புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

3 செப்., 2013

களுத்துறைச் சிறையில் தமிழ் அரசியல் கைதி மரணம்: அதிகாரிகளின் மனிதாபிமானமற்ற செயலென ஆனந்த சங்கரி கண்டனம்
களுத்துறைச் சிறைச்சாலையில் இன்று காலை உயிரிழந்த தமிழ் அரசியல் கைதியான பிரான்ஸிஸ் நெல்சனின் மரணத்திற்கு சிறை அதிகாரிகளின் மனிதாபிமானமற்ற செயலே காரணம் என வீ.ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார்.
இது குறித்து ஆனந்த சங்கரி வெளியிட்டுள்ள அறிக்கையில்,
களுத்துறை சிறைச்சாலையில் இன்று காலை மரணமடைந்த 33 வயதையுடைய தமிழ் அரசியல் கைதி பிரான்ஸிஸ் நெல்சன் தனது இரு பிள்ளைகளையும், பொருளாதார ரீதியாக மிகவும் நலிவுற்றுள்ள தனது மனைவியின் பொறுப்பில் விட்டுச்சென்றுள்ளார்.
2006ம் வருடம் முதல் ஏறக்குறைய ஏழாண்டுகள் சிறையில் தனது வாழ்க்கை காலத்தை கழித்த எம் தமிழ் உறவான அப்பாவி தமிழ் இளைஞனுக்கு வேண்டிய மருத்துவ வசதிகளை சிறை அதிகாரிகள் உரிய நேரத்தில் வழங்கியிருந்தால் குறித்த இளைஞனின் உயிரை காப்பாற்றியிருக்க முடியும்.
அவரின் உடலின் பல பாகங்களிலும் எறிகணை சிதறல் துண்டுகளும், துப்பாக்கி சன்னங்களின் துகள்களும் இருந்தமை உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த ஒரே ஒரு காரணம் மட்டும் போதும் பிரான்ஸிஸ் நெல்சனை சிறீலங்கா அரசு விடுதலை செய்வதற்கு.
இந்த ஏழாண்டுகளும் உடலில் வலியை சுமந்து கொண்டு அவர் பட்ட அவஸ்தைகளும், துன்பங்களும் வார்த்தைகளால் விவரிக்க முடியாதவை. சிறை அதிகாரிகள் உரிய நடவடிக்கைகளை எடுக்கத்தவறியதன் விளைவாகவே இன்று இந்த துன்பியல் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
மனிதாபிமானமற்ற செயலால் எம் சகோதரனின் மரணம் நிகழ்ந்திருப்பதால் பிரான்ஸிஸ் நெல்சனின் மரணத்துக்கு சிறை அதிகாரிகள் பெறுப்பேற்றேயாக வேண்டும்.
குறித்த இளைஞனின் மனைவி தனது இரு பிள்ளைகளையும் பராமரிக்க முடியாத கையறு நிலையில் இன்று நிற்கின்றார். இந்த மரணச்சம்பவத்தை அந்த இரு சிறு பிள்ளைகளுக்கும் எதிராக இழைக்கப்பட்ட அநீதியாகவே, கொடூரமான செயலாகவே நான் பார்க்கின்றேன்.
மனிதாபிமான அடிப்படையிலேனும் தேவையான மருத்துவ வசதிகளை வழங்கியிருக்கலாம். இல்லை அவரை விடுவித்திருக்கலாம். சிறை அதிகாரிகளுக்கு இருந்த அதிகாரத்தை முறையாக பிரயோகிக்க தவறியமையால் பிரான்ஸிஸ் நெல்சனின் மரணம் சம்பவித்திருக்கிறது.
பிரான்ஸிஸ் நெல்சனின் உடலை அவருடைய மனைவி மற்றும் உறவினர்களிடம் உடனடியாக கையளிக்க வேண்டுவதோடு, அவர்களது இரு பிள்ளைகளையும் பராமரிக்க, கல்வித்தேவையை பூர்த்தி செய்ய வசதி இன்மையால் அவரது மனைவிக்கு உரிய நஸ்டஈட்டை வழங்குமாறு வலியுறுத்துகின்றேன்.
மேலும் பல தமிழ் அரசியல் கைதிகள் பிரான்ஸிஸ் நெல்சனைப்போன்றே உடலில் வெடிபொருள்களின் எச்சங்களை தாங்கியவாறு, ஜீரணிக்க முடியாத அவலங்களோடு, மருத்துவ வசதிகளுக்காக ஏங்கியவாறு இருப்பதாக தகவல் கிடைத்திருப்பதால், உடனடியாக நியாயமாக செயல்படக்கூடிய அதிகாரிகளைக்கொண்ட குழுவை நியமித்து தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்ய அல்லது வேறு ஏதேனும் மாற்று நடவடிக்கைகளை எடுப்பதற்கு சிபாரிசு செய்கின்ற அதிகாரம் அவர்களுக்கு வழங்கப்படுதல் வேண்டும்.
இனியும் இத்தகைய கொடூரமான மரணங்கள் சம்பவிக்காமல் இருக்க, தமிழ் அரசியல் கைதிகள் எனும் ஒரே காரணத்துக்காக தாம் விரும்பிய எதையும் கேட்க முடியாத நிலையில் அடக்குமுறைக்குள் வைக்கப்பட்டிருக்கும் அப்பாவி தமிழ் அரசியல் கைதிகள் அனைவரையும் விடுதலை செய்து, அவர்களின் வாழ்க்கையில் மறுமலர்ச்சியை ஏற்படுத்த வேண்டுமென நான் அரசை வலியுறுத்துகின்றேன் எனக் குறிப்பிட்டுள்ளார்.

ad

ad