்பட்ட மாணவர்களுள் நால்வருக்கு புனர்வாழ்வளிக்கவென அரசு மேற்கொள்ளும் நடைமுறைகள் சட்டவிரோதமானவை.
கைதுசெய்யப்பட்ட மாணவர்களின் நலனில் அரசு உண்மையிலேயே அக்கறை கொள்ளுமாயின், அவர்களுக்குப் புனர்வாழ்வளிப்பதை விடுத்து, உடனடியாக அவர்களை விடுதலை செய்யவேண்டும்.

யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் கைதுசெய்யப்பட்டமை தவறானது.  அவர்கள் மீது பொய்யான குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்ட நிலையிலேயே அவர்கள் கைதுசெய்யப்பட்டனர். அத்துடன், அவர்கள் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் தொடர்பில் முறையான விசாரணைகளும் மேற்கொள்ளப்படவில்லை.

விசாரணைகள் எதுவும் மேற்கொள்ளப்படாமல்  குற்றம் நிரூபிக்கப்படாமல் மாணவர்களைப் புனர்வாழ்வு முகாம்களில் தடுத்துவைக்க முடியாது  என்றார் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம்.

ஹரின் பெர்னாண்டோ

யாழ். பல்கலைக்கழகத்தில் கைதுசெய்யப்பட்ட மாணவர்கள் நால்வருக்கும் புனர்வாழ்வளிப்பதாகக் கூறி அவர்களைப் புனர்வாழ்வு முகாம்களில் தடுத்து வைப்பது தவறான செயல். அரசின் இந்த நடவடிக்கையானது ஏன், எதற்கு என்பது புரியாத புதிராகவே உள்ளது. பல்கலைக்கழக மாணவர்களை அச்சுறுத்தி அவர்களது உரிமைகளைப் பறிக்கும் வகையில் அரசு செயற்படுவதை எம்மால் ஏற்க முடியாது.

கடந்த 30 வருட காலம் நாட்டில் இடம்பெற்ற போரின் காரணமாக யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் சில பின்னடைவுகளைச் சந்தித்திருக்கிறார்கள். எனவே, அவர்களது கல்வி அபிவிருத்தி கருதி அவர்களுக்குத் தேவையான பயிற்சிகளை வழங்க அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும். அதுதான் தற்போதைய சூழ்நிலையில் அவர்களுக்குத் தேவையானது.

அவர்களிடம் இருக்கும் குறைபாடுகளை இனங்கண்டு அவற்றை நிவர்த்தி செய்வதற்கான நடவடிக்கைகளில் அரசு ஈடுபடவேண்டும். அதைவிடுத்து கைதுசெய்யப்பட்ட மாணவர்களை அச்சுறுத்தும் வகையிலும், அவர்களது உரிமைகளைப் பறிக்கும் வகையிலும் புனர்வாழ்வு நடவடிககைகளை அரசு மேற்கொள்வது தவறானானது. அதை நாம் ஒருபோதும் ஏற்க முடியாது என்றார் ஐக்கிய தேசியக் கட்சியின் எம்.பி. ஹரின் பெர்னாண்டோ.

யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் தலைவர் வி.பவானந்தன், ஒன்றியத்தின் செயலாளர் ப.தர்சானந், கலைப்பீட மாணவர் ஒன்றியத் தலைவர் க.ஜெனமே ஜெயந்த், விஞ்ஞானபீட மாணவர் ஒன்றியத்தின் ஊறுப்பினர் எஸ்.சொலமன் ஆகிய நால்வருமே தொடர்ந்தும் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ad

ad