புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

17 பிப்., 2014

  • வாடிவாசல் வழியாக சீறிவரும் காளை.
    வாடிவாசல் வழியாக சீறிவரும் காளை.

அய்யம்பட்டியில் ஜல்லிக்கட்டு: 52 பேர் காயம்

தேனி மாவட்டம், சின்னமனூர் அருகே அய்யம்பட்டியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டில் மாடுபிடி வீரர்கள் 36 பேர், பார்வையாளர்கள் 16 பேர் உள்பட 52 பேர்
காயமடைந்தனர்.
அய்யம்பட்டியில் கிராம மக்கள் சார்பில் ஏழைகாத்தம்மன் வல்லடிகாரசுவாமி கோயில் மாசி சிவராத்திரி திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு நடைபெற்றது. நிகழ்ச்சியை மாவட்ட ஆட்சியர் பழனிச்சாமி தொடங்கி வைத்தார். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெ.மகேஷ் முன்னிலை வகித்தார். அய்யம்பட்டி, பல்லவராயன்பட்டி, கோட்டூர், அரண்மணைப்புதூர், கூடலூர், மதுரை பாலமேடு, அலங்காநல்லூர் ஆகிய இடங்ளில் இருந்தும், சிவகங்கை, திண்டுக்கல், விருதுநகர், புதுக்கோட்டை, திருச்சி மாவட்டங்களில் இருந்தும், 572 காளைகள் முன் பதிவு செய்யப்பட்டிருந்தன. இதில் 552 காளைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டது. மாடுபிடி வீரர்கள் 450 பேர் களம் இறங்கினர்.
முதல் காளையாக அய்யம்பட்டி கோயில் காளை மற்றும் கன்று களத்தில் விடப்பட்டன. தொடர்ந்து, மற்ற ஊர்களில் இருந்த கொண்டு வரப்பட்ட காளைகள் ஒன்றன்பின் ஒன்றாக வாடிவாசல் வழியாக அவிழ்த்து விடப்பட்டன.
வாடிவாசலை தாண்டி சீறிப்பாய்ந்த காளைகளை மாடுபிடி வீரர்கள் மடக்கிப் பிடித்தனர். பல காளைகள் வீரர்களின் பிடியில் சிக்காமலும், வீரர்களை தூக்கி வீசி எறிந்தும், எதிர்த்து நின்றும் சிறப்பாக விளையாடின.
நீதிமன்றம் விதித்துள்ள நிபந்தனை மற்றும் வழிகாட்டுதலின்படி பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு ஏற்பாடு செய்யப்படிருந்தது.
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில், கூடுதல் காவல் துறை கண்காணிப்பாளர், 4 காவல் துணைக் கண்காணிப்பாளர்கள், 15 காவல் ஆய்வாளர்கள், 70 சார்பு-ஆய்வாளர்கள் மற்றும் 500 மேற்பட்ட காவலர்கள் இரண்டடுக்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். 20 இடங்களில் கண்காணிப்பு கேமிரா மற்றும் விடியோ பதிவு மூலம் நிகழ்ச்சிகள் கண்காணிக்கப்பட்டன.
விழாக் குழு மற்றும் விலங்குகள் நலவாரிய பிரதிநிதிகள் கண்காணித்தனர்.
52 பேர் காயம்: மாடு பிடிவீரர்கள் மதுரை ஜெகதீசன்(23), புதூர் செந்தில்(25), மஞ்சம்பட்டி மலையான்(25), உசிலம்பட்டி கார்த்திக்(22) உள்ளிட்ட 36 பேரும், பார்வையாளர்கள் 16 பேர் உள்பட மொத்தம் 52 பேர் காயமடைந்து மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டனர். காலில் காயம் ஏற்பட்ட 2 காளைகளுக்கு கால்நடை மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர்.
போட்டியில் சிறப்பாக விளையாடிய காளைகளின் உரிமையாளர்கள் மற்றும் மாடுபிடி வீரர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. தமிழ்நாடு ஜல்லிக்கட்டு வீர விளையாட்டுக் கழகத் தலைவர் ராஜசேகர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
விழா ஏற்பாடுகளை விழா கமிட்டித் தலைவர் அண்ணாத்துரை, அய்யம்பட்டி ஊராட்சித் தலைவர் கிருஷ்ணன் மற்றும் விழா கமிட்டி நிர்வாகிகள் செய்திருந்தனர்.

ad

ad