புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

4 மார்., 2013

 இலங்கைக்கு எதிரான தீர்மானத்துக்கு 30 நாடுகள் ஆதரவு : ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் இன்று தாக்கல் ஆகிறது
இலங்கையில் தனி நாடு கேட்டு போராடிய விடுதலைப்புலிகளுக்கும், சிங்கள ராணுவத்துக்கும் இடையில் 26 ஆண்டுகளுக்கும் மேலாக நடந்து வந்த சண்டை கடந்த 2009-ம் ஆண்டு முடிவுக்கு வந்தது.


விடுதலைப்புலிகளை ஒடுக்குகிறோம் என்ற பெயரில் சிங்கள ராணுவம் நடத்திய வெறியாட்டத்தில், அப்பாவி தமிழர்கள் லட்சக்கணக்கானவர்கள் கொல்லப்பட்டதாக புகார்கள் எழுந்தன. விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனின் மகன் 14 வயது பாலச்சந்திரனை பிணைக் கைதியாக பிடித்து வைத்து, துப்பாக்கியால் சுட்டுக்கொன்றது தொடர்பாக சமீபத்தில் வெளியான படங்கள் உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன.

இலங்கை மீது போர்க்குற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும், இலங்கை அதிபர் ராஜபக்சேவை சர்வதேச மனித உரிமைகள் அமைப்பு முன்பும், சர்வதேச கோர்ட்டிலும் நிறுத்தி விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் வலுத்து வருகின்றன.

சுவிட்சர்லாந்து நாட்டில் உள்ள ஜெனீவா நகரில் செயல்பட்டு வரும் ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் அமெரிக்கா ஒரு கண்டன தீர்மானத்தை தாக்கல் செய்தது. இந்தியா உள்பட பெரும்பான்மையான நாடுகள் இந்த தீர்மானத்தை ஆதரித்து ஓட்டு அளித்தன. அந்த தீர்மானம் நிறைவேறியது இலங்கைக்கு ஒரு நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது.

இந்த நிலையில், ஐ.நா. மனித உரிமை கவுன்சில் கடந்த சில நாட்களுக்கு முன் மீண்டும் கூடி நடந்து வருகிறது. இந்த கூட்டத்தில், இலங்கைக்கு எதிராக அமெரிக்கா மீண்டும் ஒரு தீர்மானத்தை கொண்டு வருகிறது. இன்று (திங்கட்கிழமை) தாக்கல் ஆகும் இந்த தீர்மானத்தில், இலங்கைக்கு எதிராக போர்க்குற்ற விசாரணை நடத்தப்பட வேண்டும், போர்ப்படிப்பினைகள் மற்றும் நல்லிணக்கக்குழுவின் பரிந்துரைகளை நிறைவேற்ற வேண்டும், கடமையை நிறைவேற்றுவதில் தனக்குள்ள பொறுப்பை உணர்ந்து செயல்பட வேண்டும் என்று இலங்கை அரசை வலியுறுத்தப்படும் என்று தெரிகிறது. இந்த தகவலை இலங்கை விவகாரங்களுக்கான அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித்தொடர்பாளர் பாட்ரிக் வென்ட்ரல் நிருபர்களிடம் தெரிவித்தார்.

ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் 47 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன. அவற்றில், ஐரோப்பிய நாடுகள் உள்பட 30-க்கும் மேற்பட்ட நாடுகள் இந்த தீர்மானத்துக்கு ஆதரவு அளிக்க முன்வந்து இருப்பதாகவும், மேலும் சில நாடுகளும் ஆதரவு அளிக்கும் என்று நம்புவதாகவும் அமெரிக்கா தெரிவித்து உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இன்று முதல் இந்த தீர்மானத்தின் மீது விவாதம் நடந்து, முடிவில் ஓட்டெடுப்பு நடக்கும்போது தீர்மானம் பெரும்பான்மை ஆதரவுடன் நிறைவேறும் என்று நம்புவதாகவும் அமெரிக்கா தெரிவித்து உள்ளது என்றும் அந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதில் இந்தியாவின் நிலை என்ன? என்பதை மத்திய அரசு இன்னும் அறிவிக்க வில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ad

ad