தீபாவளிப் பண்டிகை களை கட்டத் தொடங்கிவிட்டது. எங்கு பார்த்தாலும் பட்டாசுகளின் சத்தம் காதைப் பிளக்கின்றது. ஆனாலும் மக்களிடம் வழக்கமான உற்சாகம் மிஸ்.
சென்னை தி.நகர் பகுதி மிகப்பெரிய வர்த்தக சந்தை. தீபாவளி பண்டிகை என்றாலே ஒவ் வொரு வருடமும் கூட்டம் அதிகரித்து தி.நகரே அல்லோகல்லோலப்படும். ஆனால், இந்த வருடம் கடைசி 4 நாள் தவிர மற்றபடி கூட்டம் கணிசமாக குறைந்துள்ளது. வியாபாரமும் செம டல் என்கிறது வர்த்தக உலகம்.
திருப்பூர் ஆலயா டெக்ஸ்டைல்ஸின் மேனேஜர் மன்சூரிடம் விவாதித்தபோது, ""இந்த வருடம் ஆடியும் சரி தீபாவளியும் சரி வர்த்தகர்களுக்கு உற்சாகத்தை தரவில்லை. தீபாவளிக்கு 2 நாள் இருக்கும் நிலையில்தான் மக்களின் கூட்டம் ஓரளவு அலை மோதியது. தி.நகரில் 15-க்கும் மேற்பட்ட பெரிய டெக்ஸ்டைல்ஸ் கடைகள் இருக்கின்றன. பண்டிகை காலங்களில் இந்த ஒவ்வொரு கடையும் தினசரி 2 கோடி ரூபாய் வருமானம் ஈட்டும். ஆனால், இந்த வருடம் இந்த வருவாயில் 25-லிருந்து 30 சதவீதம் குறைந்திருப்ப தாகவே கேள்விப்பட்டோம். சிறிய கடைகளுக்கோ ஒட்டு மொத்த வியாபாரமே முடங்கிப் போனது.’மக்களிடம் பணப் புழக்கம் இல்லாததே காரணம்'' என்கிறார் மிக இயல்பாக.
தி.நகரில் புகழ் வாய்ந்த கடைகளில் ஒன்றான சென்னை சில்க்ஸின் பிரான்ஞ் மேனேஜர் வேலுமணியோ,’’ ""எங்களைப் பொறுத்தவரை பிஸ்னெஸ் டல் என்று சொல்ல முடியாது. லாபத்தின் மார்ஜினை மிகக் குறைந்த அளவிலே நாங்கள் வைத்திருப்பதால் மக்களின் வாங்கும் சக்திக்கேற்ப தர முடி கிறது'' என்கிறார் பல்வேறு காரணி களைச் சுட்டிக்காட்டி.
போத்தீஸ் நிறு வனத்தின் பொதுமேலாளர் சந்திரசேகர், ""கூட்ட நெரிசல் இல்லை என் பதால் வர்த்தகம் டல் என்பதுபோல தோன்றும். உண்மையில் எங்களுக்கான வியாபாரம் கடந்த வருடத்தை ஒப்பிடும்போது இந்த வருடமும் சூப்பர்தான்'' என்கிறார்.
தமிழ்நாடு சேம்பர்ஸ் ஆஃப் காமர்ஸின் தலைவர் சோழநாச்சியாரிடம் பேசியபோது, ""பண்டிகை துவங்குவதற்கு 25 நாட்களுக்கு முன்பே இதன் வர்த்தகம் துவங்கிவிடும். பண்டிகை தேதி நெருங்க நெருங்க ஏகத் துக்கும் சூடு பிடிக்கும். ஆனால் இந்த வருடம் அப்படி இருக்கவில்லை. பணப்புழக்கம் இல்லைங்கிறதுனால பண்டிகைக்கு துணி மணிகள் எடுப்பதை 60 சதவீதம் மக்கள் புறக்கணித்திருக்கிறார்கள்''’என்கிறார் தனக்கு கிடைத்த புள்ளிவிபரங்களின் அடிப்படையில்.
தி.நகரில் தீபாவளி பர்ச்சேஸ் செய்ய வந்த மக்கள் பலரை வழிமறித்துப் பேசினோம். காட்டுப்பாக்கம் கிரிஜா,’""போன வருஷம் 5000 ரூபாய்க்கு துணி எடுத்தேன். இந்த வருஷம் 1000-க்குதான் எடுக்க முடிந்தது. எல்லா பொருட்களின் விலையும் அசுர வேகத்தில் ஏறிக்கொண்டே போவதால் தீபாவளிக்கு தேவையான துணிமணிகள் எடுக்க முடியவில்லை''’ என்றார் தமது பொருளாதார நிலையை உணர்ந்தவராக.
