புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

5 ஜூன், 2013

அரைகுறை அதிகாரங்களும், உரிமைகளும் தமிழர்களுக்கு வேண்டாம்! அதனை எதிர்பார்க்கவும் இல்லை!- த.தே.கூட்டமைப்பு
இலங்கை அரசு பௌத்த சிங்கள இனவாதிகளின் அச்சுறுத்தல்களுக்கு அடிபணிந்து மாகாணசபையின் காணி, பொலிஸ் அதிகாரங்களை நீக்குமாக இருந்தால் வட, மாகாண சபை தேர்தலில் போட்டியிடுவது குறித்து பரிசீலிக்க வேண்டியிருக்கும் என தமிழ் தேசிய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரும், பேச்சாளருமான சுரேஷ் பிறேமச்சந்திரன் தெரிவித்துள்ளதாவது,
அரைகுறை அதிகாரங்களும், அரைகுறை உரிமைகளும் தமிழர்களுக்கு வேண்டாம். தமிழர்கள் அதனை எதிர்பார்க்கவும் இல்லை. முழுமையான அதிகாரங்களும், உரிமைகளுமே தமிழர்களுக்கு தேவை. அதனை வழங்க கூடாதென்ற சிங்கள பௌத்த இனவாதிகளின் நிலைப்பாடு மிகமோசமான சிக்கல்களை தமிழ்-சிங்கள இனங்களுக்கிடையில் ஏற்படுத்தும் எனவும் கூறியுள்ளார்.
வட,மாகாணசபை தேர்தல் நடைபெறவுள்ளதாக கூறப்படும் நிலையில் மாகாணசபைக்கான பொலிஸ், காணி அதிகாரங்களை நீக்க வேண்டும் என்ற கருத்து தென்னிலங்கையில் வலுப்பெற்று வருகின்றது.
இந்நிலையில் அதிகாரங்கள் நீக்கப்பட்டே தேர்தல் நடைபெறும் என இந்தியாவுக்கான இலங்கை தூதுவர் பிரசாத் காரியவசம் தெரிவித்துள்ளமை குறித்து கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
இவ்விடயம் தொடர்பில் மேலும் பாராளுமன்ற உறுப்பினர் குறிப்பிடுகையில்,
இலங்கை- இந்திய ஒப்பந்தம் கொண்டு வரப்பட்ட போது மாகாணசபை முறைமை என்பது இனப்பிரச்சினைக்கான தீர்வு என்ற அடிப்படையிலேயே கொண்டு வரப்பட்டது. அப்போது வடகிழக்கு மாகாணங்கள் இணைக்கப்பட்டிருந்தன. பின்னர் அவை உயர்நீதிமன்றின் தீர்ப்பிற்கமைவாக பிரிக்கப்பட்டுள்ளன.
மேலும் குறித்த மாகாணசபை முறைமையினை நடைமுறைப்படுத்துவதற்காக 13வது திருத்ச் சட்டமும் கொண்டு வரப்பட்டது. அதில் மாகாண, மத்திய அரசுகளுக்குரிய அதிகாரங்கள் அனைத்தும் குறிப்பிடப்பட்டிருக்கின்றன. ஆனால் 1988ம் ஆண்டு இருந்த 13வது தி ருத்தச் சட்டம் இன்றில்லை. அதிலிருந்த அதிகாரங்கள் அனைத்தும் எடுக்கப்பட்டு இப்போது உப்புச் சப்பற்ற ஒன்றாகவே இருக்கின்றது.
இந்நிலையில் மிச்ச சொச்சமாய் உள்ளவற்றையும் அகற்றிவிட வேண்டும் எனவும், வடக்கிற்கு தேர்தலே நடத்தக்கூடாதெனவும், தமிழர்களுக்கு அதிகாரங்களை வழங்க கூடாதெனவும் ஏனைய மாகாணங்களுக்கு தேர்தல் நடைபெற்ற போது அமைதியாக இருந்த பெளத்த சிங்கள இனவாதிகள் இப்போது கூச்சலிடுகின்றனர்.
இதன் மூலம் அவர்கள் வெளிப்படுத்த விரும்புவது என்னவென்றால்,
தமிழர்களுக்கு ஒரு உரிமைகளையும், அதிகாரங்களையும் வழங்கக்கூடாது. அவர்களை தொடர்ந்தும் இராணுவ அடக்குமுறைக்குள்ளும், சிங்கள ஏகாதிபத்தியத்திற்குள்ளும் வைத்திருக்கவேண்டும் என்பதேயாகும்.
இதனை தட்டிக்கேட்டால் புலிகள் கேட்டதைக் கேட்கிறார்கள் என்றும், கேட்பவர்களை புலிகள் என்றும் பட்டம் சூட்டி, பேசுவதற்கும் கூட தடை விதிக்கப்படுகின்றது.
இதனை தமிழர்கள் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை. இந்திய அரசாங்கம் தமிழர்களுக்கு வாக்குறுதியளித்திருந்தது வடக்கு கிழக்கு இணைப்பு தொடரும் என்று. ஆனால் அது இப்போது பிரிக்கப்பட்டிருக்கின்றது.
இந்நிலையில் காணி, பொலிஸ், நிதி அதிகாரங்களும் மேலதிகமாக ஆளுநருக்குள்ள அதிகாரங்களை குறைத்தல், வரி அறவீடு போன்ற அதிகாரங்களும் தமிழர்களுக்குத் தேவை.
எனவே அரசாங்கம் யுத்தத்தை வெற்றி கொண்டிருக்கலாம். ஆனால் தமிழ்-சிங்கள இனங்களுக்கிடையிலான விரிசல் நிலை முன்பிருந்த நிலையிலேயே இருக்கின்றது.
எனவே இந்த நாட்டில் ஸ்திரமானதும், சமாதானமானதுமான சூழல் ஏற்படுவதற்கு அரசாங்கம் தன்னுடைய நிலைப்பாடுகளை தெளிவாக எடுக்க வேண்டும், வெளிப்படுத்த வேண்டும். வெறுமனே அரைகுறை அதிகாரங்கள், உரிமைகள் தமிழருக்கு வேண்டாம் என்றார்.

ad

ad