புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

3 செப்., 2013

இராணுவ நடவடிக்கையை தடுக்குமாறு சிரிய அரசு ஐ.நாவிடம் வலியுறுத்து

கடும் நடவடிக்கைக்கு அரபு லீக் அழுத்தம்
சிரியா மீதான யுத்த செயற்பாட்டை தடுக்க நடவடிக்கை எடுக்குமாறு சிரிய அரசு ஐ. நா. சபையை கேட்டுள்ளது. ஆனால் சிரிய அரசுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரபு லீக், சர்வதேச சமூகத்தையு
ம் ஐ. நா. சபையையும் வலியுறுத்தியுள்ளது.
சிரியாவில் நூற்றுக்கணக்கானோரை பலிகொண்ட இரசாயன ஆயுத தாக்குதல் சம்பவத்தை தொடர்ந்து, அமெரிக்கா மற்றும் அதன் கூட்டு நாடுகள் சிரியா மீது இராணுவ நடவடிக்கைக்கு தயாராகி வருகின்றன. சிரியாவின் ஜனாதிபதி பஷர் அல் அஸாத் அரசு, இதற்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு ஐ. நா. சபையை கேட்டுள்ளது.
“சிரியாவுக்கு எதிரான எந்த ஆக்கிரமிப்பு நடவடிக்கையையும் தடுக்கும் பொறுப்பு ஐ. நா. செயலாளர் நாயகத்திற்கு இருக்கிறது என்ற பொறுப்பை சிரிய அரசு வலியுறுத்துகிறது” என சிரிய அரச ஊடகம் கூறியுள்ளது.
எனினும் நேற்று முன்தினம் கெய்ரோவில் கூடிய அரபு லீக்கின் வெளியுறவு அமைச்சர்கள் வெளியிட்ட அறிவிப்பில், கடந்த ஓகஸ்ட் 21 ஆம் திகதி இடம்பெற்ற இரசாயன தாக்குதலுக்கு சிரியாவின் பஷர் அல் அஸாத் அரசே பொறுப்புக் கூற வேண்டும் என குற்றம் சாட்டப்பட்டது. “ஐ. நா. கொள்கை மற்றும் சர்வதேச சட்டத்திற்கு அமைய ஐ. நா. சபையும் சர்வதேச சமூகமும் கடுமையான நடவடிக்கையை மேற்கொண்டு தனது பொறுப்பை நிறைவேற்ற வேண்டும்” என அரபு லீக் வலியுறுத்தியுள்ளது.
எனினும் அரபு லீக் அங்கத்துவ நாடுகளான எகிப்து, ஈராக், லெபனான், துனீஷியா மற்றும் அல்ஜீரியா ஆகியன சிரியா மீதான வெளிநாட்டு இராணுவ தலையீட்டுக்கு தனது எதிர்ப்பை வெளியிட்டிருந்தன.
இதனிடையே சிரிய இரசாயனத் தாக்குதல் தொடர்பில் ஐ. நா. நிபுணர் குழு சம்பவ இடத்திலிருந்து சேகரித்த ஆதாரங்கள் நேற்று ஆய்வு கூடத்திற்கு அனுப்பப்பட்டன. இந்த ஆய்வு முடிவுகள் சிரிய அரசே இந்த தாக்குதலை நடத்தியதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்கு தீர்க்கமானதாக அமையும் என கருதப்படுகிறது.
எனினும் இந்தத் தாக்குதலை சிரிய அரசே நடத்தியது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை என அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா ஏற்கனவே குறிப்பிட்டுள்ளார்.
அதேபோன்று தாக்குதலுக்கு உள்ளானவர்களிடம் இருந்து கிடைத்த தலைமயிர் மற்றும் இரத்த மாதிரிகளை பரிசோதித்ததில் அபாயகரமான சரின் நச்சுவாயுத்தாக்குதல் நடத்தப்படமைக்கு ஆதாரம் கிடைத்துள்ளதாக அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் ஜோன் கெர்ரி தெரிவித்துள்ளார். அமெரிக்கா தமது ஆட்கள் மூலம் சுயமாக திரட்டிய ஆதாரங்களே தம்மிடம் இருப்பதாக கெர்ரி குறிப்பிட்டுள்ளார்.
சிரியா மீதான இராணுவ நடவடிக்கைக்கு அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா அந்நாட்டு கொங்கிரஸ் அவை அனுமதியை கோரியுள்ளார். இது தொடர்பில் கொங்கிரஸ் அவை எதிர்வரும் செப்டெம்பர் 9ஆம் திகதியே வாக்கெடுப்பை நடத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மறுபுறத்தில் சிரிய இராணுவ நடவடிக்கைக்கான அனுமதி பிரிட்டன் பாராளுமன்றத்தால் மறுக்கப்பட்டுள்ளது. அதே போன்று அமெரிக்காவுடன் கூட்டுச் சேராமல் சிரியா மீதான நடவடிக்கையில் இறங்கப் போவதாக பிரான்ஸ் கூறியுள்ளது. இதன் மூலம் அமெரிக்கா, சிரியா மீது தாக்குதல் நடத்த திட்டமிட்டால் அது தனித்தே செயற்பட வேண்டி ஏற்பட்டுள்ளது.
எவ்வாறாயினும் எவ்வகையான தாக்குதல் நடவடிக்கைக்கும் முகம்கொடுக்கும் திறன் தமது நாட்டுக்கு இருப்பதாக சிரிய ஜனாதிபதி பஷர் அல் அஸாத் மீண்டும் ஒருமுறை வலியுறுத்தியுள்ளார். “சிரியா மீது தாக்குதல் நடத்துவது குறித்த அமெரிக்காவின் அச்சுறுத்தல்கள் சிரியாவின் கொள்கையில் எந்த பலவீனத்தையும் ஏற்படுத்தாது. அதேபோன்று பிராந்திய மற்றும் அமெரிக்கா உட்பட மேற்கு நாடுகளின் ஆதரவுடன் செயற்படும் தீவிரவாதிகளை ஒடுக்கும் செயற்பாட்டிலும் எந்தப் பின்னடைவையும் ஏற்படுத்தாது” என அசாத் அந்நாட்டு அரச தொலைக்காட்சி ஊடாக தெரிவித்தார்.

ad

ad