விடுதலைப் புலிகளால் கொழும்பில் மறைத்து வைக்கப்பட்டுள்ள 1000 கிலோ குண்டு!- அதிர்ச்சியில் படையினர்
கொழும்பு நகரப் பகுதியில் விடுதலைப் புலிகளால் கொண்டு வரப்பட்ட தலா 500 கிலோ எடையுள்ள இரண்டு பாரிய குண்டுகளும், பெருமளவு ஆயுதங்களும் இன்னமும் மறைத்து வைக்கப்பட்டுள்ளதாக
வெளியான தகவலையடுத்து, பயங்கரவாத புலனாய்வு பிரிவினர் பாரிய தேடுதல் வேட்டையினை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கொழும்பிலிருந்து வெளியாகும் ஆங்கில ஊடகமொன்று இவ்வாறு செய்தி வெளியிட்டுள்ளது.
வெலிக்கடைச் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள விடுதலைப் புலிகள் இயக்க உறுப்பினர் ஒருவர் வழங்கிய தகவலை அடுத்தே இந்த ஆயுதங்கள் பற்றிய விபரம் தெரியவந்துள்ளது.
விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த பாலசுப்ரமணியம் ராஜேந்தரகுமார் என்பவரே வெலிக்கடைச் சிறை அதிகாரியிடம் எழுத்துமூலம் தெரிவித்திருந்தார்.
அவரது கடிதத்தில், தலா 500 கிலோ எடை கொண்ட இரண்டு குண்டுகள், ஏழு ரி-56 துப்பாக்கிகள், ஒன்பது தன்னியக்க கைத்துப்பாக்கிகள், மூன்று இலகு இயந்திரத் துப்பாக்கிகள், ரி-56 துப்பாக்கிகளுக்கான 3500 ரவைகள், 10 மில்லியன் ரூபா பெறுமதியான சொக்கலேற் பொதி, 8 மில்லியன் ரூபா பணம் என்பனவே மறைத்து வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ராஜேந்திரகுமார் மீது அத்தனகல மற்றும் கம்பகா நீதிமன்றங்களில் நான்கு வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இதையடுத்து, அவர் நேற்று கொழும்பு மேலதிக நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டார்.
இதனையடுத்து, மறைத்து வைக்கப்பட்டுள்ள குண்டுகளை கண்டுபிடிப்பதற்கு வசதியாக அவரை மூன்று நாட்கள் தம்மிடம் ஒப்படைக்க வேண்டும் என்று பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினர் நீதிமன்றத்திடம் அனுமதி கோரினர்.
இதற்கமைய குண்டுகள் மறைத்து வைக்கப்பட்டுள்ள இடத்தைக் கண்டறிய மூன்று நாட்கள் பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினரிடம் ராஜேந்திரகுமாரை ஒப்படைக்க நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.
அவரை சிறை அதிகாரிகளின் பாதுகாப்புடன் பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினர் அழைத்துச் செல்ல நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.
இதையடுத்து, கொழும்பை அண்டிய பகுதியில் மறைத்து வைக்கப்பட்டுள்ள இந்த பாரிய ஆயுதக்குவியலைக் கண்டுபிடிக்க பொலிஸார் தேடுதல் வேட்டையை ஆரம்பித்துள்ளனர்.