17 பிப்., 2014

துரைமுருகன் 5 நாள் சஸ்பெண்டு ஏன்?
சட்டசபையில் அரசு சிற்றுந்து இயக்குவது தொடர்பாக கடந்த 25–10–2013 அன்று துரை முருகன் உள்ளிட்ட தி.மு.க. உறுப்பினர்கள் சபாநாயகரின் அனுமதி இன்றி ஒரு பிரச்சினையை எழுப்ப முயன்றனர்.


சபாநாயகர் இந்த பிரச்சினை தொடர்பாக பதில் வந்ததும் எடுத்துக் கொள்ளப்படும் என்றார். அப்போது தி.மு.க.வினர் சிற்றுந்துகளின் புகைப் படங்களை காட்டி கோஷமிட்டனர்.இதனால் தி.மு.க. உறுப்பினர்கள் அவையில் இருந்து வெளியேற்றப்பட்டனர். 28–10–2013 அன்று செ.கு. தமிழரசன் சட்டசபையில் பேசியபோது, ‘‘அரசு சிற்றுந்துகளில் வரையப்பட்டுள்ள 4 இலைகள் கட்சி சின்னமல்ல’’ என்று விளக்கி பேசினார்.
இது தொடர்பாக அமைச்சர் கே.பி.முனுசாமி 29.10.2013 அன்று மு.க.ஸ்டாலின் மற்றும் துரைமுருகன் மீது உரிமை மீறல் பிரச்சினையை கொண்டு வந்தார்.
25 மற்றும் 28.10.2013 ஆகிய நாட்களில் அவையில் நடைபெற்ற நிகழ்வுகள் குறித்து மேற்கண்ட உறுப்பினர்கள் 2 பேரும் வெளியில் சென்று உண்மைக்கு புறம்பாக பேட்டி கொடுத்துள்ளனர். சாதாரண ஆள் இன்றைக்கி சமூகத்தில் அந்தஸ்து ஆக இருப்பதற்கு எம்.ஜி.ஆரை தலைவராக ஏற்று தொகுதியில் இருந்து வெற்றி பெற்றதால்தான் என்று கூறினார். இது தொடர்பாக மு.க.ஸ்டாலினும், துரைமுருகனும் சட்டசபைக்கு வெளியே 28.10.13 அன்று பேட்டி கொடுத்தபோது கேவலம் பஸ் கண்டக்டர் என்று எ.வ.வேலுவை பார்த்து அமைச்சர் கே.பி.முனுசாமி கூறியதாக தெரிவித்து இருந்தனர்.
இதற்கு தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் எ.வ.வேலு, ஜெ.அன்பழகன் ஆகியோர் அனுமதி இன்றி எழுந்து இரட்டை இலை சின்னம் பற்றி பேச முயன்றனர். அப்போது நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.பி.முனுசாமி இரட்டை இலை பற்றி பேசி எ.வ.வேலுக்கு தகுதி இல்லை. அவர் பஸ் கண்டக்டராக இருந்தவர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். கேவலம் பஸ் கண்டக்டர் என்று நான் கூறாத வார்த்தையை கூறியதாக பேட்டி கொடுத்தது உள்நோக்கம் உடையது. இப்பேரவையின் உரிமையை மீறிய செயலாக உள்ளது. எனவே நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியிருந்தார்.
இப்பிரச்சினை உரிமைக் குழு விசாரணைக்கு அனுப்பப்பட்டது. இந்த விசாரணையின் அறிக்கையை இன்று பேரவை துணைத் தலைவர் பொள்ளாச்சி ஜெயராமன் சபையில் தாக்கல் செய்தார். இதை அவை முன்னவர் ஓ.பன்னீர்செல்வம் தீர்மானமாக கொண்டு வந்தார். அதை பேரவை ஏற்றுக் கொண்டது.
பின்னர் சபாநாயகர் தனபால்,   ‘’மு.க.ஸ்டாலின் செயல் தண்டனை அளிக்க கூடிய குற்றமாக இருந்தாலும் உரிமை குழு மூலம் கடும் கண்டனம் தெரிவிப்பதுடன் இனி எதிர்காலத்தில் இவ்வாறு நடந்து கொள்ள கூடாது என்று எச்சரிக்கை விடுத்து அவையின் சார்பில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.
உறுப்பினர் துரைமுருகன் பேரவையின் சார்பாக அனுப்பிய கடிதத்தை ஏற்காமல் அவமதித்ததால் இன்று முதல் 5 நாட்கள் பேரவை பணிகளில் இருந்து தற்காலிகமாக (சஸ்பெண்டு) நீக்கப்படுகிறார்’’என்று கூறினார்.