புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

3 செப்., 2013

தமிழர்கள் மீண்டும் ஆயுதப் போராட்டத்திற்கு செல்வார்களானால் இனவாதிகளும் அரசாங்கமுமே பொறுப்பு! த.தே.கூட்டமைப்பு
தமிழ் தேசிய கூட்டமைப்பு தனிநாட்டு கோரிக்கையினையும், ஆயுதப் போராட்டத்தையும் மீள உருவாக்குவதற்கு நினைக்கவில்லை. ஐக்கிய இலங்கைக்குள் பூரண சமஷ்டி அடிப்படையிலான தீர்வு ஒன்றினையே நாம் கேட்டிருக்கிறோம்.
ஆனால் தமிழர்களுக்கு உரிமைகளையும், அதிகாரங்களையும் வழங்க மறுக்கும் சிங்கள இனவாத அமைச்சர்களும், அவர்கள் சார்ந்துள்ள அரசாங்கமுமே தமிழர்களிடம் மீள ஆயுதங்களை திணிக்கப் பார்க்கிறார்கள்.
நாம் மிக சரியான பாதையில் பயணித்துக் கொண்டிருக்கின்றோம். அதிலிருந்து விலகி தமிழர்கள் மீளவும் தனிநாட்டு கோரிக்கைக்கும், அதற்கான ஆயுதப் போராட்டத்திற்கும் செல்வார்களாக இருந்தால் அதற்கான முழு பொறுப்பும் சிங்கள இனவாத அமைச்சர்களும், அரசாங்கமுமே தவிர கூட்டமைப்பு அல்ல. என, கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரும், பேச்சாளருமான சுரேஷ் பிறேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
யாழ். ஊடக அமையத்தில் நேற்று நடைபெற்ற சமகால அரசியல் நிலைமைகள் குறித்த பத்திரிகயாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
குறித்த பத்திரிகையாளர் சந்திப்பில் மேலும் அவர் உரையாற்றுகையில், கடந்த 27ம் திகதி மன்னார் மாவட்டத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் மீளவும் ஆயுதப் போராட்டத்தை உ ருவாக்கப் போவதாக நான் பேசியதாக சில அரச ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்த நிலையில் இனவாத அமைச்சர் விமல் வீரவன்ச குறித்த உரை தொடர்பில் சட்ட ஒழுங்குகளுக்கு அமைவாக என்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்திருக்கின்றார்.
ஆனால் அங்கு நான் ஆற்றிய உரையில் இந்திய- இலங்கை ஒப்பந்தத்தின் பின்னரான காலப்பகுதியில் சந்திரிகா காலத்தில் 1995ம், 97ம், 2000ம் ஆண்டுகளில் 3 தீர்வு திட்டங்கள் முன்வைக்கப்பட்டிருந்தன. பிறேமதாஸா காலத்தில் மங்கள முனசிங்க தலமையில் பாராளுமன்ற தெரிவு குழு ஒன்று அமைக்கப்பட்டிருந்தது.
மஹிந்த ராஜபக்ச காலத்தில் 2 திட்டங்கள் உருவாக்கப்பட்டிருந்தன. இவை அனைத்தும் 13ம் திருத்தச் சட்டத்தில் உள்ள அதிகாரங்கள் போதாது,  அதற்கு மேல் சென்று தமிழர்களுக்கு தீர்வு வழங்கவேண்டும் என்ற அடிப்படையில் உருவாக்கப்பட்டவை.
மேலும் அப்போது விடுதலைப் புலிகள் ஆயுதம் ஏந்திப் போராடிக் கொண்டிருந்தனர். ஆனால் இப்போது தமிழர்களுக்கு தீர்வு அவசியமில்லை,  அபிவிருத்தியே போதும் என்றும், தமிழர்களுக்கு எதனையும் வழங்கக் கூடாதென்றும் கருத்துக்கள் முன்வைக்கப்படுகின்றன.
