வடமாகாணத்திலும் வெற்றிலையில் ஆளுங்கட்சி போட்டி!- அமைச்சர் டக்ளஸ் அதிர்ச்சி
எதிர்வரும் வட மாகாண சபைத் தேர்தலிலும் ஆளுங்கட்சி வெற்றிலைச் சின்னத்திலேயே போட்டியிட முடிவெடுத்துள்ளதாக நம்பகமான தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த 2008ம் ஆண்டு கிழக்கு மாகாண சபைக்கான தேர்தல் நடைபெற்றபோது ஆளுங்கட்சியின் வெற்றிலைச் சின்னத்திலேயே தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி போட்டியிட்டது.
பின்னர் அக்கட்சியின் தலைவர் சந்திரகாந்தன் முதலமைச்சராக தேர்வு செய்யப்பட்டார்.
இதே வழிமுறையைக் கையாண்டு வட மாகாண சபைத் தேர்தலிலும் வெற்றிலைச் சின்னத்தில் போட்டியிட ஆளுங்கட்சி முடிவெடுத்துள்ளது.
இது அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கு கடும் அதிர்ச்சியை ஏறபடுத்தியுள்ளது.
இதனையடுத்து மாகாண சபைத்தேர்தலில் தங்களுடைய சொந்த சின்னமான வீணையிலா, இன்றேல் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் சின்னமான வெற்றிலைச் சின்னத்தில் போட்டியிடுவதா என்பது தொடர்பில் இன்று செவ்வாய்க்கிழமை தீர்மானிப்பதற்கு ஈழ மக்கள் ஜனநாயக கட்சி தீர்மானித்துள்ளது.
அமைச்சரும் கட்சியின் செயலாளர் நாயகமுமான டக்ளஸ் தேவானந்தா தலைமையில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்ற கூட்டத்திலேயே இந்தத் தீர்மானம் எட்டப்பட்டது.