மட்டக்களப்பில் பல்வேறு பகுதிகள் நீரில் மூழ்கும் அபாயம்
கிழக்கு மாகாணத்தின் பல்வேறு பகுதிகளிலும் கடந்த மூன்று தினங்களாக தொடர்ச்சியாக பெய்துவரும் அடை மழை காரணமாக பல்வேறு பகுதிகளும் நீரில் மூழ்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
வெல்லாவெளியின் பல பகுதிகளில் போக்குவரத்துக்கள் துண்டிக்கப்பட்டுள்ளது
டன் வேற்றுச்சேனை கிராமத்தை வெள்ளம் சூழ்ந்துள்ளதன் காரணமாக மக்கள் வெளியேறமுடியாத நிலையில் அவர்களை வெளியேற்றும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவருவதாக வெல்லாவெளி பிரதேச செயலாளர் தெரிவித்தார்.
இப்பிரதேசத்தில் சுமார் 120 குடும்பங்கள் இவற்றினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். அத்துடன் வெல்லாவெளியில் ஆறு வீதிகளை மறித்து வெள்ள நீர் ஓடுவதன் காரணமாக போக்குவரத்துக்கள் பாதிக்கப்பட்ட நிலை இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
ஆணைகட்டியவெளி, இரணமடு, கம்பியாறு, 35ஆம் கொலணிக்கான பாதையென்பனவற்றினூடாக வெள்ள நீர் பாய்வதன் காரணமாக போக்குவரத்துக்கள் துண்டிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெல்லவெளி-மண்டூர் வீதியில் நான்கு அடிக்கு மேலாக வெள்ளம் பாய்வதன் காரணமாக அதனூடனா போக்குவரத்துக்கள் துண்டிக்கப்பட்டுள்ளதாக அப்பகுதி தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதேநேரம் மட்டக்களப்பின் புறநகர்ப்பகுதிகளான கூழாவடி, இருதயபுரம் ஆகிய பகுதிகளின் சில இடங்களில் வெள்ள அபாயம் ஏற்பட்டுள்ளது. ஏறாவூரின் பல பகுதிகளும் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக அப்பகுதி தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதேபோன்று கிராண் பாலம் ஊடாக வெள்ள நீர் பாய்வதன் காரணமாக கிராண் ஊடாக படுவான்கரைக்கான போக்குவரத்துக்கள் முற்றாக துண்டிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை தொடர்ச்சியாக பலத்த காற்றுடன் மட்டக்களப்பு மாவட்டத்தில் கடும் மழை பெய்துவருவதன் காரணமாக மட்டக்களப்பு மாவட்டத்தின் இயல்பு நிலை முற்றாக பாதிக்கப்பட்ட நிலை காணப்படுகின்றது.