புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

17 பிப்., 2014

போர்க்குற்ற விசாரணைக்கு இலங்கை அரசாங்கம் மறுப்பது ஏன்?

அண்மையில் சென்னையில் நடந்த நிகழ்வொன்றில் பேசிய இந்திய இராணுவத்தின் முன்னாள் அதிகாரியும் இந்திய அமைதிப்படையின் புலனாய்வுத் துறைக்குப் பொறுப்பாக இருந்தவருமான கேர்ணல் ஹரிகரன் இலங்கையில் இப்போது எல்லாமே இராணுவ மயமாகி விட்டதாக குறிப்பிட்டிருந்தார்.
கேர்ணல் ஹரிகரன் இந்திய இராணுவத்தில் இருந்து ஓய்வு பெற்ற பின்னர், பிராந்திய பாதுகாப்பு விவகாரங்களில் கூடுதல் அக்கறை செலுத்தி வருகின்ற ஒருவர். அவர் இதற்கு முன்னர் இவ்வாறு கூறியதாக கேள்விப்படவில்லை.

விடுதலைப் புலிகள் வன்னிக்குள் இறுதிமூச்சு விட்டுக் கொண்டிருந்த போது கூட அரசியல் ரீதியான சிறந்த தலைமைத்துவத்தினால் தான் இலங்கை இராணுவம் புலிகளைத் தோற்கடிக்கும் நிலைக்கு முன்னேறிக் கொண்டிருப்பதாக கூறி வந்தவர் அவர்.
ஆனால் அவர் இலங்கையில் இப்போது எல்லாமே இராணுவ மயமாகி விட்டது என்று குறிப்பிட்டுள்ளதன் அர்த்தம் அரசியல் மட்டத்தில் முடிவெடுக்கும் திறன் அருகி விட்டதென்பதே ஆகும்.
எல்லா மட்டங்களிலும் வியாபித்துள்ள இராணுவ ஆதிக்கம் இராணுவப் பின்புலம் கொண்டவர்கள் அரசாங்கத்தின் மீது செலுத்துகின்ற செல்வாக்கு எல்லாத் துறைகளிலும் புகுத்தப்பட்டு விட்ட இராணுவப் பின்னணியுடையோர் என்று பல்வேறு காரணிகள் இந்த நிலைக்கு காரணமாகியுள்ளன.
போர்க்குற்றங்கள் குறித்து சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கை தமிழர்களையும், சர்வதேச மனித உரிமை அமைப்புக்களையும் தாண்டி நாடுகள் பலவற்றால் வலியுறுத்தப்படும் நிலைக்கு வந்துள்ள சூழலில் தான் கேர்ணல் ஹரிகரனின் இந்தக் கருத்து வெளியாகியுள்ளது.
இப்போதைய நிலையில் ஜெனிவா கூட்டத் தொடரில் சர்வதேச விசாரணைப் பொறிமுறை ஒன்றை உருவாக்கும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டால் அரசாங்கம் ஒத்துழைக்குமா என்பது சந்தேகம் தான் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சர்வதேசப் போர்க்குற்ற விசாரணைகளை மட்டுமன்றி நம்பகமான, நடுநிலையான உள்ளக விசாரணையைக் கூட அரசாங்கம் ஏற்றுக்  கொள்ள மறுப்பதற்கு இரண்டு காரணங்கள் உள்ளன.
அதில் ஒன்று இத்தகைய குற்றச்சாட்டுகள் தொடர்பாக சம்பந்தப்பட்ட இராணுவ அதிகாரிகளிடம் விசாரணை செய்ய முற்பட்டால் அது இராணுவத்தினர் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்திவிடும் என்பதாகும்.
தேவைக்கும் அதிகமான மிகப்பெரிய படைபலத்தைக் கொண்டுள்ள இலங்கைக்கு இதுபோன்ற கலக்கம் இருக்க வேண்டியது சரியானதே.