ஆதம்பாக்கம் செந்தில்குமார்,’""எந்தக் கடையில் ஏறி இறங்கினாலும் துணிமணி களின் விலை எக்கச்சக்கமாக இருக்கிறது. போன வருஷத்தை விட இந்த வருஷம் 25 சதவீதம் விலை கூடுதலாக எகிறி யிருக்கிறது. ஆனா, அந்தளவுக்கு எங்க ளுடைய வருவாய் அதிகரிக்கலை. பணப்புழக்கம் ரொம்பவும் குறைஞ்சிடுச்சி. இதனால கிரடிட் கார்டுகளைத்தான் தேய்க்க வேண்டியதிருக்கு. இந்தத் தீபாவளி என்னை கடன்காரனாக மாத்தியிருக்கு''’என்கிறார் சலிப்புடன்.
கோட்டூர்புரத்திலிருந்து வந்திருந்த ராஜேஷ் தம்பதியினர், ""ஒவ்வொரு வருஷமும் தீபாவளிக்கு குடும்பத்திலுள்ள எல் லோருக்கும் துணிகள் எடுப்போம். இந்த வருசம் குழந்தைகளுக்கு எடுக்கவே திண் டாடவேண்டியிருந்தது. எதிர்பார்த்த அளவுக்கு கையில் காசு புரளாததால் தீபாவளி ட்ரஸ்களை குறைத்துவிட்டோம். எங்களைப் பொறுத்தவரை இந்தத் தீபாவளியில் ஒளி இல்லை''’என்கின்றனர் எதார்த்தமாக.
நாம் சந்தித்த மக்கள் அனைவரிடமும் இதே போன்ற ஆதங்கமே எதிரொலிக்க, ""இந்த தீபாவளியில் எங்க குழந்தைகளுக்குக் கூட துணி எடுக்க முடியலைங்க. அடுத்த வருஷம் பார்த்துக்கலாம்னு குழந்தைகளை சமாதானப்படுத்தினோம். பொங்கலின்போது இலவச வேட்டி, சேலை, பொங்கல் பரிசு தர்ற மாதிரி தீபாவளிக்கும் இலவசமான துணிமணி தந்தால்தான் நாங்களும் தீபாவளியைக் கொண்டாட முடியும்.'' என்றே பலரும் புலம்பினார்கள்.
இந்தத் தீபாவளிக்கு புத்தாடை வாங்க நினைத்த சாமானியர்களின் மனநிலை இப்படியிருக்க... பட்டாசு வாங்க வந்தவர்களின் நிலை எப்படி?
சென்னை தீவுத்திடலில் பட்டாசு வாங்க வந்த திருவொற்றியூர் முரளி-ரமாபிரபா தம்பதியினர், ""போன வருஷம் பணம் இருந்துச்சு. 3,500 ரூபாவுக்கு பட்டாசு வாங்கினோம். இந்த வருஷம் சுத்தமா பணம் இல்லைங்க. கடனா 2,000 ரூவா வாங்கியாந்தோம். ஆனா, பட்டாசோ யானை வெல; குதிரை வெல சொல்றாங்க. போன வருஷம் 3500க்கு வாங்கிய அதே பட்டாசு இன்னைக்கு 9000 சொல்றாங்க. அதனால, புள்ளைங்க ஆசைப்பட்டதை வாங்கிக் கொடுக்க முடியலை'' என்றார்கள் வருத்தப்பட்டு.
பெரம்பூர் சரவணன் மற்றும் காஞ்சிபுரம் முருகன், ""கையிலயும் பணப்புழக்கம் இல்லை. பட்டாசு விலையும் ரொம்ப ரொம்ப அதிக மாயிருக்கு. அதனால பட்டாசுக் கடையை வேடிக்கைதான் பார்க்க முடியுது. இந்தத் தீபாவளிக்கு பட்டாசு வெடிக்கலைங்க'' என்கிறார்கள் நொந்துபோனவர்களாக. நாம் சந்தித்த அனைவரிடமும் இதே வருத்தம்தான் எதிரொலித்தது. பட்டாசு வாங்க வந்தவர்களில் பெரும்பாலோர் பட்டாசுக் கடைகளை வேடிக்கைப் பார்த்துவிட்டு திரும்பினர்.
தொடர்ச்சியாய் அதிகரித்து வரும் விலைவாசியை தமிழக அரசு கட்டுப்படுத்த தவறினால் பணப்புழக்கம் மேலும் மேலும் தேய்ந்து பண்டிகை காலங்களை மக்கள் மறந்துபோகும் நிலை உருவாகும் என்பதே சாமானியர்களின் மனநிலையாக இருக்கிறது.