விக்கிரகங்கள் உடைக்கப்பட்ட ஆலயத்தை பார்வையிட்டார் அமெரிக்க தூதரக அதிகாரி
மட்டக்களப்பில் அண்மையில் விக்கிரக உடைப்பு இடம்பெற்ற குருக்கள் மடம் ஸ்ரீ செல்லக் கதிர்காமர் ஆலயத்தினை பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் தலைமையில் அமெரிக்க தூதுவரலாயத்தின் அரசியல் அதிகாரி மைக்கல் ஏவின், இணை அதிகாரி சந்தீப் குரூஸ் ஆகியோர் நேற்று முன்தினம் பார்வையிட்டனர்.
இதன்போது இவர்களிடம் சீ.யோகேஸ்வரன் பா.உ. இவ்விடயமாக தெரிவித்ததாவது!
வடக்கு கிழக்கு மாகாணங்களில் கடந்த சில காலங்களாக ஆலயங்களில் கொள்ளையிடும் சம்பவங்கள் நடைபெற்று வருகின்றது. பொதுவாக மட்டக்களப்பு மாவட்டத்திலே பல ஆலயங்கள் கொள்ளையிடப்பட்டிருக்கின்றது. அதேபோன்று அம்பாறை, திருகோணமலை போன்ற வடக்கு, கிழக்
கு மாகாணத்திலுள்ள ஆலயங்களிலும் நடைபெற்றிருக்கின்றது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் நடைபெற்ற கொள்ளைகள் சார்பாக ஆலய தர்மகர்த்தாக்கள் பொலிஸ் நிலையங்களுக்கு சென்று முறையிடுகின்றனர். அதேவேளை பொலிஸார்கள் ஆலயங்களுக்கு வருகை தந்து பார்வையிடுகின்றனர்.
ஆனால் இதுவரை மட்டக்களப்பு மாவட்டத்தில் நடைபெற்ற பிரதானமான எந்த கொள்ளைச் சம்பவம் சார்பாகவும் அதாவது ஆலய விக்கிரம் உடைக்கப்பட்டவை சார்பாகவோ? தங்க நகைகள் கொள்ளையிடப்பட்டவை சார்பாகவோ? யாரும் கைது செய்யப்படவில்லை என தெரியவருகின்றது. அதற்கு பிற்பாடு அதுசார்பாக அவர்கள் விசாரணை நடத்துவதுமில்லை.
கடந்த வருடம் வாழைச்சேனை புதுக்குடியிருப்பு ஸ்ரீ பத்திரகாளி அம்பாள் ஆலயத்தில் பெருந்தொகையான நகைகள் இரவு வேளையிலே களவாடப்பட்டது. ஆனால் அதன் முறைப்பாடு வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தில் உண்டு. ஆனால் இதுவரை எந்தவித விசாரணைகளையும் பொலிஸார் மேற்கொள்ளவில்லை.
நானும் இவ்விடயமாக வாழைச்சேனை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி, பொலிஸ் அத்தியட்சகர் மற்றும் மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர் ஆகியோரிடம் முறைப்பாடு செய்திருக்கின்றேன். ஆனால் இதுசார்பாக எந்த நடவடிக்கையையும் இன்னும் எடுத்ததாக அறியவில்லை.
அத்தோடு இவ்வாலயம் உட்பட மாங்காடு பிள்ளையார் ஆலயத்திலும் இந்து விக்கிரகங்கள் உடைக்கப்பட்டு, தங்க இயந்திரத் தகடுகள்; கொள்ளையிடப்பட்டிருந்தது. அத்தோடு குருக்கள்மடம் ஐயனார் ஆலயத்தில் உண்டியல் உடைக்கப்பட்டிருந்தது. யுத்த காலத்திலே இச்சம்பவம் இடம்பெறவில்லை. தற்போதைய காலத்திலே தான் இவ்வாறான சம்பவம் இடம்பெறுகின்றமை இந்து மக்களிடையே சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
வாகரைப் பிரதேசத்திலுள்ள புனானை புகையிர நிலைய முன்பாக உள்ள விநாயகர்; ஆலயத்திற்கு அருகாமையில் பிரமாண்டமான விகாரை ஒன்றை பௌத்த பிக்கு உருவாக்கி இருக்கின்றார். அதுதவிர விநாயகர் ஆலயத்தை மறைந்து விகாரையை கட்டியுள்ளனர். அத்தோடு பின்புறமாக 15 வீடுகள் கட்டப்பட்டு சிங்கள குடியேற்றங்கள் திட்டமிட்ட வகையில் இடம்பெற்றுள்ளது.
ஆனாலும் கடந்த 1990ம் ஆண்டளவில் புணாணை மயிலந்தன்னை கிராமத்தில் இராணுவத்தினரால் 35 பேர் கொல்லப்பட்டும், 13 பேர் கடும் காயமடைந்தும் உள்ளதுடன் இதனால் இப்பகுதி மக்கள் நீண்டகாலமாக அகதியாக இடம்பெயர்ந்து வாழ்ந்துள்ளனர். சிலர் தற்போது குடியேறியுள்ளதாகவும் அறியமுடிகின்றது.