அண்மையில் ஜெனிவா தீர்மானத்துக்கு எதிரான பிரசாரங்களுக்காக வாசிங்டன் சென்றிருந்த போது ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் செயலாளர் லலித் வீரதுங்க ரொய்ட்டர் செய்தி நிறுவனத்துக்கு அளித்திருந்த ஒரு பேட்டியில் இந்தக் கருத்தை உறுதிப்படுத்தி இருந்தார்.
தீவிரவாதத்திலிருந்து நாட்டை விடுவித்த படையினரை நீதி விசாரணைக்கு உட்படுத்தும் போது அது நாட்டில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தும்.
அது இராணுவத்தினரின் ஒழுக்கத்தைக் குறைக்கப் போகிறது. இந்த விடயங்களை மிகவும் கவனமாக ஆலோசிக்க வேண்டும் என்று அவர் கூறியிருந்தார்.
இதிலிருந்து அரசாங்கத்தின் மனோநிலை என்னவென்று புரிந்து கொள்ளலாம்.
தீவிரவாதத்திலிருந்து நாட்டை விடுவித்த படையினர் யாராலும் கேள்விக்கிடமற்ற வகையில் மேல்நிலையில் வைக்கப்பட வேண்டியவர்கள் என்பது ஒன்று.
அவர்களை நீதி விசாரணைக்கு உட்படுத்தினால் நாட்டில் பெரும் குழப்பமும் இராணுவத்தினர் மத்தியில் ஒழுக்கக்குறைவும் ஏற்படும் என்பது இன்னொன்று. அதாவது இராணுவப் புரட்சிக்கான சூழல் ஏற்படலாம் என்பதே இதன் மறைபொருள்.
இந்த இரண்டு விடயங்களும் போர் ஒன்றின் போதான குற்றங்கள் குறித்த விசாரணைகள் அனைத்தையும் தடுத்து நிறுத்துவதற்கு வலுவான காரணங்களாக சர்வதேச சமூகத்தினால் ஏற்றுக்கொள்ளப்படாது.
அதைவிட இலங்கை ஒன்றும் இராணுவப் புரட்சி ஏற்படக்கூடிய வரலாற்றுப் பின்னணியைக் கொண்ட நாடு என்றும் கூற முடியாது.
விதிவிலக்காக 1962ம் ஆண்டு ஜனவரி 27ம் திகதி சிறிமாவோ பண்டாரநாயக்க அரசாங்கத்தை கவிழ்ப்பதற்கு நடுத்தர இராணுவ, பொலிஸ் அஇதிகாரிகள் இணைந்து ஒரு சதிப்புரட்சி முயற்சியை மேற்கொண்டனர். ஒப்பரேசன் ஹோல்ட் பாஸ்ட் என்ற சங்கேதப் பெயருடன் நடத்தப்பட்ட இந்த இராணுவப் புரட்சி குறுகிய நேரத்திற்குள் முறியடிக்கப்பட்டது.
அதற்குப் பின்னர் இராணுவம் ஆட்சிக் கவிழ்ப்புக்கு முயன்றதாகக் கூற முடியாது. ஆனாலும் 2010 ஜனாதிபதி தேர்தலின் பின்னர் முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா அத்தகைய முயற்சியில் ஈடுபட்டதாக ஒரு குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. இப்போது போர்க்குற்ற விசாரணைகளை அரசாங்கம் நிராகரிப்பதற்கு இத்தகைய இராணுவச் சதிப்புரட்சி குறித்த அச்சம் மட்டும் காரணமல்ல.
இத்தகையதொரு நடுநிலையான, நம்பகமான விசாரணைகள் முன்னெடுக்கப்படும் போது போரை அரசியல் ரீதியாக வழிநடத்தியவர்களுக்கும் பதிலளிக்க வேண்டிய கடப்பாடு உள்ளது.
குறிப்பாக முப்படைகளினதும் தலைமைத் தளபதி என்ற வகையில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவும், போருக்கான உத்தரவுகளை நேரடியாக வழங்கிய வழிநடத்திய பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்சவும் இவற்றில் முக்கியமானவர்கள்.