எனவே தமிழர்களிடம் ஆயுதம் உள்ள போது ஒரு பேச்சும், ஆயுதம் இல்லாத போது ஒரு பேச்சும், பேசப்படுகின்றது. இதனை நாங்கள் வெளிப்படுத்துவோம். அதனடிப்படையில் தமிழர்களின் அடிப்படை அரசியல் அபிலாஷைகளை நிறைவு செய்யும் வகையிலான தீர்வு ஒன்றினை சர்வதேசத்தின் ஆதரவுடன் பெறுவோம்.
எனவே எதிர்காலத்தில் ஆயுதப் போராட்டப் பாதைக்குள் தமிழர்கள் செல்வார்களாயின் அதற்கான முழு பொறுப்பும் சிங்கள இனவாத அமைச்சர்களையும், அரசாங்கத்தையுமே சாரும். அதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு காரணமல்ல.
ஐக்கிய இலங்கைக்குள் பூரண சமஷ்டி அடிப்படையிலான தீர்வு ஒன்றினையே நாம் கேட்டிருக்கின்றோம். ஆனால் சாதாரணமாக மாகாணசபைகளுக்கு உள்ள அதிகாரங்களையே சிங்கள இனவாத அமைச்சர்களும், இனவாதிகளும் வழங்க மறுத்துக் கொண்டிருக்கின்றார்.
எனவே கூட்டமைப் பினரையும், பாராளுமன்ற உறுப்பினர்களையும் குற்றம் சொல்வதை இவர்கள் நிறுத்திக் கொள்ள வேண்டும்.
வடக்கு மாகாணசபை தேர்தல் தொடர்பாக.
வடக்கு மாகாணசபை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் தேர்தலுக்கு முன்னதாக வன்முறைச் சம்பவங்களை நடாத்தி மக்களை அச்சுறுத்துவதன் மூலம் வாக்களிப்பு விகிதத்தை குறைப்பதற்கு அரசாங்கமும், படையினரும் முனைப்பு காட்டி வருவதாக நாங்கள் அறிகின்றோம்.
மேலும் இதற்காக படையினருக்கு பிரத்தியேகமாக பயிற்றுவிக்கப்படுவதாகவும் நாங்கள் அறிகின்றோம். இவை அனைத்தும் வடக்கில் நீதியானதும், சுதந்திரமானதுமான தேர்தல் நடைபெறப் போவதில்லை
என்பதற்கான சமிக்ஞைகள்.
இந்த விடயத்தினை நாம் மட்டும் கூறவில்லை. தேர்தல் கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டிருக்கும் அமைப்புக்களும், தேர்தலில் போட்டியிடும் முக்கியமான கட்சிகளும் கூறியிருக்கின்றன.
மேலும் வடக்கு மாகாண விளையாட்டுத்துறை அமைச்சிற்கு ஒதுக்கப்பட்டிருந்த 10மில்லியன் ரூபா நிதி ஆளுநரின் விசேட பணிப்பின் பெயரில் எடுக்கப்பட்டு அந்த நிதியின் மூலம் விளையாட்டு உபகரணங்கள் கொள்வனவு செய்யப்பட்டு அவை வடக்கிலுள்ள தமிழ் அமைச்சர் ஒருவரிடம் ஒப்படைக்கப்படவுள்ளதாக நாங்கள் அறிகின் றோம்.
இந்த விடயம் தொடர்பில் நாம் விளையாட்டுத்துறை அமைச்சின் செயலாளருடன் தொடர்பு கொண்டு கேட்டபோது தனக்கு அவ்வாறான தகவல்கள் எவையும் தெரியாது. ஆனால் வலயக் கல்வி அலுவலகங்களுக்கு அறிவிக்கப்பட்டதோ தெரியவில்லை என பதில் கொடுத்துள்ளார்.
செயலாளருக்கு தெரியாமல் எவ்வாறு வலய அலுவலகங்களுக்கு தகவல் வந்தது என்பது எமக்குத் தெரியவில்லை.
ஏற்கனவே 100 மில்லியன் ரூபா நிதி வடக்கு மாகாணத்திலிருந்து எடுக்கப்பட்டிருக்கின்றது. மேலும் சுழற்சிமுறைக் கடனுக்காக ஒதுக்கப்பட்ட 26 மில்லியன் ரூபா நிதி எடுக்கப்பட்டிருக்கின்றது.
இவை அனைத்தும் தேர்தலை நோக்காக கொண்டே எடுக்கப்படுகின்றன. செலவிடப்படுகின்றன.
இந்த விடயம் குறித்து நாம் தேர்தல் ஆணையகத்திற்குத் தெரியப்படுத்தியிருக்கின்றோம். ஆனால் இதுவரை நடவடிக்கை  எடுக்கப்பட்டதாக தெரியவில்லை என்றார்.

ad

ad