இந்த நாட்டின் முதல் இரு அதிகார மட்டங்களில் இருக்கும் இவர்களுக்கு எத்தகைய பாதிப்பையும் ஏற்படுத்தக்கூடிய ஒரு விசாரணைக்கு அரசாங்கம் இணங்கப் போவதில்லை.
ஆனால் இதனை வெளிப்படுத்த முடியாது என்பதால் தான் இராணுவத்தினரை விசாரணைக்கு உட்படுத்தினால் குழப்பங்கள் ஏற்படும் என்று லலித் வீரதுங்க குறிப்பிட்டிருந்தார்.
படையினரை விசாரணைக்கு உட்படுத்த முற்பட்டால் அது படையினர் மத்தியில் ஒழுக்க சீர்கேட்டை ஏற்படுத்திவிடும் என்ற கருத்தும் கூட இலங்கை இராணுவத்தை தரம் குறைத்து மதிப்பிட வைக்கும் ஒன்றாகவே உள்ளது.
அரசியல் ரீதியான நீதித்துறை சார்ந்த முடிவுகளுக்கு இராணுவம் தலை சாய்க்காது என்ற அரசாங்கத்தின் கருத்து ஏற்படக் காரணம் கேர்ணல் ஹரிகரன் குறிப்பிட்டது போன்று எல்லா மட்டங்களிலும் வியாபித்துள்ள இராணுவத்தின் செல்வாக்குத் தான்.
பாதுகாப்புச் செயலர் பதவி தொடக்கம் வெளிநாட்டுத் தூதுவர்கள், அரச நிறுவனங்களின் தலைமைப் பதவிகள், மாகாண ஆளுநர்கள், அரச அதிபர்கள் என்று பல்வேறு துறைகளிலும் இராணுவப் பின்னணி உடையவர்களின் மூலம் நிரப்பி வைத்துள்ள அரசாங்கத்துக்கு இத்தகையதொரு சந்தேகம் எழுவதில் நியாயமுள்ளது தான்.
அதேவேளை அரசியல் தலைமையும் அந்த விசாரணைக்கு முகம் கொடுக்க வேண்டிய ஏற்படும் என்ற கலக்கமும் கூட அரசாங்கம் போர்க்குற்ற விசாரணைக்கு மறுத்து வருவதில் கணிசமான பங்கு உள்ளது.
இதனால்தான் அரசாங்கம் நாட்டுக்கு சுதந்திரத்தை மீட்டுக் கொடுத்த படையினரை காட்டிக் கொடுக்கப் போவதில்லை என்று கூறிவருகின்றது.
இதன்மூலம் அரசாங்கத்தினால் மூன்று விடயங்களைச் சாதிக்க முடிகிறது. எங்கும் நீக்கமற நிறைந்து போயுள்ள இராணுவச் செல்வாக்கினால் அரசாங்கத்துக்குப் பாதிப்பு ஏற்படாமல் பார்த்துக் கொள்ள முடிகிறது.
ஒருவகையில் இது இராணுவத்தை மயக்கி கட்டிப்போட்டு வைக்கும் வித்தை. இரண்டாவது போரில் வெற்றியைப் பெற்ற படையினரை அரசாங்கம் காட்டிக் கொடுக்கவில்லை என்பதை நினைவூட்டி எப்போதும் சிங்கள தேசியவாத சக்திகளை தன் பக்கத்தில் வைத்துக் கொள்கிறது.
மூன்றாவது தேவைப்படும் போதெல்லாம் மின்சார நாற்காலியையும் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தையும் நினைவுபடுத்தி தேர்தல்களில் வெற்றியைப் பெற்று ஆட்சியைத் தக்கவைக்க முடிகிறது.
இதனால் தான் சர்வதேச அழுத்தங்கள் அரசாங்கத்தின் கழுத்தை நெரித்தாலும் கூட போர்க்குற்ற விசாரணைகளுக்கு இலங்கை அரசாங்கம் இணங்குமா? என்று கேர்ணல் ஹரிகரன் சந்தேகம் வெளியிட்டுள்ளார்.
சுபத்ரா

ad

ad